BP180

mysixer rating 4/5

22

a K Vijay Anandh review

தனுஷ், இன்று இந்திய அளவில் பிரபலமாகிவிட்ட ஒரு மாஸ் கதாநாயகன். அவருக்கு, மாஸ் கதாநாயகன் அந்தஸ்தை கொடுத்த படம் பொல்லாதவன் என்றால் மிகை அல்ல. அதிலும் அந்தப் படத்தில் அவர் டேனியல் பாலாஜியுடன் மோதும் காட்சிகளும் சண்டை காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. டேனியல் பாலாஜி, அப்படி ஒரு அசாத்தியமான திறமை கொண்ட வில்லன் அந்த படத்தில் தனுஷிற்கு அமைந்தது அவரது அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

அந்த வகையில், வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்ஹாசன் உடனும் மோதி அந்த படத்தையும் ஜெயிக்க வைத்த டேனியல் பாலாஜி, இந்தப் படத்தில் இதோ தன்யா எஸ்  ரவிச்சந்திரன் உடன் மோதி அவரையும் ஒரு மாஸ் கதாநாயகி அந்தஸ்திற்கு உயர்த்தி இருக்கிறார் என்றால் அது மிகையல்ல.

படத்தின் தலைப்பை போலவே மருத்துவராக வரும் தனியாவைத் தவிர மீதி அத்தனை பாத்திரங்களுக்கும் ரத்தக்கொதிப்பு எதிறிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக டேனியல் பாலாஜிக்கு, இரத்த கொதிப்பு அதாவது ரத்த அழுத்தம் 120 க்கு மேல் சென்று விட்டாலே நாம் நிதானமாக செயல்பட முடியாது, எப்படி இருக்கும்போது இவருக்கு -அதாவது அவர் ஏற்றுக்கொண்ட அர்னால்டு என்கிற கதாபாத்திரத்திற்கு 180 எட்டிப் பிடித்துவிட்டது. எப்படியாவது தன்யாவை , கொன்று விட வேண்டும் என்று துடிக்கும் டேனியல் பாலாஜியின், தாறுமாறாக எகிறிட்டோன ரத்த அழுத்தத்தை, நார்மலுக்கு கொண்டு வந்து, அவரது முகத்தில் ஒரு புன்னகையை மலரச் செய்து விடுகிறார் மருத்துவர் தங்கம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தன்யா.

வீட்டில் ஏற்பாடு செய்து இருந்த திருமணத்திலிருந்து தப்பித்து, தனது காதலனை கரம் பிடிக்க செல்லும் அரசியல்வாதி கே பாக்யராஜின் மகள் ஒரு விபத்தில் இறந்து விடுகிறார்.  ஓடிப் போய்விட்டாள் என்பதே பெரிய அவமானம். அதிலும் அவள் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை இந்த சமூகம் அறிந்து கொண்டால் எவ்வளவு பெரிய அவமானம் ?

அதை மறைத்து போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் கேட்க, எவ்வளவு பெரிய அதிகாரிகளிடமிருந்து அழுத்தம் வந்தாலும் அதனை புறந்தள்ளி நேர்மையாக செயல்படும் தன்யா அவர்களுக்கு, வில்லியாகத் தானே தெரிவார்..

ஒரு நேர்மையான மருத்துவராக தன்யா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார், அதிலும் எந்த சூழ்நிலையிலும் நேர்மையை விட்டுக் கொடுக்காமல் செயல்படுவதாகட்டும் எந்த எதிர்ப்புகளையும் தைரியமாக எதிர்கொள்வது ஆகட்டும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அவருக்கும் அவரது சகோதரி மற்றும் சகோதரர்களுக்கும் இருக்கும் பிளாஷ்பேக் கண்கலங்க வைக்கும் ரகம்.

டேனியல் பாலாஜி, என்ன ஒரு அற்புதமான கலைஞன்! ஏற்கனவே குறிப்பிட்டது போல தனுஷிடம் அடி வாங்குகிறோமா கமல்ஹாசனிடம் அடி வாங்குகிறோமா அல்லது தன்யாவிடம் அடி வாங்குகிறோமா அல்லது தோற்கிறோமா என்பதையெல்லாம் பார்க்காமல் அவருக்கு கொடுக்கப்பட்ட அந்த கதாபாத்திரத்தில் அவரால் எந்த அளவிற்கு உச்சம் தொட முடியுமோ அந்த அளவிற்கு உச்சம் தொடுகிறார்.

கே பாக்யராஜ், தனது அனுபவ நடிப்பை அசால்டாக வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

ஒரு பக்கம் அருள்தாஸ் இன்னொரு பக்கம் தமிழ் என்று தங்கள் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

நயனா சாய், ஸ்வேதா துரத்தி ஆகியோருடன் ஜாக்கும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு ஜிப்ரனின் இசை மற்றும் இளையராஜா சேகரின் எடிட்டிங் ஆகியவை இந்த படம் விறுவிறுப்பாக செல்வதற்கு உதவி இருக்கின்றன.

மிகவும் , ஒரு வித்தியாசமான கதை களத்தை சிந்தித்து அதனை விறுவிறுப்பான திரைக்கதை ஆக்கி அற்புதமான படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜெ.பி.

BP180, ஆச்சரியப்படுத்தும் பொழுதுபோக்கு!