ஆண்பாவம் பொல்லாதது

mysixer rating 3/5

227

a K Vijay Anandh review

பொண்ணுபார்க்கப்போன இடத்துல, மாட்டி வைச்சுருக்கிற ஈவேரா போட்டோவைப் பார்த்தவுடனேயே உஷாராயிருக்கனும் அல்லது  கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கும் ஒரு சிகரெட் என்று கேட்கும் போதாவது உஷாராயிருக்கனும், சக்தி, நம்மூரில்  ஆண்டாண்டு காலமாக  வழக்கத்தில் இருக்கும் அதைவிட முக்கியமாக  மேற்கத்திய நாடுகளால் பொறாமையோடு பார்க்கப்பட்டுகொண்டிருக்கும் தாலி – கல்யாணம் – குடும்பம் – உறவுகளைப் போற்றுதல் என்கிற கலாச்சாரத்திற்கு ஒத்துவரமாட்டார் என்பதை.

முதல் பாதி, விறுவிறுப்பாக நகர்கிறது. சிவா, அதாவது ரியோ டைவர்ஸுக்காக வக்கீலை அணுகவில்லை,  சரியான புரிதல் இல்லாமல் அவர் மீது டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸ் போடும் மனைவியிடமிருந்து தற்காத்துக்கொள்ளத்தான் வக்கீலை நாடுகிறார்.  மாட்டிக்கொள்ளும் சாதாரண மனிதர்களை, வக்கீல்கள் எந்த எல்லைக்கும் கொண்டுபோய்விடுகிறார்கள் என்பதை அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்,  மாளவிகாவுக்காக ஆஜராகும் வக்கீலாக நடித்திருக்கும் ஷீலா கதாபாத்திரம் மூலம்.

கோர்ட்டோ நீதிபதிகளோ, யதார்த்தத்தை புரிந்துகொண்டு நீதிகள் வழங்கிவிடுவதில்லை, எடுத்துவைக்கும் வாதங்கள், தேவையில்லாத சட்டப்பிரிவுகள் அதிலுள்ள ஓட்டைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கிராம பஞ்சாயத்துகளில் நிமிட நேரத்திற்குள் முடித்து வைக்கப்படும் பிரச்சினைகளை வருடக்கணக்காக இழுத்துச்சென்று விடுகிறார்கள். அதிலும், குடும்ப நல நீதிமன்றங்கள், குடும்பங்களை பிரிக்கும் குழந்தைகளை முடக்கும் நீதிமன்றங்கள் எப்படி குடும்ப “ நல” நீதிமன்றங்களாக இருக்கமுடியும்.?

ஆம், தனது மனைவி கேட்டுப்பெற்றுக்கொண்ட விவாகரத்தால், தனது மகளைக்கூட பார்க்க முடியாமல் தவிக்கும் அப்பாவாகவும் வக்கீலாகவும் ஆர் ஜே விக்னேஷ்காந்த், பெரிய ஆர்ப்பாட்டங்கள் இன்று கதையை அட்டகாசமாக தூக்கி நிறுத்துகிறார்.

இவரை விட்டுவிடக்கூடாது என்று ரியோ நினைக்கும் அளவிற்கு மாளவிகா கதாபாத்திரம் ஒன்றும் எதையும் செய்துவிடவில்லை.

விக்னேஷ் காந்த் எடுத்துவைக்கும் வாதங்கள் ஏற்புடையதாக இல்லை. மனைவியின் கழுத்தில் தாலி இல்லாமல் பார்க்க, கணவன் ஏன் பழகிக்கொள்ளவேண்டும்..? தனது மனைவி ஆண் நண்பர்களுடன் பப்புக்கு போவதை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்.. என்பதெல்லாம் முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்கள். அப்படி ஒரு காலம் கனிந்து, எல்லா ஆண்களும் இதனை ஏற்றுக்கொண்டு வாழ ஆரம்பித்தால், தொன்மையான பழக்க வழக்கம் மற்றும் கலாச்சாரம் என்பதற்கான தேவையே இருக்காதே!  அதே நேரம் குழந்தைகள் இருக்கும் பெற்றோர்கள் பிரிவது, அந்த தலைமுறைக்கு செய்யும் துரோகம்.

சுதந்திரம் மற்றும் தனித்து நிற்றல் என்கிற வார்த்தைகளை மிகவும் தவறாக புரிந்துகொண்ட ஒரு சமூகத்தை ஏன் உருவாக்க வேண்டும்.

