Lockdown

mysixer rating 3/5

79

a K Vijay Anandh review

வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறாளே என்கிற எண்ணத்தில் சரி போனது போயிட்ட பார்டிய என்ஜாய் பண்ணு… என்று சொன்ன தோழி, கொஞ்சம் கவனமா இருந்துக்கோ என்று சொல்ல மறந்ததன் விளைவால் அனுபமா பரமேஷ்வரன், அடுத்த சில மாதங்களில் கர்ப்பவதியாக படும் அவஸ்தை தான் லாக்டவுண் படத்தின் உணர்ச்சிபூர்வமான திரைக்கதை.

இதில் அனுபமா பரமேஷ்வரனின் தவறு, எதுவுமே இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதுவரை ஒழுக்கமாக இருந்துவிட்டு பப்புக்கு சென்ற முதல் தடவையிலேயே, அளவுக்கு மீறி மதுவை உட்கொள்வது ஒன்று போதாதா.?

ஆண்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் , என்கிற அறிவுரை பப்புக்கு வரும் ஆண்களுக்கு பொருந்துமா என்ன.?

ஆணும் பெண்ணும் தகாத உறவு தெரிந்தே வைத்துக் கொண்டாலும் அதில் பாதிக்கப்படுவது என்னவோ பெண்தானே..? அவளுக்கு மட்டுமே கர்ப்பம் தரிக்கும் குணம் இருக்கிறது.

தன்னை முழுமையாக நம்பும் பெற்றோர்களிடம் எப்படி இதனை தெரியப்படுத்துவது என்கிற பயமே, முகம் தெரியாதவர்களை நம்பி தொலைக்க வைக்கிறது.

அப்படி முகம் தெரியாதவர்களை நம்பி, தன்னுடைய கற்பை …என்று சொல்ல முடியாது தன்னுடைய நெறியான வாழ்க்கையை … பறிகொடுத்து விட்டு கடைசியில் முகக்கண்ணாடியில் தன் முகத்தின் மீது காரி துப்பிக் கொள்கிறார் அனுபமா பரமேஷ்வரன்.

இப்படி ஒரு உணர்வுபூர்வமான திரை கதையை கொரோனா லாக்டவுன் பின்னணியில் அமைத்து, விறுவிறுப்பான படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் AR ஜீவா.

கேட்டவுடன் பத்தாயிரம் ரூபாய் கொடுத்த அந்த ஹெச் ஆர் மேனேஜரை சந்தேகப்படுவதா, காதல் நிராகரிக்கப்பட்ட ராஜ்குமாரை சந்தேகப்படுவதா, அல்லது பப்பில், அனுபமா மட்டையாகி விட்டார் என்ற தகவல் சொன்ன ராஜ்குமாரின் நண்பனை சந்தேகப்படுவதா.?  அல்லது அந்த பப்பிற்கு வந்த யாராவது ஒருவரை சந்தேகப்படுவதா…?

அனுபமா பரமேஷ்வரனின் மூலம் ஏதோ ஒரு வகையில் ராஜ்குமாருக்கும் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கிறது. இப்படி ஒரு வருமானத்தை வைத்துக்கொண்டு தான் இவர் அனுபமா பரமேஷ்வரனுக்கு ப்ரொபோஸ் செய்தாரா என்கிற கோபமும் எழுகிறது.

இன்னொரு பக்கம் சார்லி,  நிரோஷா என்று அனுபமா பரமேஷ்வரனின் பெற்றோர்கள் பாட்டி,  தங்கை என்று ஒரு அழகான நடுத்தர வர்க்கமும், நடுத்தர வர்க்கத்தின் பெண்ணைப் பற்றிய கவலைகளை பதட்டத்துடன் வெளிப்படுத்தும் பெற்றோர்களாக நிரோஷா மற்றும் சார்லியும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

அனுபமா பரமேஷ்வரனின் தோழியாக நடித்திருக்கும் பிரியா வெங்கட் கவனிக்க வைத்திருக்கிறார்.

ஆண் குழந்தைகளோ,  பெண் குழந்தைகளோ தெரிந்தோ தெரியாமலோ செய்து மாட்டிக்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலைகளில், மூன்றாவது மனிதர்களிடம் தீர்வைத் தேடிப் போவதை விட தங்களை எப்பொழுதும் நேசித்துக் கொண்டிருக்கும் தங்கள் பெற்றோர்களிடம் சொல்லிவிடுவது ஆகச் சிறந்ததாக இருக்கும் என்பதாக படம் முடிகிறது, அது நிஜம் தானே!

லாக் டவுன், பெண்களுக்கான ஒரு விழிப்புணர்ச்சி படம்!