a K Vijay Anandh review
பொதுவாகவே சினிமாவுக்குள் சினிமா , சினிமா நடிகர்கள் , சினிமா ஷுட்டிங் என்று காட்டும் படங்கள் ரசிகர்களிடம் எளிதில் சென்று சேர்ந்துவிடும் .
ஓஹோ எந்தன் பேபி , அப்படிப்பட்ட ஒரு ஜனரஞ்சக ரொமாண்டிக் காதல் சினிமா , ரசிகர்கள் இதனை பெரிய வரவேற்பு கொடுத்து ஏற்றுக்கொள்வார்கள்.
ருத்ரா , ஒரு நல்ல அறிமுகம் , ஸ்கூல் பையன், காலேஜ் பையன் , அசிஸ் டெண்ட் டைரக்டர் , அப்புறம் டைரக்டர் என்று நான்கு விதமான கேட் அப்புகளில் வந்து பட்டையை கிளப்பியிருக்கிறார்.
குறிப்பாக காலேஜ் பையன் மற்றும் உதவி இயக்குநர் கதாபாத்திரங்களில் ருத்ரா , மிகவும் வசீகரமாக இருக்கிறார். நல்ல பையனாக மிஷ்கினிடம் அடக்க ஒடுக்கமாக வேலை பார்க்கும் இடங்களிலும் சரி , வெறித்தனமாக மிதிலா பார்க்கரை காதலிக்கும் இடங்களிலும் சரி ஒரு பாலிவுட் ஸ்டார் போல மிகவும் வசீகரித்தது இருக்கிறார் .
இதுவரை விஷ்ணு விஷால் நடித்திருக்கும் ஒட்டுமொத்த படங்களில் அவர் நாயகிக்கு கொடுத்திருக்கும் முத்தங்களை விட அதிகமாக தம்பி ருத்ரா ஒரே படத்தில் கொடுத்து அண்ணனையே பொறாமைப்பட வைத்திருக்கிறார்.
எந்த கதையும் செட்டாகலைன்னா, சொந்த கதையை எடுத்துவிடுவதும், பின் காதலியின் எதிர்காலம் கருதி அதனை மறுப்பதுமாக – ருத்ரா செம்மையாக நடித்திருக்கிறார்.
ஒரு நடிகராகவே வரும் விஷ்ணு விஷால் மற்றும் அவரது உதவியாளர் ரெடின் கிங்ஸ்லி சம்பந்தப்பட்ட காட்சிகள் கல கல ரகம். ரெடின் கிங்ஸ்லி கொஞ்சம் ஓவராத்தான் போறாரோ என்று சில இடங்களில் எண்ணத்தோன்றுகிறது.
மிதிலா பார்க்கர் , தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு திறமையான நடிகை கிடைத்திருக்கிறார் எனும் அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.
விஜயசாரதி – கஸ்தூரி இணை நாயகனின் பெற்றோர்களாக சிறப்பாக நடித்திருக்கின்றனர். விஜயசாரதி நிறைய சம்பாதிக்க நினைத்து தோற்றுப்போவதும் , கஸ்தூரி, கணவருக்கும் மகனுக்கும் நிறைய அன்பு கொடுத்தும் , வேலைக்குப் போய் சம்பாதித்தும் ஒரு குடும்ப கொத்தடிமையாய் இருப்பதை உணரும் தருணமும் அருமை.
கருணாகரன் , வழக்கம் போல , ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். இதில் நாயகனின் சித்தப்பாவாக , மிஷ்கினுக்கே பாடம் எடுக்கும் சுப்பையாவாக அருமையாக நடித்திருக்கிறார்.
ஓஹோ எந்தன் பேபியை , ஆஹா சொல்லவைக்கும் அற்புத பொழுது போக்கு படமாக இயக்கியிருக்கிறார் கிருஷ்ணகுமார் ராம்குமார் !