a K. Vijay Anandh review
காந்தாரா தொடரில் இன்னும் ஒரு படம் வந்துவிடடால் போதும் , படம் பார்க்கும் அத்தனை பேரும் சிவகணங்கள் ஆகிவிடுவது உறுதி. அந்தளவுக்கு , ஒரு ஆன்மீக உணர்வை ஒவ்வொரு காட்சியிலும் கொட்டி படத்தை எடுத்திருக்கிறார்கள்.
பக்தி கலந்த படங்களை கொடுப்பதில் 30 வருடங்களுக்கு முன்னர் படைப்பாளிகள் பயன்படுத்திய சூத்திரங்களை முழுவதுமாக புறந்தள்ளிவிட்டு இன்றைய தலைமுறையினர் ஏற்றுக்கொள்ளும் படியான வணிக மசாலா தடவி , அதே நேரம் , மையக்கருவுக்கு எந்த நேரத்திலும் பங்கம் வந்து விடாதபடி , அதன் கண்ணியம் குறைந்துவிடாத படி நேர்த்தியாக கொடுத்திருக்கிறார்கள்.
முதல்பாதி , குறிப்பாக தேர் மற்றும் குதிரை சம்பந்தப்பட்ட காட்சிகள் , பழைய ஜாக்கிசான் படங்களை போல , விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் இருக்கின்றன. சிம்புதேவனின் இயக்கத்தில் வெளியான 23 ஆம் படத்தில் வரும் , உருப்படாத புலிகேசி அரசன் , அவனது அரைகுறை கொல்லர் மனோபாலா சம்பந்தப்பட்ட காட்சிகள் இதிலும் இடம் பிடித்திருக்கின்றன.
முதல் பாதியில் போடும் முடிச்சுக்களை , இரண்டாவது பாதியில் அதிரடியாக அவிழ்ப்பது படத்தை கண் சிமிட்டாமல் பார்க்க வைத்திருக்கின்றன.
சுயம்பு லிங்கம் போல சுயம்புவாக தோன்றிய பெர்மெ ஆக ரிஷப் ஷெட்டி , பார்வதியால் அமைக்கப்பட்ட சிவனின் பூந்தோட்டம் அடங்கிய கட்டுக்கள் காந்தார எனும் இடத்தில் தங்களது குல மக்களோடு வாழ்ந்துவருகிறார் . அடர்ந்த காட்டில் , அவர்களுக்கு கிடைக்கும் தானியங்கள் வலுக்கட்டாயமாக 3 பங்கு வைக்கப்பட்டு , பிரம்மா ராட்சதர் என்கிற பயமுறுத்தலோடு , அவை பக்கத்து நாட்டில் கொள்ளை லாபத்திற்கு விற்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் , அங்கே வசிக்கும் அப்பாவி மக்களையும் அடிமைகளாக பிடித்துச் சென்று , அந்த நாட்டில் நடைபெறும் ஆலய கட்டுமான வேலைகளுக்கு பயன் படுத்தப்படுகிறார்கள்.
நாயகனுக்கு , அவரது மக்களின் உழைப்பு வீணாக்கக்கூடாது , மர்மங்கள் அவிழ்க்கப்படவேண்டும் , சிவனின் பூந்தோட்டத்திற்கு ஊறு விளைவித்த அரசனின் வாரிசுகளை பழிவாங்க வேண்டும் , அடிமைப்படுத்தப்பட்டு கிடைக்கும் மக்களை விடுவிக்க வேண்டும் ஆகியவையே லட்சியம் , அதனை சிறப்பாக செய்து முடிக்கிறார்.
பக்கத்து நாட்டு இளவரசியாக வரும் ருக்மணி வசந்த் , நெருங்கி நெருங்கி வந்தாலும் ரிஷப் ஷெட்டி விலகி விலகி போவதின் மர்மம் இறுதிக்காட்சியில் விலகுகிறது, விலகும் இடங்களில் தீப்பொறி பறக்கிறது .
காந்தாரா முதல் பாகத்தை போன்றே குலிகா கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகள், மெய்சிலிர்க்க வைக்கும் ரகம்.
என்னதான் பல நூறு வருடங்களுக்கு முற்பட்ட நிகழ்வுகளாக திரைக்கதை நகர்ந்தாலும் , சமகால அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளை அப்படியே ஒத்துப்போவது மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது .
நாயகனின் பாதுகாவலனாக வரும், புலி சம்பந்தப்பட்ட காட்சிகள் அருமை.
ரிஷப் ஷெட்டி , ஜெயராம் , ருக்மணி வசந்த் , குல்ஷன் தேவப்பா உள்ளிட்ட அத்தனை நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்தியா மட்டுமல்ல சர்வதேச ரசிகர்களும் கொண்டாடும் இப்படி ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படத்தில் தமிழ் சினிமாவின் பிரதிநிதியாய் , சம்பத் ராம் , ஆதிவாசிகளின் தலைவனாக மிகவும் கடினமான ஒப்பனைகளுடன் நடித்து அசத்தியிருக்கிறார்.
ஆடைஅலங்காரஇயக்குநர், பிரகதிஷெட்டி மற்றும் ஆர்ட்டைரக்டர் தரணிகங்கேபுத்திரா ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஸ்டண்ட்அமைப்பாளர்கள் அர்ஜுன்ராஜ், டோடார்லாசரோவ் (ஜூஜி), ராம் – லக்ஷ்மண், மகேஷ்மாத்யூ, மிதுன்சிங்ராஜ்புத் மற்றும் நடனஅமைப்பாளர்கள் :புஷன், ஸ்வராஜ்ஷெட்டி ஆகியோர் தீயாய் வேலை செய்திருக்கிறார்கள்.
ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து அனிருத்மகேஷ், ஷானில்கவுதம் ஆகியோர் வன்சங்களை மிகவும் அளவாக ஆழமாக எழுதியிருக்கிறார்கள்.
தமிழ் ரசிகர்களுக்காக வசனங்களை தமிழ்ப்படுத்தியிருக்கும் சபரி மற்றும் கீர்த்தி , குலிகா சம்பந்தப்பட்ட வசனங்களை மற்றும் சில பாடல் வரிகளை அதன் ஆன்மா சிதைந்துவிடாத வண்ணம் ஒரிஜினல் மொழியான கன்னடத்திலேயே விட்டுவிடுவது கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கிறது. தமிழர்கள் , மொழி பாரபட்சம் , துவேசம் ஆகியவற்றிற்கு எப்பொழுதுமே எதிரானவர்கள் என்பதற்கு இப்படி இவர்கள் பணியாற்றியிருப்பது ஒரு சான்று என்றால் மிகையாகாது.
நூற்றுக்கணக்கான நடிகர்கள், அடர்ந்த காடுகள் , சமதளமில்லாத கதைக்களம் என்று இந்தப்படத்தில் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்களின் உழைப்பு அபரிதமாக கொட்டப்பட்டிருக்கிறது.
அந்த ஆத்மார்த்தமான உழைப்புக்கு , ஆயிரம் கோடிகள் , என்பது மிகவும் குறைவானதே!
காந்தாரா சேப்டர் 1 , இந்திய சினிமாவின் மகுடத்திற்கு மற்றுமொரு வைரக்கல் !