சிறை

mysixer rating 4.5/5

273

a K Vijay Anandh review

தமிழ் சினிமாவிற்கு இன்னொரு நல்ல இளம் கதாநாயகன் கிடைத்து விட்டான். அதுவும் | முன்பொரு யுகத்தில் சிறையில் பிறந்த கிருஷ்ணனை போல, சிறையில் பிறந்திருக்கிறார், எல் கே அக்ஷய் குமார்.

சட்டென்று பார்ப்பதற்கு, குட்டி ஜிவி பிரகாஷ் குமார் போல இருக்கின்ற, எல் கே அக்ஷய் குமார், திரைத் துறையில் தனக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கின்றது என்பதை முதல் படத்திலேயே மிகவும் அழுத்தமாக அற்புதமாக நடித்து நிரூபித்து இருக்கிறார்.

1990 களின் இறுதியில் நடைபெறுவது போல அமைக்கப்பட்ட இந்த திரைக்கதையில், மிகவும் அப்பாவியான அதேசமயம் ஒரு நேர்மையான இளைஞன் அப்துல் ரௌப் ஆக, அக்ஷய் குமார் சிறப்பாக நடத்தி இருக்கிறார்.

கலையரசி, அனிஷ்மா அனில் குமாருக்கும் அக்ஷய் குமாருக்கும் இடையிலான காதல் பாரதிராஜாவே ஆச்சரியப்படும் ஒரு கிராமத்து கவிதை.

காதல், அம்மா மீது கொண்ட பாசம், சிறைக்குள் மாட்டிக் கொண்டு எப்பொழுதுடா வெளியே வருவோம் என்கிற  பதைபதைப்பு என்று எல்லாமுமாக, அக்ஷய் குமார் சிறப்பாக நடித்திருக்கிறார்.

விக்ரம் பிரபு, கும்கிக்கு பிறகு,  இவர் காக்கி சட்டை  போட்ட படங்கள் இவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்திருக்கின்றன வெற்றியும் பெற்றிருக்கின்றன. இவரது தாத்தாவும் நடிகர் திலகமுமான சிவாஜி கணேசன் நடித்து மறுபடியும் வெளியான படையப்பா இந்த மாத தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்று இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது, அவரது ஆசிர்வாதத்துடன், பேரனின் படமும் அதே மாதத்தில் வெளியாகி விக்ரம் பிரபுவிற்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்திருப்பது உண்மையாகவே இயற்கையின் பேரதிசயம். ஒரு பொறுப்புள்ள ஆயுதப்படை காவலராக மிகவும் அட்டகாசமாக நடித்திருக்கிறார் விக்ரம் பிரபு. காவல்துறைக்கு , குறிப்பாக நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கு, குற்றவாளிகள் பக்கம் இருந்து வரும் அழுத்தங்கள் ஒருபுறம், காவல்துறைக்கு ஆதரவாக இருக்க வேண்டிய ஆர்டிஓ மற்றும் நீதித்துறைகளில் இருந்து ஈகோக்களால் எழுப்பப்படும் அழுத்தங்கள் என்று நெருக்கடிகள் எல்லாவற்றையும் சமாளித்து நமது காவல்துறை அதிகாரிகள் சுகதுக்கங்களை மறந்து, சமூக அமைதிக்காக எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை கதிரவன் என்கிற விக்ரம் பிரபு ஏற்றுக்கொண்ட காவல் துறை கதாபாத்திரம் அற்புதமாக விளக்கி இருக்கின்றது.

இப்படியான தொழில் ரீதியான அழுத்தங்களால், விசாரணை கைதிகளை உள்ளூர் அல்லது வெளியூர் நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும் காவலர்களும் தங்களுக்குள் இருக்கும் மனிதநேயத்தை மறந்து விடுகிறார்கள். அதனால், குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு சிறையில் கழிக்கும் காலங்களை விட அதிகமான வருடங்கள் பெரும்பாலான அப்பாவிகள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் குற்ற வாளியாக ஆனவர்கள் – ஆக்கப்பட்டவர்கள் தங்களது வாழ்க்கையின் முக்கியமான பகுதியினை சிறையிலேயே கழித்து தங்களது எதிர்காலத்தை தொலைத்து விடுகிறார்கள். அப்படி ஒரு சூழ்நிலையில், தனது கஸ்டடியில் அழைத்துச் செல்லப்படும் விசாரணை கைதியான அப்துல் ரௌப்பிடம் பேச்சுக் கொடுத்து, அவரைப் பற்றி தெரிந்து கொண்டு அவருக்கு நியாயம் கிடைக்க வழி செய்யும் மனிதநேயமிக்க காவலராக, விக்ரம் பிரபு சிறப்பாக நடித்திருக்கிறார். குற்றவாளிகளை என்கவுண்டர் செய்வது மட்டும் அல்ல, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தண்டனைகள் மற்றும் விடுதலைகளை நீதிமன்றங்கள் மூலமாகவே வாங்கி கொடுத்தலும் சிறந்த காவலருக்கு அழகு என்பதை இவரது கதாபாத்திரம் தெரியப்படுத்தி இருக்கின்றது.

விசாரணை கைதிகளை வெளியூர் நீதிமன்றங்களுக்கு ஆஜர் படுத்த அழைத்துச் செல்லும் பொழுது, அவர்களோடு சேர்ந்து அவர்களுக்கு பாதுகாவலர்களாக வரும் காவலர்களுக்கும் கொடுக்கப்படும் பாஸ்போர்ட் , சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் அவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவங்கள் போன்றவை, மிகவும் யதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டு ரசிகர்களுக்கு மிகவும் புதிய அனுபவத்தை வழங்கி இருக்கிறார்கள் படக்குழுவினர்.

