a K Vijay Anandh review
தங்களது குளோப் மாஸ்டர் விமான மூலம் ராணுவ வீரர்களை, பாரசூட் மூலம் இந்தியாவின் லே லடாக் பகுதிக்குள் இறங்க வைத்து, குழப்பம் விளைவிக்க நினைக்கும் சீன விமானப்படையை, ஒற்றை ஆளாய் தேஜஸ் விமானத்தை எடுத்துக்கொண்டு விரட்டி அடிக்கும் அந்த முதல் காட்சியிலேயே மயிர்க்கூச்செரிய செய்து விடுகிறார் தனுஷ்.
உயர் அதிகாரிகளின் கட்டளைகளை கேட்பதா அல்லது சுயமாக முடிவெடுத்து சீன விமானப்படையை விரட்டி அடிப்பதா என்கிற குழப்பங்களுக்கு எல்லாம் விடை கொடுக்காமல் தேசத்திற்காக துணிந்து முடிவெடுத்து சீன விமானப்படையை விரட்டுவது ஒரு வீரதீரச் செயல் தான் என்றாலும், ராணுவத்தைப் பொறுத்தவரை தன்னிச்சையான முடிவுகளுக்கு இடம் இல்லை தானே!
ஆகவே, அவரது கோபத்தை விடுத்து இயல்பு நிலைக்கு திரும்ப உளவியல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற விமானப்படை உயர் அதிகாரி சிபாரிசு செய்கிறார். பாதுகாப்பு படைகளுக்கான உளவியல் மருத்துவராக, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும், தனுஷின் போட்டோவை பார்த்துவிட்டு லே லடாக் விமானப்படையின் தளத்திற்கு வருகிறார் கிரித்தி சனோன்.
அங்கிருந்து ஆரம்பிக்கும் இருவருக்குமான ஃப்ளாஷ் பேக் காட்சிகள், மோதலும், காதலும், கோபமும் பிரிவுகளுமாய் நீள்கிறது.
படத்தின் அறுபது சதவீதத்திற்கும் மேற்பட்ட காட்சிகளை தனுஷ் மற்றும் கிரித்தி என்று இருவர் மட்டுமே ஆக்கிரமிக்கிறார்கள். இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்படும் நட்பு காதலாக மலர்வது, ஒரு நிபந்தனையுடன் பிரிவது, காத்திருக்க மனம் இல்லாமல் முறிவது என்று உணர்ச்சிப் பிழம்பாய் காட்சிகள் நகர்கின்றன.
அந்த அளவுக்கு இருவருக்கும் இடையிலான உரையாடல்களை மிகவும் கூர்மையாக அதேசமயம் மிகவும் இயல்பாக எழுதியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் எல் ராய்.
திராவிட மாடல்களின் ஆட்சியில் தமிழகத்தில் பிழைக்க முடியாத குருக்கள் குடும்பம் டெல்லிக்கு புலம்பெயர்கிறது. அப்பா ராகவ் குருக்களாக பிரகாஷ்ராஜ், நீதிமன்ற வளாகத்திற்குள் அமர்ந்து நோட்டரி பப்ளிக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். சொற்ப வருமானம், புறா கூண்டு போல வீடு இவற்றை யுபிஎஸ்சி எக்ஸாம் எழுதி ஐஏஎஸ் ஆகி தற்போது ஜாயின் செக்ரிட்டரியாக , பாதுகாவலர்கள் உதவியாளர்கள் புடை சூழ டெல்லியில் தனி பங்களாவில் குடியிருக்கும் , நாயகியின் தந்தை ஏற்றுக் கொள்வாரா …?
நீயும் யுபிஎஸ்சி எழுது …என்று தனுஷை விரட்டுகிறார்.
உண்மையில், கல்லூரியில் புகையும் சண்டைகளுமாக தனுஷ் உள்ளிட்ட மாணவர்கள் திரிந்தாலும், யுபிஎஸ்சி என்கிற தேர்வை பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது, தொடர்ந்து எழுதி தனுஷ் பாஸ் செய்வது போன்ற காட்சிகள் இந்தியா முழுவதும் இந்த படத்தை பார்க்கும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கும் என்றால் மிகையாகாது.
ஏர்போர்சில், தேர்வாகாத அப்துல் கலாம் விஞ்ஞானி ஆகி, ஜனாதிபதியாகவும் பணியாற்றி விட்டார்.
தனுஷோ , யுபிஎஸ்சி அடிப்படைத் தேர்வில் பாஸ் ஆனாலும் அத்தோடு அதற்கு முழுக்கு போட்டுவிட்டு, ஏர் போர்ஸ்க்கு சென்று விடுகிறார்.
அங்கும், விமானப் படையின் மிகச்சிறந்த விமானியாக சக விமானப்படை வீரர்களால் போற்றப்படுகிறார். இதுவும், முன்னுதாரணமான உந்துதலை ஏற்படுத்தும் கதாபாத்திர அமைப்பு.
ஒரு கையெழுத்து போடு …என்னுடைய விமானத்தை எனக்குக் கொடு… என்று வேறு எந்த விதமான பச்சதாபங்களுக்கும் இடம் கொடுக்காமல் தனுஷ், கிரித்தியிடம் பேசும் இடங்கள் அருமை.
பெண் ஒருவருடன் முறிந்து போன காதல் இன்னொரு பக்கம் தேசப் பாதுகாப்பின் மீதான காதல். ஒரு நேரத்தில் ஒரு காதல் தான் தனுஷிற்கு. எந்த காதலில் ஜெயிக்கிறார் என்பதே க்ளைமாக்ஸ்.
இந்திய கப்பற்படையின் ஐஎன்எஸ் விஜய் என்கிற கப்பலை சூழ்ந்து கொள்கிற பாகிஸ்தான் டிஸ்ட்ராயர் போர்க்கப்பலை, பாதி சிதைந்து விட்ட தனது தேஜஸ் விமானம் கொண்டு மோதி அழிப்பதும், அதில் தானும் அழிந்து போவதுமாக, இந்திய விமானப்படையின் வீரத்தை கண்முன் கொண்டு வருகிறார், தனுஷ்.
உங்கள் காதலில் நான், என்கிற தலைப்பு மிகவும் பொருத்தமாக வைக்கப்பட்டுள்ளது, இந்த படத்தை ரசிகர்கள் காதலிப்பார்கள்.