a K Vijay Anandh review
இன்றை காலகட்டத்தில், அனுபவ இயக்குனர்களே எடுக்கத் துணியாத ஒரு படம்.
ஒரு பக்கம் கன்னியாஸ்திரி ஆடையை கழட்டி விட்டு எதார்த்த வாழ்க்கைக்கு திரும்ப முயல்கிறார் ஒரு கன்னியாஸ்திரி, சாய் ஸ்ரீ பிரபாகரன்.
இன்னொரு பக்கம் மேற்கத்திய நாடுகளில் பரவலாக காணப்படும் ஜீசஸ் கிறிஸ்டை கடவுளாக ஏற்றுக் கொள்ளாத சேட்டனிஸம் Satanism த்தை பின்பற்றும் பாவல் நவகீதன்.
இப்படி ஒரு படம் தமிழில் தான் வந்திருக்கிறதா..? இன்று 75 திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறதா…? என்று நம்மை கிள்ளி பார்க்க தோன்றும் அளவிற்கு, யாரையும் காயப்படுத்தாமல் உண்மையைச் சொல்லி இயக்கி இருக்கிறார் இந்த இளம் இயக்குனர் ஹரி கே சுதன்.
கன்னியாஸ்திரி மரியாவாக சாய் ஸ்ரீ பிரபாகரன், சாதாரணமாகத்தான் தனக்கு தெரிந்தவரான சென்னையில் வசிக்கும் சிது குமரேசன் வீட்டிற்கு வருகிறார்.
அங்கே லிவ் – இன் வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டு ஜோடிகளின் பேச்சுக்கள் அவர்களது அன்றாட நடவடிக்கைகள் அவர் மனதில் ஒரு சபதத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
திரும்பவும், சர்ச்சுக்கு செல்லும் மனமில்லாமல், கிராமத்தில் தன் தாயிடம் கோபித்துக் கொண்டு சென்னை திரும்பும் அவர், தன் வயதொத்த பெண்களைப் போல வாழ எத்தனிக்கிறார்.
அதன் பிறகு அவரது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள், மரியாதையைப் பெற்றுத் தருகிறதா ? அல்லது அவமரியாதையை பெற்று தருகிறதா..? என்பதையெல்லாம் தாண்டி அவருக்கு பிடித்த வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறாரா..? என்பதாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.
பருவ வயதில் முழு விருப்பமில்லாமல் துறவு வாழ்க்கை போன்று கன்னியாஸ்திரி வாழ்க்கையை நிர்பந்தங்கள் காரணமாகவோ அல்லது வலுக்கட்டாயமாகவோ அல்லது வேறு வழியில்லாமலோ ஏற்றுக்கொள்ளும் இளம் பெண்களின் குரலாக மரியா கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது.
மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துவ மதத்திற்கு குறிப்பாக இயேசு கிறிஸ்துவிற்கு எதிரான கொள்கையுடையவர்களாக Satanism பின்பற்றாளர்கள் இருப்பதை காவல் நவகீதன் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு புரிய வைத்திருக்கிறார் இயக்குனர். உதாரணமாக நம்மூரில் ராமனை வழிபடுபவர்கள் க்கு போட்டியாக ராவணனை வழிபடுபவர்கள் இருக்கிறார்கள் அல்லவா அதுபோல.
உண்மையில் இயேசு கிறிஸ்துவிற்கு எதிரான சாத்தான் என்கிற அந்த மேற்கத்திய வழக்கத்தை, அப்படியே மடைமாற்றித்தான், நமது நாட்டில் கிராம தெய்வங்களையும் இந்து கடவுளர்களையும் வணங்கும் அப்பாவி மக்களிடம் சாத்தானை வணங்காதீர்கள் என்று சுலபமாக மதம் மாற்றம் செய்கிறார்களோ என்று தோன்றுகிறது.
இயேசு கிறிஸ்து, கருப்பினத்தை சேர்ந்தவராக இருந்திருந்தால், இனவெறி சற்றும் குறையாத இன்றைய மேற்கத்திய நாடுகள், அவரை கடவுளாக ஏற்றுக் கொண்டிருப்பார்களா என்கிற மிகவும் ஆழமான கேள்வியை, பாவல் கதாபாத்திரம் மூலமாக முன் வைக்கிறார் இயக்குனர் ஹரி கே சுதன்.
இந்த படம் கிறிஸ்தவ மதத்தை விமர்சிக்கிறது என்பதற்காக பிற மதத்தினர் பார்க்க வேண்டும் என்பது அல்ல. உண்மையில், ஏன் எதற்கு என்று தெரியாமல் அல்லது சில தலைமுறைக்கு முன் தங்களது முன்னோர் மாறியதால் தங்களையும் கிறிஸ்துவ மதத்திற்குள் தங்களை ஒப்புக்கொடுத்து விட்டவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.
கன்னியாஸ்திரி ஆக நடித்திருக்கும், சாய் ஸ்ரீ , அவரது தோழியாக நடித்திருக்கும் சிது குமரேசன், பாவல், சிது குமரேசன் உடன் தங்கியிருக்கும் நண்பர்கள் மற்றும் கன்னியாஸ்திரியின் அம்மாவாக நடித்திருப்பவர் என்று பத்துக்கும் குறைவான நடிகர்களே படம் முழுவதும் வந்தாலும் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடத்தி இருக்கிறார்கள்.
கீழே கடலும் மேலே நீல வானமுமாக எல்லோருக்கும் தோன்றும் காட்சி, சாய் ஸ்ரீக்கு , அப்படியே தலைகீழாக காட்சி அளிப்பதும், இன்னொரு சித்தாந்தத்தை மூளைக்குள் கருத்தரித்துக் கொண்டாள் என்பதை சிம்பாலிக்காக சொல்லும் விதமாக அவளை கர்ப்பபதியாக காட்டியிருப்பதும் அற்புதமான க்ளைமார்க்ஸ்.
10 பேரை வைத்து அற்புதமான படமாக மரியாவை இயக்கி இருக்கிறார் ஹரி கே சுதன்.