அக்ஷய் குமார் ஏற்றிருக்கும், காவல்துறை மற்றும் நீதிமன்றங்களால் முறையான விசாரணைகள் இன்றி அலைக்கழிக்கப்படும் அப்பாவியான அப்துல் ரௌப் கதாபாத்திரம் போன்று பல ஆயிரக்கணக்கான நிஜமான மனிதர்கள் இருக்கின்றார்கள். என்றாலும், தமிழ் சினிமாவில் அதை ஒரு இஸ்லாமிய கதாபாத்திரமாக வைத்தால் இன்னும் கொஞ்சம் ரசிகர்களை சென்றடையும் என்கிற நோக்கில் வைக்கப்பட்டதாகவே தெரிகின்றது. அப்படியான சித்திரவதைகளை அனுபவிக்கும் யாராக இருந்தாலும் குரல் கொடுக்க வேண்டியது மானுடத்தின் கடமை.

விக்ரம் பிரபு, மாற்று மதத்தில் திருமணம் செய்து கொண்டார் போலும், விக்ரம் பிரபுவின் அம்மா அவருக்கு திருநீறு பூசி விடும் பொழுது மனைவி மரியமாக நடித்திருக்கும் ஆனந்த தம்பி ராஜா பார்க்கும் ஒரு பார்வையிலேயே தெரிந்துவிடுகிறது. அவரும் ஒரு பெண் காவலராக மிகவும் இயல்பாக நடித்திருக்கின்றார்.

படத்தில் எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும், விக்ரம் பிரபு மற்றும் ஆனந்த தம்பி ராஜா ஆகியோரின் அந்த அழகான பெண் குழந்தை வரும் காட்சிகள் எல்லாம் கொள்ளை அழகு.

பிரச்சனைகளின் மையப் புள்ளியாக ரகு இசக்கி நடித்திருக்கிறார். மது, நண்பர்களுடன் சேர்ந்து பலான படம் பார்ப்பது, தன் குறையை மறைத்து மனைவியையும் வீட்டில் உள்ளவர்களையும் போட்டு அடிப்பது என்கிற தமிழகத்தில் பெரும்பான்மையாகிப் போன பொறுப்பற்ற கிராமத்து இளைஞனாக சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் பானு, கேட்கவே வேண்டாம், அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

கதாநாயகன், அக்ஷய் குமாரின் அம்மாவாக வரும் நடிகையும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

கதாநாயகி, அனிஷ்மா அனில் குமார், தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்வரவு. சிறுமியாக இருக்கும் போதிலிருந்து பெரியவரான பிறகும் கை விரல்களில் அப்பளத்தை சொருகிக்கொண்டு கடிக்கும் அழகு அருமை. குடிகார கணவனிடம் மாட்டிக் கொண்டு அக்கா படும் அவஸ்தையையும், அப்பாவியான தனது காதலனை ஒவ்வொரு வாய்தாவிலும் வந்து பார்ப்பதிலும் தனது அழுத்தமான நடிப்பை பதிய வைத்திருக்கிறார்.

நேர்மையான ஒரு நீதிபதியாக நடித்திருக்கும் பிஎல் தேனப்பன், உங்களை இத்தனை ஆண்டுகள் அலைக்கழித்ததற்கு நீதித்துறை சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பேசும் இடம் அருமை. தனது கவனத்தில் வரும் வழக்குகளுக்கு எல்லாம், கண்மூடித்தனமாக வாய்தா வழங்கும் நீதிபதிகள், இனி அந்த தவறுகளை செய்யாத வண்ணம் இவரது காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

ஜஸ்டின் பிரபாகரன், எங்க ஒரு இசை மேதைகளுக்கும் அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களுக்கு இணையான ஒரு கலைஞனை பார்ப்பது அரிது. ஆனால் இளையராஜா என்கிற , மாபெரும் இசைக்கலைஞன் வாழும் காலத்திலேயே, அவரது இசையை எந்த அளவு ரசிகர்கள் கொண்டாடுவார்களோ அதையொத்த இசையை வழங்கும், இளம் இசையமைப்பாளராக  கோலேச்சிக் கொண்டிருக்கிறார்.

மதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு பிலோமின் ராஜின் எடிட்டிங் போன்றவை படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கின்றன.

தமிழ், சிறந்த நடிகர் சிறந்த இயக்குனர்,  மற்றும் சிறந்த கதாசிரியராக தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷமாக தெரிந்து கொண்டிருக்கிறார்.

அவரது கதையை திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும்,  சுரேஷ் ராஜகுமாரி சிறை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் சிறை படுத்தப்படும் தகுதியான இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

சிறை, விசாரணை கைதிகள் என்கிற பெயரில் அநியாயமாக தங்களது வாழ்நாட்களை வீணடித்துக் கொண்டிருக்கும் அப்பாவிகளுக்கு சமர்ப்பணம்!

இந்த படம் பார்த்த பிறகு, அவர்களில் யாரேனும் ஒருவருக்கோ ஒரு சிலருக்கோ நியாயமான சட்ட உதவிகள் கிடைத்து அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு, தண்டனையோ அல்லது விடுதலையோ கிடைத்தால் அதுவே இந்த படத்தின் மாபெரும் வெற்றி.

அப்படிப்பட்ட காவல் துறை அதிகாரிகளை உருவாக்குவது போல இந்த படத்தின் இறுதி காட்சி அமைந்திருப்பதும் பாராட்டத்தக்க ஒன்று.