படையாண்ட மாவீரா

mysixer rating 4/5

225

a K. Vijay Anandh review

ஒரு இனத்தையும் மக்களையும் அவர்கள் வாழும் நிலத்தையும் பாதுகாக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள், நீதிமன்றம்,  காவல்துறை உள்ளிட்ட அரசு துறைகள் ஆகிய இருந்தாலும், ஒட்டுமொத்த அரசு இயந்திரங்களுக்கு இணையாக மக்களோடு மக்களாக நிற்கும் ஒரு தலைவன் நிச்சயம் வேண்டும்.

ஆட்சியாளர்களை அணுகுவதற்கு 1008 புரோட்டோகால் இருக்கும். அரசு இயந்திரங்கள்  அரசு விடுமுறை நாட்களில் .அணுக முடியாதவைகளாக இருக்கும் அல்லது உடனடி தீர்வுகளை தர இயலாத இடத்தில் இருப்பார்கள், அவர்களிடம் கொண்டு செல்ல முடியாத அளவிற்கு அணுக முடியாத பிரச்சினைகளும் இருக்கும்.

அப்படிப்பட்ட எந்த விதமான தயக்கங்களும் தடைகளும் இன்றி எளிதில் அணுகி,  எந்த நேரத்திலும் அணுகி தங்களது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு அப்படிப்பட்ட தலைவர்கள் வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

துரதிஷ்டவசமாக, தமிழர்களுக்கு தமிழ் நிலங்களுக்கோ தமிழ் கலாச்சாரங்களுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள், ஒட்டுமொத்த தமிழ் ச்சமூகங்களுக்கான தலைவன் என்கிற அடையாளத்துடன் நம் மீது திணிக்கப்படுகிறார்கள்.

மேலும் துரதிஷ்டவசமாக, தமிழர்களின் பிரதிநிதியாய் ஒட்டுமொத்த மக்களுக்காக போராடிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் , வ உ சிதம்பரம் பிள்ளை போன்ற தலைவர்கள் சாதித்தலைவர்களாக முத்திரை குத்தப்பட்டு மற்ற சமூகங்களில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள்.

சாதியோ,  சாதிப் பெயர்களோ, சாதிப்பாரோ சமூக நல்லிணக்கத்திற்கு எதிரானவைகளை அல்ல!  ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த சாதிகளை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்! ஏனென்றால் அவரவர்களுக்கு என்று நீண்ட நெடிய பாரம்பரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன!

சாதிய அடையாளங்களை அழிக்க வேண்டும் என்கிற பொய் முழக்கத்தில் சிக்கி சில சாதிகள் மீது வன்மங்கள் திருப்பி விடப்படுகின்றன, சில சாதிகள் மீது தேவையில்லாத பரிதாபங்கள் விழ வைக்கப்படுகின்றன.

எந்த சாதியின் மீதும் வன்மங்களும் வேண்டாம், எந்த சாதியின் மீதும் பரிதாபங்களும் வேண்டாம், மனிதர்களை மனிதர்களாக , இந்த மண்ணையும் சக மனிதர்களையும் காக்கும் போராளிகளாக பார்க்க ஆரம்பித்து விட்டாலே போதுமானது.

அப்படி ஒரு போராளியாக வாழ்ந்து மறைந்த, குறிப்பாக ஆட்சி அதிகாரங்களில் பெரிய இடங்களை பிடிக்காவிட்டாலும், தான் சார்ந்த சமூகத்து மக்களுக்கு மட்டுமல்லாது தன்னை நம்பி வந்த அத்தனை சமூக மக்களுக்குமான தலைவனாக வாழ்ந்த காடுவெட்டி குருவை பற்றிய படமாக படையாண்ட மாவீரா படம் வெளியாகி இருக்கிறது.

2 மணி நேரம் 35 நிமிடங்களுக்கு ஒரு விறுவிறுப்பான திரைக்கதையுடன் இந்த படத்தை இயக்கி காடுவெட்டி குருவாக நடித்தும் இருக்கிறார் வா கௌதமன்.

