Bison

mysixer rating 5/5

293

a K Vijay Anandh review

இரண்டு பாறைகளின் இடுக்கில் நெடிந்து வளரும் காட்டுமரம் போல, அது இயல்பாக நடப்பது, அடிக்கடி நிகழும் பூகம்பங்களால் அந்த இரண்டு பாறைகளும் முட்டி மோதிக்கொள்ளும்  நிலையிலும் அதன் இடுக்கில் மாட்டிக் கொண்ட விதை முளைத்து வளர்ந்து வானத்தை தொட்டு நிற்பது என்பது அசாதாரணமானது.

அப்படி ஒரு காட்டு மரமாக, காளமாடனாக வளர்ந்து நின்ற ஒரு கபடி விளையாட்டு வீரனை பற்றிய படமாக, பைசனை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ்.

1996 ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டி, இந்தியா பாகிஸ்தான் கபடி போட்டி, சப்ஸ்டியூட் வீரராக களத்திற்கு வெளியே அமர வைக்கப்பட்டிருக்கும் துருவ் விக்ரம். அந்த பரபரப்பான கபடி விளையாட்டிற்கு நடுவே, அந்த இடத்திற்கு வரும் வரையிலான அவரது போராட்டங்களை நினைவு கூர்கிறார். அவை, இயற்கை எழில் கொஞ்சும் தாமிரபரணி கரையோரம் நடக்கும் காட்சிகளை விரிகிறது.

இயற்கை மட்டுமே, எழில் “கொஞ்சுகிறது” மனிதர்களுக்கு இடையே பாரபட்சம் பார்க்காமல். ஆனால்,  சமூக அமைப்புகள் உப்பு சப்பில்லாத காரணங்களுக்காக அங்கே முளைத்து வரும் சாதாரண மனிதர்கள் முதல் சாதனையாளர்கள் வரை எப்படி ஆட்டு விக்கிறது என்பதை பார்க்கும் பொழுது, ஏன் மனிதம் இப்படி ஆகிவிட்டது என்று என்ன தோன்றுகிறது.

பக்கத்து வீட்டுக்காரனும் உறவினருமான அனுபமா பரமேஸ்வரன் அண்ணனுடன் ஒரு தகராறு , சாமிக்கு படையல் போட கிடாவை எடுத்துச் செல்லும் பொழுது பஸ்ஸில் ஒரு தகராறு , எதிர்பாராமல் ஏற்பட்ட இரண்டு அடி தடிகளை, பசுபதி தலை முழுகி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே,  ஆசிரியர் அருவி மதனுடன் சென்று கொண்டிருக்கும் துருவ் இன்னொரு அடிதடியில், எடிட்டர் சக்தி திரு விளையாடி இருக்கிறார்.

உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் அது அடிதடிக்கு இட்டுச் செல்கிறது அதனால் ஆரோக்கியமாக வைக்க மாட்டேன் என்பது எவ்வளவு அபத்தமோ அதைப்போல,கபடி விளையாட்டிற்காக கட்டுமஸ்தாக உன்னை தயார்படுத்திக் கொள்வதால் தான் நீ இப்படி அடிதடியில் இறங்குகிறாய் ஆகவே கபடியை விட்டுவிடு என்று பசுபதி வாங்கும் சத்தியத்தை மீறி துருவ் எப்படி, ஊரே மெச்சும் அதன் பிறகு உலகமே மெச்சும் கபடி வீரனாக விஸ்வரூபம் எடுக்கிறார் என்பது விறுவிறுப்பான திரைக்கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது.

சமூக ஒழுங்கிற்கு, அப்பாவி மக்களின் மீது ஏவப்படும் அடக்குமுறைகளுக்கு உடனடி தீர்வு காண்பதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களும் அரசு இயந்திரங்களும் தவிர, அந்தந்த பகுதி மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். அப்படிப்பட்ட இரண்டு பேர்களுக்கு இடையே உரசல் ஏற்படும் பொழுது, அது அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களையும்  புரட்டிப் போடுகிறது, எந்த சமூக ஒழுங்கிற்காக அவர்கள் உருவானார்களோ அதே சமூக ஒழுங்கு சிதைந்து போகவும் செய்கிறது.

