a K. Vijay Anandh review
கடந்த 15 வருடங்களில் , சிறுவர்களை வைத்து வந்த ஆக்ஷன் படங்களில் ரெனிகுண்டா மற்றும் கோலிசோடா ஆகியவற்றை யாரும் மறந்திருக்கமுடியாது. தமிழ் சினிமாவில், சிறுவர்களை மையப்படுத்தி பல படங்கள் வந்துகொண்டிருந்தாலும், ஏதோ ஒரு புள்ளியில் பெரியவர்கள் – அதாவது பெரிய நடிகர்கள் புகுந்து மொத்த கிரெடிட்டையும் எடுத்துச்சென்று விடுவார்கள்.
அந்தவகையில், ரெனிகுண்டா, கோலிசோடா வரிசையில், சிறுவர்கள் நடித்த ஒரு அழுத்தமான படமாக ராம் அப்துல்லா ஆண்டனி படம் வெளியாகியிருக்கிறது.
மூன்றுமதத்தவர்களும் சேர்ந்து, நரகாசுரனை வதம் செய்திருப்பது, வரலாற்றில் இது முதல்முறை. இ ந் நேரம் படம் பார்த்த ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் சொல்லியிருப்பார்கள், யார் அந்த நரகாசுரன் என்று..! இருந்தாலும், நாம் அதனை விடுத்து, நடிகர்களையும் கதையின் உயிரோட்டத்தையும் மட்டும் பேசுவோம்.
டைட்டிலில் கடைசியாக வந்தாலும், ஆண்டனியாக நடித்திருக்கும் பூவையாரே படத்தின் நடு நாயகன். குடிகார அப்பா, பீடி சுற்றும் அம்மா என்று அப்படிப்பட்ட சூழ் நிலையில் வளரும் ஒருவன், சமூகவிரோதியாக ஆகிவிடுவது மிகவும் சுலபம். அப்படித்தான், படத்தின் இறுதிக்காட்சி வரை நம்பவைத்தும் இருக்கிறார் இயக்குநர் ஜெயவேல்.அப்படி ஒரு சமூகவிரோதியோடு சேரும் அவனது நண்பர்களும் அப்படித்தானே இருக்கவேண்டும். ராமாக நடித்திருக்கும் அஜய் ஆர்னல்டும், அப்துல்லாவாக நடித்திருக்கும் அர்ஜுனும் போட்டிக்கொண்டு ஆம், நாங்கள் அப்படித்தான் என்பதாக மிரட்டியிருக்கிறார்கள்.
கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க, அடப்பாவிகளா ! என்று அழ வைத்து விடுகிறார்கள், நடிகர்களும் இயக்குநர் ஜெயவேலும்.
மற்றபடி ராம் அப்துல்லா ஆண்டனி, திரையில் பார்த்து ரசிக்கவேண்டிய அற்புதமான படம்.
திடீரென்று கெளதம் வாசுதேவ மேனனின் வேட்டையாடு விளையாடு பீலிங், முந்தைய காட்சியில் அடர் தாடியும் மீசையுமாக இருக்கும் செளந்தரராஜா அடுத்த காட்சியில் முகச்சவரம் செய்துவிட்டு, கம்பீரமாக காக்கிச்சட்டையில் வரும் போது. எத்தனையோ ஹீரோக்களுக்கு பக்கபலமாக நடித்திருப்பவர், இந்தப்படத்தில், பூவையாருக்கும் அதனை செய்திருப்பதன் மூலம், பாரபட்சம் இல்லாதவராக ஆகிவிடுகிறார்.
வழக்கம்போல, வேலராமமூர்த்தி மிரட்டியிருக்கிறார்.
ஹரிதா, எந்தவிதமான எதிர்பார்ப்பு, நிபந்தனைகள் இன்று நல்ல கதாபாத்திரமா இவரைத்தேடிப்போகலாம்பா என்று திரைத்துறையினர் நினைக்கும் அளவிற்கு, இதிலும் ஒரு கனமான கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
ஜாவா சுந்தரேசன் – வினோதினி வைத்திய நாதன், கிச்சா ரவி, தலைவாசல் விஜய் என்று அனுபவ நடிகர்கள் தங்கள் கதாபாத்திரங்களில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும், மகனை மிரட்டும் போதெல்லாம் அவன் திருக்குறள் ஒன்றைச் சொல்ல, அதற்கு அர்த்தம் தேடும் ஜாவா சுந்தரேசன், மகன் மீது சந்தேகப்பட்டு, கத்தியை வைத்து இரு மகன்களையும் சோதிக்கும் தலைவாசல் விஜய் என்று சிறந்த காட்சியமைப்புகள்.
காவல் ஆய்வாளராக வரும் சாய் தீனா வழக்கம் போல, லாக்கப்புக்கள் படுத்துக்கொள்ளும் வித்தியாசமான போலீஸாக வருகிறார்.
கலெக்டராக வரும் ராஜ் மோகன், அட்டகாசமான தேர்வு, சிறப்பாக நடித்திருக்கிறார்.
கத்திகள், துப்பாக்கிகள் என்று கதை நகர்விற்கு கொடூரமான ஆயுதங்கள் படம் முழுவதும் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், கதையை முடித்து வைக்க பயன்படுத்தப்பட்டிருக்கும் திருக்குறள், எல்லாவற்றையும் விட சக்திவாய்ந்த ஆயுதமாக தெரிகிறது. அப்படி திருக்குறளை பயன்படுத்தி, கதையை முடித்துவைத்த இயக்குநர் ஜெயவேலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ராம் அப்துல்லா ஆண்டனி, அட்டகாசமான படம் !