தனது அப்பாவை கொன்றவனை பழிவாங்காமல் இருப்பது தமிழ்க்குடிக்கு அழகல்ல, அவனது தெய்வங்களும் ஆயுதங்களுடனும் வீரங்களுடனும் வீற்றிருக்கக் கூடியவை. பாவிகளை மன்னித்து அருளும் என்று சிலுவையில் தொங்கும் சாமியும் இல்லை, தனது சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை எதிரிகளாக பாவித்து கொல்லச் சொல்லும் சாமிகளும் அல்ல அவர்கள் .

என் ஆயுதத்தை எடுத்து உன் தந்தையை கொன்றவனை அதே ஆயுதத்தால் நீ கொல் என்கிற தர்மத்தை போதிப்பவை நமது சாமிகள்!

அந்த வகையில், தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காக குரல் எழுப்பிய தனது தந்தையை சூழ்ச்சியால் கொன்றவனை அதே இடத்தில் அதே ஆயுதத்தால் கொன்று , ஒரு போராளியாக உருவாகிறார் காடுவெட்டி குரு.

அது முதல், யாருக்காக அவரது தந்தை உயிரை விட்டாரோ அந்த இனத்து மக்களின் பிரதிநிதியாக மன்சூர் அலிகான் ரெடின் கிங்ஸ்லி யும் சிறுவயது முதல் காடுவெட்டி குருவுடன் இணைந்தே வளர ஆரம்பிக்கிறார்கள்.

சொல்லப்போனால், எந்த சமூகத்தின் எதிரியாக காடுவெட்டி குரு சித்தரிக்கப்படுகிறாரோ அதே சமூகத்தை சேர்ந்தவராக மன்சூர் அலிகான் அவரது தளபதி போல உடன் இருக்கிறார்.

ஒரு திரைப்படம் என்கிற பார்வையில் உற்று நோக்கினால் ரெடின் கிங்ஸ்லி இந்த படத்தில் மிகவும் சரியாக கையாளப்பட்டிருக்கிறார். அவரது வழக்கமான நகைச்சுவைகள் இன்றி ஒரு குணசித்திர நடிகர் சிறப்பாக நடித்திருக்கிறார்.

சிறு வயது காடுவெட்டி குருவாக வரும் தமிழ் கௌதமன், நல்ல தேர்வு நன்றாக நடத்திருக்கிறார்.

காடுவெட்டி குருவின் தந்தையாக நடித்திருக்கும் சமுத்திரகனி மற்றும் சரண்யா பொன்வண்ணன் மிகச் சரியான தேர்வு. குறிப்பாக நீண்ட இடைவேளைக்கு பிறகு சரண்யா பொன்வண்ணனுக்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு, வழக்கம்போல சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

காடுவெட்டி குருவின் மக்களுக்கான மண்ணிற்கான போராட்டம் என்பது கற்பனைகள் இன்றி நிஜமாக நடந்திருப்பது, அதனை அப்படியே படமாக்கிய விதத்தில், இயக்குனராக வா கௌதமன் பாராட்டு பெறுகிறார்.

காடுவெட்டி குருவின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் வா கௌதமன் ஒரு நடிகராகவும், இன்னும் சொல்லப்போனால் நாம் இழந்துவிட்ட கேப்டன் விஜயகாந்தின் ஒரு மினியேச்சர் வெர்ஷன் ஆக படம் முழுவதும்  கண்ணியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தனது வாழ்க்கை முழுவதையும் தான் சார்ந்த தன்னை நம்பிய மக்களுக்காகவே வாழ்ந்து விட்டு ,தனது கடைசி காலங்களில் தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாமல், அதற்கான வசதிகள் இல்லாமல் செத்துப் போவதே ஒரு நல்ல தலைவனுக்கு தகுதியாக கடந்த நூற்றாண்டு நமக்கு பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது.

அந்த வரிசையில் காடுவெட்டி குருவும் இடம் பெற்று இருக்கிறார்.

மண்ணைக் காக்காமல்,  மக்கள் இல்லை.

மக்கள் இல்லாமல் சமூகங்கள் இல்லை!

படையாண்ட மாவீரா, அனைத்து சமூகங்களுக்குமான தலைவன்.