a K Vijay Anandh review
சில இடங்களுக்கு நாம் செல்லும் பொழுது மருந்துக்கு கூட ஒரு ஈ காக்கை எதுவும் இல்லை என்று சொல்லுவோம்.
அதைப்போல, ரெட்ட தல படத்தில் முக்கியமான கதாபாத்திரங்கள் தவிர அட்மாஸ்பியர் அது இது என்று வேறு யாருமே இல்லை. ஒரு காட்சியில், காளியாக நடித்திருக்கும், அருண் விஜய்க்கு உதவி செய்யும் மூதாட்டியை தவிர.
பாண்டிச்சேரியில் ஒரு சாதாரண கதாபாத்திரம் காளியாக அறிமுகமாகும், அருண் விஜய், கோவாவில் மால்பே உபேந்திரா என்கிற டான் ஆக அறிமுகமாகும் இன்னொரு அருள் விஜயை மட்டுமல்லாது ஒட்டுமொத்த கதாபாத்திரங்களையும் பயமுறுத்தும் பின்னணியை கொண்டிருக்கிறார் என்பது வெளியாகும் இடம் அருமை.
துரந்தர் எஃபெக்ட்டா என்ன என்று தெரியவில்லை, ஆனால் தனது அடையாளங்களை மறைத்து அறிமுகம் ஆகும் அருண் விஜயை பார்க்கும் பொழுது இவர் நம்மூர் ரன்வீர் சிங் என்றே தோன்றியது.
அஜித் – விஜய் க்கு முன்னரே அதாவது கமல் – ரஜினி காலத்திலேயே நடிக்க வந்தாலும், சிம்பு – தனுஷ் சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி என்று ஒரு சமகால போட்டியாளர்கள் இணை வரிசையில் இவர் யாருக்கும் இணையாகவோ அல்லது இவருக்கு யாரும் இணையாகவோ இல்லாமல் இதுவரை தனி ஆவர்த்தனம் பண்ணிக் கொண்டிருந்த அருண் விஜய், இவருக்கு யாரும் இணையாக முடியாது என்கிற அளவிற்கு சமீப காலங்களில் படங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் இந்தப் படம், ஒரு முழுமையான பிளாக் ஆக்சன் படமாக வெளிவந்திருக்கிறது.
அளவாக பேசுகிறார், அட்டகாசமாக சண்டை போடுகிறார் அருண் விஜய் இன்னும் உயரம் செல்வார்.
சித்தி இட்னானி, ஹரிஷ் பேரடி, ஜான் விஜய், தன்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, பாலாஜி முருகதாஸ் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது .
வறுமையில் இருந்து, நொந்து நூலாகி, பணக்காரத் தனத்துக்கு ஆசைப்படும் சித்தி இத்னானி, கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜான் விஜய, சிறந்த நடிகர் தான் என்றாலும் கொஞ்சம் ஓவராக தான் போகிறாரோ என்கிற அளவிற்கு ஆபாச வசனங்களை குறிப்பாக பெண்களுக்கு எதிராக அவர் பேசும் பொழுது முகம் சுழிக்கத்தான் வேண்டி இருக்கிறது.
டிஜோ டாமி, இது ஒரு வகையான பிளாக் ஆக்சன் வகை என்பதை காண்பிப்பதற்காகவே பிரத்தியோகமாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறாரோ என்கிற அளவிற்கு, ஒரு ஹாலிவுட் படம் பார்க்கும் பிரமையை கொடுத்திருக்கிறார்.
சாம் சி எஸ், வழக்கம் போல மிரட்டும் பின்னணி இசை அழகான பாடல்களின் இசை என்று அட்டகாசப்படுத்தி இருக்கிறார்.
ஆண்டனியின் எடிட்டிங் இந்த படத்தில் மாயாஜாலங்கள் நிகழ்த்தி இருக்கிறது. கொஞ்சம் அசந்தாலும், ஏன் அப்படி நடந்துச்சு எதனால் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பக்கத்தில் உட்கார்ந்து படம் பார்ப்பவர்களை நச்சரிக்க வேண்டி வரும், ஆகவே கண் சிமிட்டாமல் பார்த்து மகிழ்வது நல்லது, கொடுத்து டிக்கெட் காசு வீணாகாமல் இருக்க.
இதுவே 20 ஆண்டுகளுக்கு முன்னர் என்றால், இன்னொரு அருண் விஜய் எப்படி இன்று ஒரு ட்ராக் சென்றிருக்கும். ஆனால், உருவ ஒற்றுமை உள்ள இருவர் என்கிற ஒரு லைனில் இந்த கதை விறு விறு என்று பயணிக்கிறது.
ஒருவரை சாதாரணமாகவும் இன்னொருவரை அவரைவிட எல்லா வகையிலும் பலசாலியாகவும் காட்டிவிட்டு, கிளைமாக்ஸ் இல் முன்னவர் இரண்டாமானவரை மட்டும் அல்ல, சகலரையும் விட சக்தி வாய்ந்தவர் என்று காட்டும் திரைக்கதை யுக்திக்கு இயக்குனர் கிரிஷ் திருமுருகனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
தனியா ரவிச்சந்திரன் துப்பாக்கியை எடுத்து வைக்கிறார், அப்பாவியாக அருண் விஜய் அவருடன் காரில் பயணிக்கிறார்.
துப்பாக்கிச்சுடும் சத்தம் மட்டும் கேட்கிறது.
ரெட்ட தல, பார்ட் 2 க்கு அழகான லீட் கொடுக்கிறார்கள்.
ரெட்ட தல, ஹாலிவுட் ஆக்சன் விருந்து தமிழில்!