a K. Vijay Anandh review
சட்டம் தான் அடிப்படை, ஆனால், நீதி அதற்கும் மேல்… என்கிற வசனம் இன்றைக்கு பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரபலடைந்து விட்டது. அது போன்ற மிகவும் எளிமையான அதே நேரம் வலுவான சூரியபிரதாப். எஸ்ஸின் வசனங்களில் சட்டமும் நீதியும் விறுவிறுப்பான தொடராகிவிடுகிறது.
முக்கியமான நோட்டரி வக்கீல் கதாபாத்திரத்திற்கு சரவணன், அவரிடம் உதவியாளராக சேரும் துடிப்பான இளம் வழக்கறிஞர் கதாபாத்திரத்திற்கு நம்ரிதா, அரசு வக்கீலாக ஆரோல் டி சங்கர் கதையின் மையப்புள்ளியாக வரும் குப்புசாமி கதாபாத்திற்கு சண்முகம் என்று மிகச்சரியான நடிகர்களை தேர்ந்தெடுத்து 7 எபிசோடுகளும் போவதே தெரியாமல் இயக்கியிருக்கிறார் பாலாஜி செல்வராஜ்.
மிகக்குறைந்த நாட்களில் இவ்வளவு நேர்த்தியாக ஒரு நீதிமன்ற டிராமா வை எடுக்க முடியுமா என்பதற்கு ஒரு உதாரணமான படைப்பாக சட்டமும் நீதியும் ஜீ5 வில் வெளியாகியிருக்கிறது.
ஒரு ஏழ்மையான நிரபாதியை தனது வாதம் மூலம் வெளியே கொண்டு வர முடியாத நிலையில், இளம் வழக்கறிஞராக அத்துடன் தனது வக்கீல் டிரெஸை கழட்டி வைத்து விட்டு சாதாரணமாக ஒரு நோட்டரி வக்கீல் சுந்தரமூர்த்தியாக கோர்ட் வளாகத்திலேயே அமர்ந்து விடுகிறார் சரவணன். காலாவதியான சட்டப்பிரிவுகள் என்று தெரியாமலயே காலம் தள்ளிக்கொண்டிருக்கும் இளம் வக்கீல்களுக்கு சரியான ஆலோசனை கூறும் சரவணனை, இவ்வளவு திறமைகளை வைத்துக்கொண்டு கேஸ் எடுக்காமல் இருக்கக்கூடாது சார் என்று நம்ரிதா கூறியும் , சிரித்துக்கொண்டே மறுத்துவிடும் அவர், தன் கண்முன்னால் தீக்கிரையாகிப்போகும் குப்புசாமிக்காக அவரது கேஸையே எடுக்கிறார். நீதிமன்ற வளாகமும் சூடு பிடிக்க ஆரம்பித்துவிடுகிறது.
சரவணனைத் தவிர, நோட்டரி சுந்தரமூர்த்தி கதாபாத்திரத்தில் நம்மால் கூட இன்னொரு நடிகரை பொருத்திப்பார்க்க இயலவில்லை, அந்தளவிற்கு, இரண்டு வயது வந்த குழந்தைகளின் தகப்பனாக, மகனாலேயே அவமானப்படுத்தப்படும் அப்பாவாக, எல்லாவற்றுக்கும் மேல் வறுமையிலும் நேர்மையாக வாழும் வக்கீலாக பிரமாதப்படுத்திவிடுகிறார்.
அவரைத் தூண்டும் ஒரு கருவியாக வந்து, அவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட கேஸில் நியாயமான தீர்ப்பு வாங்கித்தர போராடும் துடிப்பான இளம் வழக்கறிஞராக நம்ரிதாவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஆரோல் டி சங்கர் தனது உதவியாளர்கள் புடை சூழ நீதிமன்ற வளாகத்தில் பீடு நடை போடும் பி பி யாக பட்டையை கிளப்பியிருக்கிறார்.
பெரிய பட்ஜெட் படம், பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களில் கூட ஒரே ஒரு நீதிபதியை அமர வைத்து தீர்ப்புகளை வாசித்து ஒப்பேத்தி விடுவார்கள், ஆனால் இதில் இரண்டு நிதிபதிகள் அடங்கிய அமர்வு என்பதே இந்த இணைய தொடரின் யு எஸ் பி ஆக இருக்க முடியும். அதிலும் இரண்டு நீதிபதிகளும் அடிக்கடி முணுமுணுத்துக்கொண்டே கலந்துரையாடிக்கொள்வதும் , பரஸ்பரம் அனுமதிகள் பெற்று தீர்ப்புகளை வாசிப்பதும் செம்ம! தனிப்பட்ட முறையில் நான் வியந்து ரசித்த காட்சியமைப்புகள்.
கவுன்சிலர் டேனிஷ்டன் முதல் நீதிமன்ற டீக்கடைக்காரராக வரும் பாடலாசிரியர் முத்தமிழ் வரை ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சட்டமும் நீதியும் தொடருக்கு வலுசேர்த்திருக்கிறார்கள்.
வெப் சீரிஸ் என்பது படைப்பாளிகளுக்கான உச்சக்கட்ட மேடை என்று சொன்னால் அது மிகையல்ல என்பதற்கேற்ப, கதாசிரியர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் என்று ஒவ்வொருவரும் தங்களது முழுத்திறமைகளை மிகவும் சுதந்திரமாக வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்கள்.
இயக்குநர் நீங்கலாக குறிப்பிட்டு சொல்லவேண்டிய இரண்டு தொழில் நுட்பக்கலைஞர்கள் என்றால் அது எடிட்டர் ராவணன் மற்றும் இசையமைப்பாளர் விபின் பாஸ்கர் தான். கதைக்குள் கதை, நீதிமன்ற காட்சிகள் என்று எடிட்டர் விளையாடியிருக்கிறார் என்றால், இவன் யாரோ.. என்கிற பாட;ல் வரிகளை போட்டு சரவணன் கதாபாத்திரத்தை பிராமண்ட படுத்திவிடுகிறார் இசையமைப்பாளர்.
குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம், நாயகன் சரவணன், நம்ரிதா, சக வக்கீல்கள், நீதிபதிகள், காவலர்கள் என்று யாருக்குமே மேக் அப் எதுவும் இன்றி இயல்பாக நடிக்க வைத்திருக்கிறார்கள்.., 20 வருட இடைவெளியை காட்டுவதற்கு குப்புசாமியாக நடித்தவருக்கும் அவரது மனைவிக்கும் போடப்பட்டிருக்கும் ஒப்பனைகள் தவிர.
பல கோடிகள் கொடுத்து புகழ்பெற்ற டெல்லி வழக்கறிஞர்களை வாதாடி கிரிமினல்களும் பெயில் வாங்கி வெளியே சுற்றிக்கொண்டிருக்கும் நிலையில், சாமான்ய மனிதர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும், அதுவும் பைசா செலவில்லாமல் கிடைக்க வேண்டும் என்று சொல்லும் சட்டமும் நீதியும் தொடர், பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்றால் மிகையாகாது.