a K Vijay Anandh review
கேரள மாநிலம் கம்யூனிஸ சித்தாந்த விதையை ஊன்றிய மாமனிதர் | பி கிருஷ்ணன் பிள்ளை ஐ பற்றிய ஒரு வாழ்க்கை குறிப்பு என்று சொல்ல முடியாது என்றாலும், அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கியமான பகுதியை அழகாக காட்டியிருக்கிறார்கள்.
அவருடன் இடலாக்குடி சிறையில் இருந்த வேலாயுதம் என்பவரின் பேரன் பரத். அந்த ஊரில், செல்வாக்கு மிக்க ஒரு இளம் அரசியல்வாதி. அனைவரும் சமம் என்கிற சமூக நீதி கோட்பாட்டில் உறுதியாக நிற்கும் பரத், அந்தப் பகுதியில் மிகப்பெரிய செல்வந்தரும் கூட. அவரது மகள், அவர்களை விட தாழ்ந்த ஜாதி என்று கருதப்படும் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையனை காதலிக்க, அவனுக்கு அதனை வெளியே சொல்வதற்கு தைரியம் இல்லாமல் போக, இவற்றையெல்லாம் அறிந்த பரத், அடக்குமுறைகளுக்கு அஞ்சக் கூடாது தாழ்வு மனப்பான்மைகள் கூடாது என்பதை இன்றைய தலைமுறைக்கும் அந்த ஊர்க்காரர்களுக்கும் புரிய வைக்கும் விதமாக, அவரது தாத்தாவுடன் சிறையில் இருந்த பி. கிருஷ்ணன் பிள்ளை அவர்களைப் பற்றிய கதையை பி கிருஷ்ணன் பிள்ளையுடன் பயணித்த ஒருவரின் வாயிலாக மற்றவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறார்.
பி கிருஷ்ணன் பிள்ளையுடன் பயணித்த அந்த தோழர் பாட்டி இன்னும் தனது 97வது வயதில், ஆரோக்கியமாக இருப்பதும் நேரடியாக இந்த திரைப்படம் திரையிட்ட பிறகு வந்து அனைவரிடமும் கலந்துரையாடியதும் நெகிழ்ச்சியான தருணங்கள்.
அந்தமான் சிறைக்கு சற்றும் குறைவில்லாத ஒரு பயங்கரமான சிறையாக 1940 காலத்தில் கருதப்பட்ட இடலாக்குடி சிறையில் இருந்து கதை விரிகிறது.
தமிழும் மலையாளமும் அந்த சிறைக்காவலர்களுக்கு புரிந்துவிடும் என்பதால் அவர்களுக்கு தெரியாத ஹிந்தியில் வெளியே இருக்கும் தோழர்களுக்கு தகவல் அனுப்பும் பொருட்டு, சிறையில் அவர் மீது மரியாதை வைத்திருக்கும் காவலர் ஒருவரின் உதவியோடு ஹிந்தி புத்தகங்களை பெற்று படித்து அந்த புத்தகத்தின் உரிமையாளருக்கு சில தகவல்களை அனுப்புகிறார்.
சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தின் பூசாரியின் மகளான அவரும் பி கிருஷ்ணன் பிள்ளையின் நோக்கத்தை புரிந்து கொண்டு அவரது போராட்டத்தில் பங்கு கொள்கிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் அந்த காதல் அழகு.
சிறையில் இருந்து வெளிவரும் பி கிருஷ்ணன் பிள்ளை நேராக சுதந்திரம் தாணுமாலயன், பழைய பூசாரி வீட்டிற்கு சென்று பெண் கேட்பது அந்த காலகட்டத்தில், மிகவும் புரட்சிகரமான செயலாகவே இருந்திருக்க வேண்டும் அது படத்தின் சுவாரசியத்தையும் கூட்டுகிறது.
