FRIDAY

mysixer rating 4/5

30

a K Vijay Anandh review

தமிழ்நாட்டில், 100% எழுத்தறிவு பெற்ற மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம். ஆனாலும், அங்கே அத்தனை பேருக்குமான வேலை வாய்ப்பு வசதிகள் எதுவும் இல்லாததால், கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட படித்த ஆண்களும் பெண்களும் எல்லா மாநிலங்களுக்கும் அல்லது வெளிநாடுகளுக்கும்  சென்று வேலை பார்ப்பார்கள்.

அங்கேயே தங்கிவிடும் படித்தவர்களில், குறிப்பிடத்தக்க சதவிகிதத்தினர், அடிதடி,  கட்டப்பஞ்சாயத்து மற்றும் கொலை கொள்ளை போன்ற குற்ற செயல்களிலும் ஈடுபட்டு விடுவார்கள்.குறிப்பாக, சில அரசியல்வாதிகளின் அடியாட்களாக அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பவர்களாகவும் வேண்டாதவர்களை கருவறுப்பவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு இளைஞர் கூட்டத்தின் கதை தான் இந்தப் படம்.

அனீஷ் மாசிலாமணி, அட இந்த ஐபிஎல் சீசனில் விளையாடாமல் நடிக்க வந்து விட்டாரா ? நம்ம ரவிந்திர ஜடேஜா என்று கேட்கத் தோன்றும் அளவிற்கு அனீஷ் மாசிலாமணி அவரைப் போலவே சுருள் சுருளான தலைமுடி மற்றும் தாடி என்று கம்பீரமாக காட்சி தருகிறார். ஒரு பக்குவப்பட்ட அடியாளாக, படம் முழுவதும் வந்து அசத்தி இருக்கிறார்.

நன்கு படித்த தனது தம்பியையும் இந்த தொழிலில் இழுத்து விடக்கூடாது என்பதற்காக அவரை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் நேரம் விதி அவரது கனவில் மண்ணை அள்ளிப் போட, ஒரு சம்பவத்திற்கு துணை போன அவரது தம்பியும் கொல்லப்படுகிறார்.

அடுத்தடுத்த கொலைகள் தூரத்தல்கள் என்று விறுவிறுப்பாக பயணிக்கும் படம் ஒரு அழகான புள்ளியில் நிறைவு பெறுகிறது.

அந்தப்புள்ளி நம்மை ஆச்சரியப்படுத்தவும் செய்கிறது.

முழுக்க முழுக்க கன்னியாகுமரி மாவட்டத்திலேயே அதுவும் குளச்சல் துறைமுக பகுதிகளிலேயே அழகாக படமாக்கி இருக்கிறார்கள்.

மைம் கோபி,  கே பி ஒய் தீனா என்று ஒரு சிலரை தவிர மீதி அனைவருமே கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களாகவே நடித்திருக்கிறார்கள் என்பதுடன், அங்கே பேசும் தமிழிலேயே பேசவும் செய்திருக்கிறார்கள்.

பிரவீன் எம்மின் எடிட்டிங் ஜாலத்தில் படத்தின் காட்சிகள் முன்னே பின்னே மாறி மாறி வந்து  ஒரு விறுவிறுப்பான திரைக்கதைக்கு வலு சேர்த்து இருக்கிறது.

அபினாஷ் ஆதியின் சண்டைக் காட்சிகள் மிகவும் எதார்த்தம். ஜானி நாஷின் ஒளிப்பதிவும் அருமை.

டுமே யின் இசையும் பின்னணி இசையும் இந்த விறுவிறுப்பான திரைக்கதைக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து பிரைடே படத்தை ரசிகர்களுக்கு விருந்தாகி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஹரி வெங்கடேஷ்.

பிரைடே , விறுவிறுப்பான க்ரைம் திரில்லர்!