பெண்ணியப்போராளியாக இருந்தாலும், கணவனுக்கு காபி போட்டுக்கொடுத்தால் அதற்காக நான் அவருக்கு என்ன அடிமையா ? என்று கேட்கும் அனுபமா குமார் கதாபாத்திரத்திலிருந்து , மாளவிகா கொஞ்சம் கற்றுக்கொள்கிறார் என்றாலும், “ இல்லை யுவர் ஆனர், ஆண்டாண்டுகாலமாக நாம் பின்பற்றிவரும் கலாச்சாரங்களை ஒழிப்பதுதான் பெண்ணியம் என்று நினைக்கும் இவர் , சக்தி எனக்கு தேவையில்லை.. டைவர்ஸ் கொடுத்துடுங்க..” என்று சிவா  சொல்லியிருந்தால் ஆண்பாவம் பொல்லாதது ஒரு பேன் இந்தியா சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஆகியிருக்கக்கூடும். சிவகுமார் முருகேசன் கொஞ்சம் மாற்ரி யோசித்திருக்கலாமோ..? அல்லது ஈவெராயிசத்தை தூக்கி நிறுத்துவதில் இவர்களுக்கு என்ன நெருக்கடியோ ?

மற்றபடி, ரியோ – மாளவிகா ஜோடிக்கு எந்தக்காலத்திலும் ”டைவர்ஸ்” ஆகாது, ஏனென்றால், அவர்கள் மிகவும் வெற்ரிகரமான கூட்டணி – ஜோடியாக ரசிகர்கள் மனதில் நிலைத்துவிட்டார்கள். இருவரும் அற்புதமான நடிகர்கள் இருவருக்குள்ளும் செம கெமிஸ்ட்ரி.

சித்துவாக நடித்திருக்கும் ஜென்சன் திவாகர், இதுவரை இல்லாத நகைச்சுவை இலக்கணங்களால் காட்சிகளை இனிமையாக்குகிறார்.

அதிகம் பேசாத வக்கீலாக ஆரம்பித்து, இறுதி வாய்தாவில்  நீண்ட வாதங்களை முன் வைக்கும் இடங்களில் விக்னேஷ் காந்திற்குள் இருக்கும் தேர்ந்த நடிகன் வெடித்துக்கிளம்பியிருக்கிறான். மிகப்பெரிய செலவு செய்து திருமணம் செய்துவைத்தால், உப்புச்சப்பில்லாத காரணங்களுக்காக டைவர்ஸ் கேட்டு கோர்ட் படியேறும் இளசுகளை ஒரு பிடி பிடிக்கிறார்.  அந்தவகையில் , அப்படி வீம்புக்காக கோர்ட்  டைவர்ஸ் என்று வந்திருக்கும் மாளவிகாவுக்கு , டைவர்ஸ் கொடுத்து அனுப்பியிருக்கவேண்டும், ஏனென்ற்ல் விக்னேஷ் காந்த் – ஷீலா தம்பதி போல இவர்களுக்கு இன்னும் குழந்தை பிறந்திருக்கவில்லை. 24 மணி நேரமும் ரீல்ஸ் பார்த்துக்கொண்டு, வீடியோ போட்டுக்கொண்டு, சமைக்க கூட நேரமில்லாமல், ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டு ஆரோக்கியத்தை கெடுத்துகொண்டு ஒரு கருவைக்கூட சுமக்க முடியாமல் இருப்பது, பெண்ணியம் அல்ல, பெண் சுதந்திரம் அல்ல !

இந்தியாவில் பிறந்து இந்திய கலாச்சாரங்களை  முழுவதுமாக கடைபிடித்து உலகில் தலைசிறந்த பெண்மணிகளாக திகழ்ந்த இருவர் இந்திரா நூயி மற்றும் சுதா மூர்த்தி, இருவரும் தங்கள் வீட்டு சமையலறைகளிலும் வேலை செய்வதை விட்டுவிடவில்லை என்பது தான் யதார்த்தம்.

கலையரசன் தங்கவேலு இயக்கியிருக்கும் ஆண்பாவம் பொல்லாதது, முதல்பாதி அட்டகாசம், இரண்டாம் பாதி சமரசம் ! இருந்தாலும் இந்த மண்ணில் கட்டமைக்கப்பட்டிருக்கும் எதற்கும் உதவாத போலியான பெண்ணிய பிம்பங்களை தகர்த்தெறிவதற்கான முதல் அடியாக , இந்தப்படத்தை எடுத்த விதத்தில் படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் !