a K Vijay Anandh review
ஜிவி பிரகாஷ், சித்தார்த்துடன் நடித்து ஒரு படம் ஹிட் கொடுத்தார். ஸ்ரீகாந்த் உடன் நடித்து ஹிட் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்.
குழந்தையை கடத்த திட்டமிட்டு அதை வைத்து பிளாக் மெயில் செய்ய ஆரம்பித்து, அடுத்தடுத்து பிளாக்மெயில்கள் தொடர்ந்து இறுதியில் உச்சகட்ட பிளாக்மெயிலை யார் செய்கிறார்கள் என்பது வரையிலான ஒரு பரபரப்பான திரைக்கதை தான் இந்த படம்.
என்னதான் விறுவிறுப்பான திரைக்கதை என்றாலும், கிங்ஸ்டனுக்கு பிறகு ஜிவி பிரகாஷ் இடமிருந்து அவரது ரசிகர்களை இப்படி ஒரு சாதாரண மற்றும் பழைய கதை கொண்ட படத்தை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
இங்கே நல்லவர்களுக்கு காலமில்லை… ஏய்த்து பிழைப்பவர்களுக்கு தான் காலம் …என்கிற ஜிவி பிரகாஷ் குமாரின் வாய்ஸ் ஓவரில் ஆரம்பிக்கும் படம், அவரை அதற்கு முற்றிலும் எதிரானவராக அதாவது மிகவும் நல்லவராக காட்டி முடித்திருப்பது, இயக்குநர் மு மாறனின் ஒரு வித்தியாசமான கதை சொல்லல்தான். ரசிகர்கள் மத்தியில் ஜிவி பிரகாஷ் பற்றிய எதிர்மறையான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு மிகவும் நேர்மையான ஜி வி பிரகாஷ் ஆக முடித்திருப்பது பாராட்டுக்குரியதுதான்.
அத்தனை வருடம் வேலை செய்யும் ஜிவி பிரகாஷ், தெரியாமல் செய்த தவறுக்காக முத்துக்குமாரால் தண்டிக்கப்படுவதும் எதுவும் தெரியாத அவரது காதலியை சிறை பிடித்து விபச்சார விடுதிக்கு விற்று விடுவேன் என்று பேசுவதும் அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. ஓரிரு நாட்கள் கூட நேரம் கொடுக்காமல், நாயகியை விபச்சாரி ஆக்கி சம்பாதிக்க நினைத்து முதல் நாளிலேயே தேஜு அஸ்வினி அறைக்கு ஒரு ஆளை அனுப்பி, தொழிலுக்கு புதுசா சாஃப்ட்டா ஹேண்டில் பண்றேன் என்று சொல்ல வைப்பதெல்லாம் மிக மிக சிறு பிள்ளைத்தனமான காட்சி அமைப்பு.
பிந்து மாதவியின் முன்னாள் காதலனாக லிங்கா ஒரு பக்கம் அவர்கள் பழகிய வீடியோக்களை வைத்துக் கொண்டு பிளாக்மெயில் செய்வதிலும் பெரிய புதுமைகள் எதுவும் இல்லை.
ஜிவி பிரகாஷ் ஒரு பக்கம், தவறான வழியில் கிடைக்கும் எதற்க்கும் ஆசைப்படாத நல்லவராக இருக்கிறார் என்றால், மனைவியின் முன்னாள் வாழ்க்கையை பொருட்படுத்தாமல் அது தனக்கு தெரிந்தாக காட்டிக்கொள்ளாமலேயே, லிங்காவை பழி வாங்கும் ஸ்ரீகாந்த்தும் நல்லவராகவே இருக்கிறார்.
ஒரு பக்கம் இசையமைப்பாளருக்காக தேசிய விருது, இன்னொரு பக்கம் கிங்ஸ்டன் போன்ற பேண்டஸி படங்களின் வெற்றி என்று கியரை மாற்றி வேகம் எடுத்திருக்கும் ஜிவி பிரகாஷ் குமார், அடுத்தடுத்த படங்களுக்கான கதைகளை மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.