இருவரும் கரம் பிடிக்கிறார்கள், சேர்ந்தே களம் காண்கிறார்கள், கேரளாவின் பல பகுதிகளிலும் பிரிட்டிஷ் க்கு அடிமைகளாக இருந்து கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஜமீன்தார்கள் எப்படி அவர்களது நிலங்களில் வேலை செய்யும் அப்பாவி மக்களை கொடுமைப்படுத்துகிறார்கள், அவர்கள் வீட்டுப் பெண்களை எந்தவிதமான தடையும் இன்றி அனுபவிக்கின்றார்கள் சின்னாபின்னாக்குகிறார்கள் என்பதை அறியும் பொழுது நிஜமாகவே மனம் பதைப்பதைக்கின்றது.
அப்படி அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் இடங்களுக்கெல்லாம், தனது ஆட்களை அனுப்பி அல்லது தானே மாறுவேடங்களிலோ அல்லது நிஜ அடையாளத்துடனோ சென்று மக்களோடு மக்களாக பழகி அவர்களது அன்பை பெற்று அவர்களுக்குள் இருக்கும் சுதந்திர கனலை மூட்டி ஏகாதிபத்தியத்தை ஒழிப்பது தான் பி கிருஷ்ணன் பிள்ளையின் முழு நேர வேலையாக இருந்திருக்கிறது.
பல காவல் துறை உயர் அதிகாரிகளே அவர் மீது மதிப்பும் மரியாதையுடனும் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவரது தூய்மையான போராட்ட குணத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்றால் மிகை ஆகாது.
சக தோழர்களுடன் மேடையில் அவர் ஆற்றும், எழுச்சி உரைகள் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மிகவும் அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கின்றன.
முற்றிலும் பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த பரந்து பிரிந்த பாரதத்தில் காங்கிரஸ் மட்டுமே கோலோச்சி கொண்டிருந்த நிலையில், அது பெரும்பாலும் சுதந்திரப் போராட்ட களத்திலேயே களமாடிக் கொண்டிருந்ததால், ஜமீன்தார்கள் போன்றவர்களின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த சாதாரண மக்களை மீட்டெடுப்பதற்கான ஒரு இயக்கம் தோன்ற வேண்டி எது அன்றைய காலத்தின் கட்டாயம்.
அது கம்யூனிசம், அன்றைய காலகட்டத்தில் முதலாளித்துவத்திற்கு அடிமைப்பட்டு கிடந்த மக்களை மீட்பதும் அவர்களது நியாயமான உரிமைகளை பெற்றுத் தருவதும் கம்யூனிசத்தின் பிரதான கடமையாக இருந்திருக்கிறது.
அந்த கம்யூனிசம், அன்றைய காலகட்டத்தில் நிஜமான தேவையாகவும் இருந்திருக்கிறது.
பி கிருஷ்ணன் பிள்ளை மற்றும் அவருடன் வரும் தலைவர்களை பார்க்கும்பொழுது மிகவும் பிரமிப்பாகவும் மரியாதை கலந்த ஒரு பார்வையுடனும் பார்க்க தோன்றுகிறது.
இன்றைய கம்யூனிசம், முழுக்க முழுக்க சந்தர்ப்பவாத இயக்கமாக மாறிப்போனது துரதிஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்தப் படத்தை வெகுஜனம் மட்டுமல்ல கம்யூனிச கட்சிகளை சேர்ந்தவர்களே கட்டாயம் பார்க்க வேண்டும்.
பி கிருஷ்ணன் பிள்ளையாக சமுத்திரக்கனி கேட்கவே வேண்டாம் நிஜமாகவே வாழ்ந்திருக்கிறார். கடுகு படத்திற்குப் பிறகு பரத் ஏற்றிருக்கும் மிகவும் வித்தியாசமான வேடம், குறைந்த நேரமே வந்தாலும் ஒரு கம்பீரமாக வந்து செல்கிறார்.
பரணி நடித்திருக்கிறார், அந்த காலகட்ட ஆண்களையும் பெண்களையும் மிகவும் அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
இயக்குனர் அணில் வி நாகேந்திரனுக்கு பாராட்டுக்கள்.