a K Vijay Anandh review
துல்கர் சல்மான், இன்றைய தேதியில் இந்த இளம் திறமைசாலியை வைத்து திரைப்படத்துறையில் என்ன வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்கலாம். அந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரங்களாகவே மாறிவிடும் மேஜிக் அவரிடம் இருக்கிறது.
இந்தப் படத்திலும் பழம்பெரும் தமிழ் நடிகர் டி ஆர் மகாதேவன் என்கிற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். சாப்பிடுவதற்கு கூட வழியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு பெரியவர் மூலம் ஒரு நடிகராக மாறி அவருக்கென்று லட்சோப லட்சம் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருக்கும் ஒரு நடிகர். அவரது புகழுக்கு மயங்கி சம்பந்தம் வைக்கும் பெரிய வீட்டு பெண்ணாக காயத்ரி. துல்கர் சல்மான் மனதார காதல் வயப்படும் பெண்ணாக, சக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்.
பர்மா அகதியாக வந்த பாக்கியஸ்ரீ போஸுக்கு, அடைக்கலம் கொடுத்து அவரையும் ஒரு நடிகையாக உருவாக்கும் இயக்குனர் எல்லோராலும் பெரியவர் இன்று மரியாதையுடன் அழைக்கப்படும் சமுத்திரக்கனி.
தான் உருவாக்கிய டி ஆர் மகாதேவனே . தன்னை மதிக்காத ஒரு நடிகராக அவருக்குத் தெரிய, நடிகரின் வியாபாரம் மற்றும் அவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் ஆகியவற்றை கருதி தயாரிப்பாளரும் நடிகன் பக்கம் நிற்க, அவரை அறியாமல் துல்கர் சல்மான் மீது ஒரு வெறுப்பை வளர்த்துக் கொள்ள, மீண்டும் தான் உருவாக்கிய ஒரு நடிகையே தான் வெறுக்கும் துல்கர் சல்மானுடன் நெருங்கி பழகுவதை விரும்பாத பெரியவராக சமுத்திரக்கனி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இன்றைய தேதியில், இந்திய திரையுலகம் தவிர்க்க முடியாத ஒரு துணை நடிகர் என்றால் அது சமுத்திரக்கனி தான்.
இந்த நிலையில் , படப்பிடிப்பு தளத்திலேயே பாக்ய ஸ்ரீ கொல்லப்படுகிறார்.
அவரை யார் கொன்றார்..? என்பதை காவல்துறை அதிகாரி ராணா டகுபதி விசாரிப்பதற்காக படப்பிடிப்பு தளத்திற்குள் வர இரண்டாவது பாதி முழுவதும், விறுவிறுப்பான புலன் விசாரணையாக ரசிகர்களுக்கு தீனி போடுகிறது.
படப்பிடிப்பு தளத்தில் கொல்லப்படும் ஒரு நடிகை அவரைக் கொன்றவர் யார் என்கிற புலன்விசாரணை. இந்த ஒரு வரி கதையை, சமகாலத்தில் நடப்பது போல கூட திரைக்கதை அமைத்து எடுத்திருக்கலாம்.
ஆனால், 1950 – 60 காலகட்டங்களில் தமிழ் சினிமா துறையில் நிஜமாக நடந்த வெவ்வேறு சம்பவங்களை ஒன்றிணைத்து தனது கற்பனைத் திறனை புகுத்தி, ஒரு விண்டேஜ் என்டர்டைன்மென்ட் ஆக இந்த படத்தை இயக்கிய விதத்தில் செல்வமணி செல்வராஜை எவ்வளவு பாராட்டினாலும் தரும்.
அந்த காலகட்ட படப்பிடிப்பு தளங்கள் கேமரா மற்றும் உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட பட குழுவினர் என்று அவர்களை பார்ப்பதற்கே மிகவும் வசீகரமாகவும் அழகாகவும் இருக்கின்றது.
குறிப்பாக பெரியவர் அதாவது இயக்குனரின் ஆஸ்தான துணை இயக்குனராக வரும், பிரிஜேஷ் நாகேஷ், முக்கியமான கட்டங்களில் சிறப்பாக நடத்தி இருக்கிறார் அது மட்டும் அல்லாமல் கதையை சிறப்பாக முடித்து வைக்கும் முக்கியமான காட்சியில் அருமையாக நடித்திருக்கிறார்.
ராணா ரகுபதி உடன் வரும் காவல் அதிகாரி காத்து வாக வரும் பக்ஸ், கிடைத்த இடங்களில் எல்லாம் சிரிக்க வைத்து விடுகிறார்.
முதலமைச்சர் முதல் டிஐஜி வரை, கைக்குள் வைத்திருக்கும் பெரும் பணக்கார முதலியாராக நிழல்கள் ரவி நடித்திருக்கும் பொழுது, கம்பீரத்திற்கு குறையேது.
அன்றைய டிஐஜியாக நரேன், டி ஆர் மகாதேவனின் டிரைவராக வையாபுரி என்று ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரங்களில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்கள்.
பாக்யஸ்ரீ போஸ், அழகும் திறமையும் பொருந்திய நடிகையாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் டேனி லோபஸ், ஆர்ட் டைரக்டர் மகாலிங்கம், இசையமைப்பாளர் ஜானு சந்தர் ஆகியோரது உழைப்பு அபாரம்.
குறிப்பாக, திகில் மற்றும் புலன் விசாரணை காட்சிகளில் ஜானு சந்தர் அமைத்திருக்கும் பின்னணி இசை அந்த கால சினிமாக்களை நினைவூட்டுகிறது.
உலகின் முன்னணி திரைப்படத்துறையான இந்திய திரையுலகில் மிகவும் வித்தியாசமான கன்டென்ட் உள்ள படங்களை, இளம் தயாரிப்பாளர்கள் படமாக்க முன் வருவது ஆரோக்கியமான செயல்.
இந்த படத்தினை துல்கர் சல்மான், ரானா டகுபதி, வர்கீஸ் ஆகியோரிடம் இணைந்து பிரசாந்த் புட்லூரி தயாரித்திருக்கிறார்.
காந்தா, எம் ஆர் ராதாவின் படத்தில் வரும் அடியே காந்தா… என்கிற வசனம் காலம் உள்ளளவும் நிலைத்து நிற்கும். அதிலிருந்து ஒரு படத்தலைப்பை தேர்ந்தெடுத்ததில் இருந்தே, இயக்குனர் செல்வமணி செல்வராஜ் உள்ளிட்ட குழுவினரின் புத்திசாலித்தனம் பளிச்சிடுகிறது.
காந்தா, வெவ்வேறு காலகட்டங்களின் பொழுதுபோக்கு பரிமாற்றம்!