அப்படியான லால் மற்றும் அமீர் ஆகியோருக்கு இடையில் ஏற்படும் மோதல்களுக்கு நடுவே, அவற்றால் ஏற்படும் கலவரங்களில் சிக்கி தன் மகன் வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது என்பதற்காக, பாதுகாப்பிற்காக இடுப்பில் பட்டாக்கத்தியுடன் மகனை கபடி விளையாட்டுகளுக்கு அழைத்துச் செல்லும் பசுபதி வழக்கம்போல, இது போன்ற திரைக்கதைகளுக்கு உயிர் கொடுத்து விடுகிறார்.

லால் மற்றும் அமீர், தாங்கள் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். எந்த சூழ்நிலையிலும், துருவை விட்டுக் கொடுக்காமல் அவனது | விளையாட்டுத் திறமையை மட்டுமே ஊக்குவித்துக் கொண்டிருக்கும் லால், லால் உதவியால் அவனுக்கு அங்கீகாரம் கிடைத்தது என்றாலும், அவனுக்காக காத்திருக்கும் காதலியை இன்னொருவன் கைப்பிடித்து விடாமல், நியாயத்தின் பக்கம் நிற்கும் அமீர் என்று இருவருமே ரசிகர்கள் மனதிலும் நிலைத்து நிற்பார்கள்.

தனது பள்ளித்தோழியின் தம்பியை காதலிக்கும் அனுபமா பரமேஸ்வரன், மாரி செல்வராஜ் நாயகிகளுக்கே உரிய அழுத்தமான சிறப்பான நடிப்பில் உச்சம் தொடுகிறார்.

துருவின் அக்காவாக, ரஜிஷா விஜயன் ,  தனது தோழியை தன் தம்பி காதலிக்கிறானா  ? என்பது தெரியும் இடங்களில் அவர் காட்டும் உணர்ச்சிகள் அற்புதம். அதே நேரம், எதுவும் அவனது கபடி கனவை சிதைத்து விடக்கூடாது என்பதற்காக தாய் ஸ்தானத்திலிருந்து அவனை ஒவ்வொரு கட்டத்திலும் காத்து அனுப்புவது பிரமாதம்.

அருவி மதன், உடற்கல்வி ஆசிரியராக மிகவும் யதார்த்தமாகவும் கடைசி வரை உடனிருந்து , தனது மாணவன் துருவை உச்சத்திற்கு எடுத்துச் செல்ல உதவுவதும் அருமை.

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் கபடி போட்டியில் டீம் கோச்சின் எதிர்ப்பையும் மீறி ஒரு கேப்டனாக துருவை, விளையாடும் அணிக்குள் எடுத்துச் செல்வது,அவன் மூலமாகவே வென்று காட்டுவது, என்று இந்திய அணியின் கேப்டனாக நடித்திருப்பவரும் கைதட்டல்களை அள்ளுகிறார்.

அழகம்பெருமாள் அவரது மகளாக வரும் ஹரிதா ஆகியோரது கதாபாத்திர அமைப்பு மற்றும் அவர்கள் துருவை, அடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்ல போராடும் காட்சிகள் ஆகியவை மிகவும் சிறப்பாக கையாளப்பட்டிருக்கின்றன. அழகம்பெருமாளுக்கு இது வழக்கமான ஒரு சிறப்பான கதாபாத்திரம் என்றாலும், ஹரிதாவிற்கு, வித்தியாசமான கதாபாத்திரம் அதனை சிறப்பாக திரையில் கொண்டு வந்திருக்கிறார்.

படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

துருவ் விக்ரம்…

சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வீரதீர சூரன் பார்ட் 2 வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. முதல் பாகம் இரண்டாவது பாகம் என்று வரிசையாக எடுக்காமல், இரண்டாவது பாகத்தை முதலில் வெளியிடுவதும் அதன் முந்தைய பாகமாக அடுத்த வெளியிடுவதும் இப்பொழுது திரைத்துறையில் ஒரு ட்ரெண்டாக இருக்கிறது. காந்தாரா அந்த வரிசையில் இடம் பெற்று இருக்கிறது.

