உருட்டு உருட்டு

mysixer rating 3/5

220

a K Vijay Anandh review

முதல் பாதி முழுவதும் ஹீரோ நண்பர்களுடனும்,  அவரது எதிர் கோஷ்டி ஒரு பக்கமும் சரக்கு பாட்டில்களோடு உருட்டு உருட்டு என்று உருட்டுகிறார்கள்.

நாயகியின் அப்பாவோ அப்பாவி மக்களை விரட்டு விரட்டு என்று விரட்டி அவர்களது நிலங்களை பறிக்கிறார்.

நாட்டு வைத்தியராக வரும் மொட்டை ராஜேந்திரனோ மூன்று மனைவிகளையும் புரட்டோ புரட்டு என்று புரட்டுகிறார்.

கிளைமாக்ஸ் இல், இவன் ஒரு குடிகாரன் குடிக்கு அடிமையானவன் இவன் குடும்பத்திற்கோ அல்லது வாழ்க்கைக்கு லாயக்கல்லாதவன் என்று முடிவு செய்து நாயகி, நாயகனை கொளுத்து கொளுத்து என்று கொளுத்துகிறார்.

80 கள் 90 களில் வந்த ஒரு காமெடி கலாட்டா வில்லத்தனம் நிறைந்த ஒரு பொழுதுபோக்கு படத்தை பார்ப்பது போன்ற ஒரு உணர்வை உருட்டு உருட்டு கொடுக்கிறது.

மதுவிற்கு அடிமையாகி செத்துப்போகும் ஆண்களால் பல பெண்கள் விதவையாவது ஒரு பக்கம் , குடிக்கு அடிமையான கணவர்களை வைத்துவிட்டு வாழ வெட்டியாய் வாழ்க்கையில் கணவன் உயிரோடு இருந்தும் விதவையாக நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பெண்கள் இன்னொரு பக்கம்.

மொத்தத்தில், இந்த குடிகார ஆண்களை கொளுத்துவதே மேல் என்று முடிவு செய்து, அவள் பங்கிற்கு அவள் காதலிக்கும் ஒருவனையே கொளுத்தி விடுகிறாள்.

குடியால் ஏற்படும் தீமைகளை இதைவிட வலிமையாக இதுவரை யாரும் சொல்லி விடவில்லை. ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து இப்படி ஒரு உணர்ச்சிபூர்வமான கிளைமாக்சை கொடுத்திருக்கும்,  இயக்குனர் பாஸ்கர் சதாசிவத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கதாநாயகன் கஜேஷ் நாகேஷ், நாகேஷும் ஆனந்த் பாபுவும் சிறந்த கலவையாக இருக்கிறார். நடிப்பிலும் அவர்கள் இருவரும் தொடாத விஷயங்களை தொட்டு மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்.

துணிச்சலான கிராமத்து பெண்ணாக வரும் ரித்விகா ஸ்ரேயா , கிளைமாக்ஸ் வீரமங்கையாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

டபுள் டாக்குமெண்ட் தங்கராஜ் சமகால அரசியல்வாதிகள் பலரை நினைவுபடுத்துகிறார். அவர்களை நில அபகரிப்பாளர்கள் என்று கூட இன்றைய அரசாங்கம் கூச்சப்படுகிறது. மாறாக அவர்களுக்கு பிறன் மனை விரும்பிகள், என்று பொதுவான ஒரு பெயரை வைத்து அழகு பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பிறரது மனைவியரையும் விரும்புவார்கள் , பிறரது நிலங்களையும் ஆட்டையை போடுவார்கள்.

அருணகிரியின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன.

நிச்சயமாக இந்த படம் சி சென்டர் ஆடியன்ஸ்களை குஷிப்படுத்தும் !

உருட்டு உருட்டு படத்திற்கு கிளம்பு கிளம்பு என்று சி சென்டர் ரசிகர்கள் படை எடுக்கலாம் !