House Mates

mysixer rating 4/5

119

a K. Vijay Anandh review

பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு அபசகுணங்களை சந்தித்தும், தன் பட்ஜெடிற்குள் அடங்கின அந்த பழைய வீட்டை வாங்குகிறார் தர்ஷன். சொந்தமாக ஒரு வீடு இருந்தால் தான் பொண்ணைக்குடுப்பார்கள் என்கிற நிலையில் வீடு வாங்கின கையோடு, தான் காதலித்த வீட்டு ஓனர் பெண்ணைக்கேட்டு கல்யாணம் செய்து வாங்கின புதுவீட்டில் ஹவுஸ்மேட்ஸ்களாக ரொமான்ஸ் பண்ணப்போகிறார்களா..? இரண்டாவது சீன்லயே கல்யாணம் முடிச்சுக்கிட்டு அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு என்ன சொல்லப்போறாங்க..? என்ன பண்ணப்போறாங்க..? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்படும் போதே, ஒரு இடி விழுகிறது, அட படத்தில் தாங்க!

அங்கே இருந்து கதை சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது, வாங்கின வீட்டிற்குள் அடிக்கடி அமானுஷயங்கள் நிகழ,  வீட்டிலிருந்து  அதை தினம் தினம் சந்திக்கும் மனைவி அர்ஷா சாந்தினி பைஜு, ஆபீஸுக்கு சென்றிருக்கும் கணவன் தர்ஷனுக்கு போன்போட, வழக்கம்போல அவர் அதெல்லாம் ஒன்னுமில்ல ஒன்னுமில்ல என்று மறுக்க, ஒரு கட்டத்தில் அவருக்கே அல்லுவிடும்போது, மந்திரவாதி அது இது என்று பரிகாரம் தேட, ஒரு வழியாக அது என்ன ..? என்பதை கண்டுபிடிக்கிறார்கள், அவர்களாகவே !

2012 இல் அதே பிளாட்டில் குடியிருந்த காளிவெங்கட் – வினோதினி அவர்களது குட்டிப்பையன் மாஸ்டர் ஹென்றிக் ஆகியோர் 2022 இல் இருக்கும் தர்ஷன் – அர்ஷாவிடம்  சுவர் மூலம் சாட் செய்ய ஆரம்பிக்க, முதல் பாதி அகோரப்பசியில் சாப்பிட்ட பிரியாணி மாதிரி, போனதே தெரியாமல் போய்விடுகிறது.

சரி , 2012 ல் இந்த பிளாட்டில் வசித்த காளிவெங்கட் குடும்பம் பேயா..? அல்லது 2022 இல் தந்தையை முறைத்துக்கொண்டு வந்து தர்ஷனை கல்யாணம் செஞ்சதால இவய்ங்க பேயாக ஆகப்போறாய்ங்களா..? என்கிற கேள்வியோடு இடைவேளை விடுகிறார்கள்.

ஆபிஸ்ல சீனியர் அப்துல் லீ, தியரிகளை அள்ளிவிடும்போதே, சரி இவரைச் சும்மா நடிக்கவைச்சுருக்கமாட்டாங்க என்பது புலனாகிறது. ஆம், அவர்தான், தர்ஷன் – அர்ஷா சந்திக்கும் புதிர்களுக்கான விடையையும் அளிக்கிறார்.

கோடிங் குளறுபடிபோல, 10 ஆண்டு இடைவெளியில் ஒரே  நேரத்தில் வாழும் ஒரே வீட்டில் வாழும் இரண்டு குடும்பங்கள் என்று அமர்க்களப்படுத்திவிடுகிறார்கள்.  அதற்கு அறிவியல் பூர்வமான பெயர் டெஸ்ஸராக்ட்

தர்ஷன் – அர்ஷா , இருவருமே அழகான இளம் ஜோடியாக அந்த அபார்ட்மெண்ட்டில் குடியேறியது போலவே ரசிகர்கள் மனதிலும் குடியேறிவிடுவார்கள். காளிவெங்கட் – வினோதினி இருவருமே குணச்சித்திர வேடங்களில் தனித்தனியாக கலக்குபவர்கள், இதில் இணைந்து கலக்குகிறார்கள். அந்தக்குட்டிப்பையன் கூட சிறப்பாக நடித்திருக்கிறான்.

தீனாவுக்கு , காமெடி செய்ய பெரிய ஸ்பேஸ் இல்லையென்றாலும், ஒரு நண்பனாக வழக்கம்போல, எல்லா தமிழ் சினிமாக்களிலும் நாயகனுக்கு செய்யும் கடமைகளை நிறைவாக செய்துவிடுகிறார்.

கலப்பாக நகரும் முதல்பாதி, எமோஷனலான இரண்டாம் பாதி என்று ஹவுஸ்மேட்டில் புதுவிருந்து படைத்துவிடுகிறார் இயக்குநர் டி. ராஜவேல்.

உண்மையில், கலை இயக்குநர் என் கே ராகுல்,  ஒளிப்பதிவாளர் எம் எஸ் சதிஷ் மற்றும் எடிட்டர் ஏ.நிஷார் ஷரேஃப் ஆகியோருக்கு இந்தக்கதைகளம் நிஜமாகவே சவாலான ஒன்றுதான்.  இயக்குநர் டி ராஜவேலின் கற்பனையை எந்தவிதமான சமரசமும் இன்றி காட்சிகளாக கோர்த்திருக்கிறார்கள். ராஜேஷ் முருகேசனின் இசையும் பக்கபலமாக அமைந்திருக்கிறது.

This House Mates will  surely become soulmates to audience !