a K. Vijay Anandh review
எம் எஸ் பாஸ்கர் இன்று துணை நடிகருக்காக தேசிய விருது வாங்கிவிட்டார். இது, அவர் காமெடி செய்துகொண்டிருந்தபோது எடுத்தபடம். ஆனாலும், அமலா பால் நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற கடாவர் படத்தின் முன்னோடி. காலகாலத்தில் வெளியாகியிருந்தால் இதுவே ஒரு ரெபரன்ஸ்படமாக ஆகியிருக்கக்கூடும்.
சாலை வசதியே இல்லாத மலைக்கிராமத்திலிருந்து பள்ளியில் மாநில அளவில் சிறந்த மதிப்பெண் வாங்கி, மெரிட்டில் மருத்துவம் படிக்க வருகிறார் சுவாசிகா. அந்த மருத்துவக்கல்லூரி பிணவறையில் ஒரு அசிங்கம் அரங்கேறுகிறது. டீனிடம் சொல்லலாம் என்கிற நிலையில், சம்பந்தப்பட்டவர்களால் கொலைசெய்யப்படுகிறாள். அண்ணன், நபி நந்தி, வில்லன்களை கருவறுக்கிறார்.
பிளாஷ்பேக்கில் கதை சொல்லப்படுகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணன் – தங்கை பாசப்பிணைப்பை சொல்லும் அற்புதமான கதைக்கரு. அண்ணனாக நடித்திருக்கும் நாயகன் நபி நந்தி, கச்சிதமாக நடித்திருக்கிறார். எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாமல், ஏன் சிறுவயதிலிருந்து தன்னை காதலிக்கும் பூனம் கவுரிடம் கூடமகிழ்ச்சியாக இருக்கமுடியாமல், இறுக்காமகவே பிற்பாதியில் வந்தாலும், பிளாஷ்பேக் காட்சிகளில் மிகவும் இயல்பாக நடித்து அசத்திவிடுகிறார்.
சுவாசிகா, பூனம் கவுர் ஆகியோரும் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
வேள்பாரி என்கிற காவல்துறை அதிகாரியாக வேல ராமூர்த்தி கம்பீரமாக நடித்திருக்கிறார்.
இயக்குநர் விஜய்சேகரன் எஸ் கொஞ்சம் அட்வான்ஸாகவே இன்று நடக்கும் சோஷியல் மீடியா கிரைம் பற்றி சிந்தித்து அதிலும் குறிப்பாக பெண்களின் பிணத்தை போட்டோ எடுத்து ஆபாச வலைத்தளங்களுக்கு விற்று காசுபார்க்கும் சர்வதேச மாஃபியாக்களை தோலுரித்திருக்கின்றார்.
என்றாலும், இந்த நெட்வொர்க் அபாயகரமானது என்பதாக முடித்திருக்கிறார்கள்.
போகி, தீமைகளை கொளுத்தும் திரைவிருந்து !