க்ராணி

mysixer rating 3/5

165

a K. Vijay Anandh review

சூனியக்கார கிழவி,  கிராமம், குழந்தைகள், நெஞ்சுக்கறி அதாவது இதயம் என்று மிரட்டி இருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு   திகில் படம் தமிழில் சமீபத்தில் பார்த்ததில்லை எனும் அளவிற்கு மிகவும் அதிபயங்கரமான விஷயத்தை துளியும் சோர்வடையாத வண்ணம் கொடுத்திருக்கிறார்கள்.

வெளிநாட்டில் இருந்து வேலையை உதறிவிட்டு சொந்த கிராமத்தில் சொந்த வீட்டில் வசிப்பதற்காக தனது இரு குழந்தைகளுடன் வரும் ஆனந்தநாக் மற்றும் அபர்ணா.

இன்னொரு பக்கம் 9 வயது குழந்தைகள் கொல்லப்பட்டு அவர்களின் இதயம் மட்டும் தோண்டி எடுக்கப்படுகிறது.

இவர் நல்லவரா கெட்டவரா என்று தெரியாத வகையில் ஊர் தலைவர் கஜராஜ் கதாபாத்திரம்.

பார்த்தாலே பயமுறுத்தும் ஆனந்த் நாக், வீடு.

60 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் குழந்தைகளின் கொலை மற்றும் இதயம் திருட்டு சம்பந்தமான குற்றங்களில் விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் காவல்துறை.

புதிதாக பயிற்சி காவலராக இருக்கும் திலீபன் இந்த முடிச்சை நான் அவிழ்ப்பேன் என்று களம் இறங்குகிறார். 30 வருடங்களாக நான் ஏட்டாக இருக்கிறேன், எனக்கு தெரியாததா என்று சிரிப்பு போலீஸ் ஆக அறிமுகமாகவும் சிங்கம் புலி.

இன்னும் இரண்டு குழந்தைகளின் இதயத்தையும் 100 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் பூவையும் சமைத்து சாப்பிட்டு விட்டால் தனது கணவரின் ஆசைப்படி தனக்கு இளமை திரும்பி விடும் என்பதற்காக தங்களது பூர்வீக வீட்டிற்கே வந்து சேரும் ஒச்சிப் பாட்டியாக வடிவுக்கரசி.

இன்னொரு பக்கம் நூறு ஆண்டுகளாக பூட்டி கிடக்கும், அம்மன் ஆலயம்,  ஊர் தலைவர் கஜராஜ் அங்கு செய்ய வேண்டிய பூஜை, நூறாண்டுகளாக சன்னிதானத்திற்குள் தீபம் இருந்து கொண்டிருப்பது என்று அட்டகாசப்படுத்தி இருக்கிறார்கள்.

அந்த பாரம்பரியமான பழைய பிரமாண்டமான வீட்டின் மூலை முடுக்குகளை எல்லாம் நன்கு தெரிந்து வைத்திருக்கும் வடிவுக்கரசி, ஒரே ஆயுதத்தை பயன்படுத்தி வீட்டின் அத்தனை கதவுகளையும் மூடுவதும் திறப்பதும் என்று பயமுறுத்தி இருக்கிறார்.

வாய் பேசவும் முடியாத காதும் கேட்காத ஆனந்த் நாக்கின் இரண்டு குழந்தைகளாக மாஸ்டர் ஞான்ஷியாம், பேபி சாண்ட்ரியா இருவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் சூனியக்காரி பற்றி உண்மையை தெரிந்து கொண்ட, திலீபன் துணிச்சலுடன் அந்த வீட்டிற்குள் நுழைந்து அந்த குழந்தைகளை காப்பாற்றுகிறாரா..? இல்லையா ? என்பதே பரபரப்பான கிளைமாக்ஸ்.

ஆனந்த்நாக் , அபர்ணா ஆகியோர் இயல்பாக நடித்திருக்கிறார்கள். துணிச்சலான காவல்துறை அதிகாரியாக திலீபன் இந்த படத்தில் கவனிக்கத்தக்க விதத்தில் நடித்திருக்கிறார். எத்தனை ஆண்டுகள் ஒரு போலீஸ்காரர் வேலை பார்த்தார் என்பது முக்கியமல்ல எப்படி வேலை பார்த்தார் என்பதே முக்கியம் என்று பேசும் வசனம் சிங்கம் புலிக்கு ஒரு உத்வேகம் கொடுப்பதும் அதைத்தொடர்ந்து, அடுத்த ஒரு ஆண்டிற்குள் ஓய்வு பெறப்போகும் நிலையிலும் தனது உயிரை கொடுத்து அந்த குழந்தைகளை சிங்கம் புலி காப்பாற்றுவதும் உணர்ச்சிகரமான காட்சி அமைப்புகள்.

வழக்கம் போல வடிவுக்கரசி மிக சிறப்பாக நடித்திருக்கிறார். கூன் விழுந்தபடியே நடந்தாலும்,  ஒவ்வொருவரையும் விஸ்வரூபம் எடுத்து அடிக்கும் காட்சிகளில் பயமுறுத்தியும் இருக்கிறார்.

ஆனாலும் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு இந்த ஒச்சிப்பாட்டியை ஒன்றும் செய்ய முடியாது, என்பதாக படத்தை முடித்து இயக்குனர் விஜயகுமாரன் படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்களின் மனதிலும் பயத்தை விதைத்து விடுகிறார்.

கிராணி, திகில் விருந்து!