ஜென்ம நட்சத்திரம்

mysixer rating 3.5/5

172

a K. Vijay Anandh review

என்னதான் சாத்தான்கள் அவதாரம் எடுத்து வந்தாலும் , பணவெறி பிடித்த மனிதர்கள் சாத்தான்களை விட ஆபத்தானவர்கள் என்பதாக, மணிவர்மன் இந்தப்படத்தை இயக்கிய விதத்தில் இந்தப்படம் வித்தியாசப்படுகிறது.

இப்படி ஒரு கதையை இப்படி ஒரு பட்ஜெட்டில் தான் இயக்குவேன் என்று பிடிவாதமாக இருக்கும் தமன் , அவருக்கு உறுதுணையாக எழுத்தாள மனைவி மால்வி மல்ஹோத்ரா , அவரது நண்பர் மைத்ரேயா அவரது ஜோடி ரக்ஷா ஷெரின் நண்பர்கள் என்று பயணித்துக் கொண்டிருக்கும் போது , குற்றுயிரும் கொலையுயிருமாக காளிவெங்கட் 55 கோடி ரகசியத்தை சொல்லிவிட்டு செத்துப்போகிறார்.

ஒரு குழந்தையின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதாலும் , தாங்களும் செட்டிலாகிவிடலாம் என்கிற எண்ணத்துடனும் பணத்தை தேடி போகிறார்கள் . இதனை கிராஸ் டாக்கில் தெரிந்து கொண்டு முனீஷ்காந்த் மற்றும் யாசர் ஒரு பக்கம் அவர்களுக்கு முன்பே வந்து சேர புதையல் வேட்டை ஆரம்பிக்கின்றது. 10 நிமிடங்களுக்கு ஒருவர் மர்மமான முறையில் பலியாக , திகில் தொற்றிக்கொள்கிறது. அது , மால்வியின் மனதில் அவ்வப்போது வரும் பேய்களா ? தமன் அறிந்து வைத்திருந்த நரபலி சம்பந்தப்பட்ட விஷயங்களா ? என்று ரசிகர்களையும் எதிரிபார்க்க வைத்து விடுகிறார்கள்.

முதல்பாராவில் குறிப்பிட்டது போல , ஒரு பக்கம் பணப்பேய் அரசியல்வாதியாக வேல ராமூர்த்தி , நண்பர்களாகவே இருக்கும் பணப்பேய்கள் என இறுதிக்காட்சியில் ஜென்ம நட்சத்திரம் வித்தியாசப்படுகிறது.

உண்மையில் , இறுதிக்காட்சியில் தான் படமே ஆரம்பிக்கின்றது, சாத்தானின் அவதாரம் அதனை அறிந்து கொண்ட டாக்டர் தலைவாசல் விஜயை தலையை துண்டித்து கொல்லும் இடம் பயங்கரம். அதிபயங்கரங்களை அடுத்த பக்கத்தில் எதிர்பார்க்கலாம்.

பாத்ரூம் டவலை எடுக்கும் போது பேய் தோன்றுவது நிஜமாகவே பயமுறுத்தும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ். கிராபிக்ஸில் உருவாக்கப்பட்ட நாயும் மிகவும் நம்பகத்தன்மையுடன் இருக்கிறது.

சஞ்சய் மாணிக்கத்தின் இசை மற்றும் மிராக்கிள் மைக்கேல் மாஸ்டரின் சண்டைக்காட்சிகள் படத்தை விறுவிறுப்பாக கொண்டு போகின்றன.

ஜென்ம நட்ச்சத்திரம், திகில் விருந்து !