வெள்ளகுதிர

mysixer rating 5/5

55

a K Vijay Anandh review

வீட்டில் கதவைத்திறந்தால் பெட்டிக்கடை, தெருமுனையில் மளிகை கடை &  டீக்கடை, அடுத்த தெருவில் பேருந்து நிறுத்தம், பத்து நிமிடம் நடந்தால் மெட்ரோ ஸ்டேஷன், அரை மணி நேரம் பயணித்தால் ஏர்போர்ட் என்று வாழும் நகர்ப்புற மக்களுக்கு வெள்ளகுதிர படத்தில் காட்டப்படும் மலை உச்சியில் இருக்கும் கிராமம் வியப்பை மட்டுமல்ல, அவை வானத்தில் இருக்கும் தீவுகளோ என்கிற பிரமிப்பை தரும் என்றால் மிகை அல்ல.

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது போல இந்த படத்தில், ஒரு எதிர்பாராத குற்றச்செயலில் இருந்து தப்பிக்க மலை ஏறும் குடும்பத்தால் அந்த மலை கிராம மக்களுக்கு ஒரு நன்மை நடக்கிறது.

அது என்ன ?  அதற்கு எப்படி அந்த குடும்பம் காரணமாகிறது என்பதை அற்புதமான ஒரு விஷுவல் ட்ரீட்டாக நமக்கு தந்திருக்கிறார் இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார்.

உண்மையில் ஆயிரம் கோடி இல்லை என்றாலும் 100 கோடி வசூலிக்க தகுதியான படம் இந்த வெள்ளக்குதிர.

மலை அடிவார நகர்ப்புறத்தில் இருந்து தங்கள் மகனுடன் மலையேறும்  ஹரிஷ் ஓரி மற்றும் அபிராமி போஸ். முதல் பாதி முழுவதும், இன்னும் திருந்தாத கணவர் ஹரிஷ் ஓரியை பார்த்து எதுவும் ரியாக்ட் பண்ண முடியாத நிலையில் அபிராமி போஸ் அமைதியாக கடந்து விடுகிறார்.

இரண்டாவது பாதியில் விஸ்வரூபம் எடுக்கும், அபிராமி போஸ் அந்த கிராமத்து மக்களின் நிலங்கள் முன்னாள் ஊராட்சி தலைவரால் அநியாயமாக பறிக்கப்பட்டு கிராமமே மொட்டை அடிக்கப்பட இருப்பதை கிராம மக்களுக்கு எடுத்துச் சொல்லி சக அறிவார்ந்த பெண்களின் துணையுடன் அந்த சதியை முறியடிக்கிறார்.

தங்களது ஊருக்கு என்னென்ன வசதிகள் வேண்டும் என்று கேட்டு பெரும் ஊர்த்தலைவர்களைப் பார்த்திருப்போம். ஆனால், அரசாங்கம் அந்த கிராமத்திற்கு செய்யவிருக்கும் நலத்திட்டங்களை கூட தடுக்கும் அதிபயங்கரமான வன்மங்கள் கொண்ட ஊராட்சித் தலைவரை இந்த படத்தில் பார்க்கும் பொழுது நமது ஜனநாயகத்தில் இருக்கும் ஓட்டைகள் தெரிகிறது.

கிராமத்திற்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதியான சாலை வசதி என்பதை கருவாக வைத்து ஒரு சிறப்பான படமாக வெள்ளகுதிர படத்தை எடுத்திருக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் ஓரி அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிராமி போஸ் அவர்களது மகன், அந்த கிராமத்தில் தற்போதைய தலைவியாக இருப்பவர், ரேஷன் கடை ஊழியர் மற்றும் வில்லனாக வரும் முன்னாள் தலைவர் என்று ஒவ்வொருவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்

ராம்தேவின் ஒளிப்பதிவு, பரத் ஆசிவகனின் இசை என்று அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

தவறிழைத்தவன் தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்பதற்கு ஏற்ப, தனது தாத்தா செய்த நற்பெயர்களை மீட்டெடுத்து, தான் பிறந்த கிராமத்திற்கு ஒரு நல்வழி காட்டிவிட்டு, தன் வாழ்நாள் முழுவதும் செய்த தவறுகளுக்கான பிராயசித்தமாக மரணத்தை எதிர்கொள்கிறார் கதாநாயகன்.

வெள்ளகுதிர, குழந்தைகளுடனும் குடும்பத்தினருடனும் சவாரி செய்ய வேண்டிய அற்புதமான படம்!