அந்த வகையில், பைசன் படத்தில், துருவ் விக்ரமின் அதிரடி, அட்டகாசமான கபடி விளையாட்டு மற்றும் அழுத்தமான நடிப்பு ஆகியவற்றை பார்க்கும் பொழுது, இது வீர தீர சூரன் பார்ட் 1 ஆக இருக்குமோ என்று என்ன தோன்றுகிறது.

அந்த அளவிற்கு சீயான் விக்ரம் போல, தனது தந்தையைப் போல ஒரு அழுத்தமான படத்தை அழுத்தமான திரை கதையை தனது தோளில் தூக்கி சுமந்து இருக்கிறார் துருவ் .

படத்தில் இவருக்கு நிறைய வசனங்கள் கிடையாது, ஆனால் தந்தையிடமும் தமிழ்நாடு அணிக்கு தேர்வாகாத நிலையில் அழகம்பெருமாளிடமும் அவர் பேசும் வசனங்கள் மிகவும் கூர்மையானவை, அந்த இடங்களில் ஒரு நடிகனாக வெடித்து உடைந்து நடித்த இடங்களில் ஒரு பிரளயத்தையே உண்டு பண்ணி இருக்கிறார் துருவ்.

கபடி விளையாட்டிற்காக தன் உடலை தயார் படுத்துவதற்காக எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருப்பது போல, வரும் தடைகளையும் தாண்டிக் கொண்டே ஜெயிக்கும் துருவ் விக்ரமின் கதாபாத்திரம் நிச்சயம் பல இளைஞர்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்றால் மிகை அல்ல.

தொழில்நுட்ப ரீதியாக,

ஒளிப்பதிவாளர் எழில் அரசு கே மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன், நடன இயக்குனர் சாண்டி , கலை இயக்குனர் குமார் கங்கப்பன் ஆகியோருடன் எடிட்டர் சக்தி திருவும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள்.

குறிப்பாக மாரி செல்வராஜ் மற்றும் அறிவு  வரிகளில்  கதையோட்டத்தை, விறுவிறுப்பாகும் நீண்ட பாடல்கள் நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் மிகவும் வித்தியாசமாகவும் உணர்ச்சி பிழம்புகளாகவும் இருக்கின்றன.

மாரி செல்வராஜ், டெக்னிக்கல் ஆகவும் மண் சார்ந்தும்  என்று ஒரே படத்தில் இடம்பெறுவது கடினம், இந்த இரண்டும் வெவ்வேறு துருவங்கள். அந்த இரண்டு துருவங்களையும் மாட்டு வண்டியில் பூட்டும் இரண்டு மாடுகளாக நேர்த்தியாக கையாண்டு அற்புதமான படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர்கள் வரிசையில், சந்தேகமே இல்லாமல் இன்றைய நிலையில் முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறார்.

கிரிக்கெட் இந்தியர்களுக்கு இன்னொரு மதம் என்றால், கபடி அவர்களின் குலதெய்வம்.

கதையின் மையக் கதாபாத்திரமான, நிஜ கபடி வீரர் மணத்தி கணேசனின் , புகழ் மேலும் பரவும் அத்துடன் பல இளைஞர்கள் அவரைப்போல உருவாகுவார்கள். விளையாட்டு, சாதி மதம் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை கடந்து மனிதர்களை தேசமாக இணைக்கின்றது என்கிற அழகான இவரது வாழ்க்கையை துளி கூட குறைவில்லாமல் இந்த படத்தில் காட்டி இருக்கிறார் மாரி செல்வராஜ்.

அந்த கபடியை மையப்படுத்தி அத்துடன் சமூகத்தில் ஏற்படும் பதட்டங்களையும் இணைத்து அற்புதமான படமாக பைசன் படத்தை கொடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.