LSS

mysixer rating 4.5/5

102

a K Vijay Anandh review

படிப்பு படிப்பு படிப்பு என்று புத்தகப் புழுவாக மற்றும் நல்லவனாக இருக்கும் நாயகன். அவனுடைய நல்ல குணங்களை பார்த்து காதலிக்கும் நல்லவளாக இருக்கும் நாயகி.

இதுபோன்று நேர்மறையான மையக கதாபாத்திரங்களைக் கதை மாந்தர்களாக சொல்லி வரும் படங்கள் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்கிற உணர்வு.

நாயகனாக நடித்திருக்கும் ஆதவ் கிருஷ்ணா,  அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற அருமையான தேர்வு. ஆசிரியர்களுக்கு நல்ல மாணவனாகவும், பெற்றோர்களுக்கு நல்ல மகனாகவும், தன்னை காதலித்தவளுக்கு மிகவும் உண்மையாகவும் என அற்புதமாக நடித்திருக்கிறார்.

சிம்ரன், 16 வயதினிலே குஷ்புவிற்கு பிறகு இதுவரை எத்தனையோ ஆயிரம் பேர் கதாநாயகிகளாக  அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களில் பலரும் தேவதைகளாகவும் பேரழகிகளாகவும் திறமைசாலிகளாகவும் ஜொலித்திருக்கிறார்கள். ஆனால், 16 வயதிலேயே குஷ்பூ க்கு என்று ஒரு தனி வசீகரம் இன்று வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதைப்போல ஒரு தனி வசீகரமாக சிம்ரன் மின்னுகிறார், இது என்னுடைய தனிப்பட்ட கருத்துதான். ஒவ்வொருவரின் ரசனையும் மாறுபட்டது. அதே நேரம் இந்த படத்தில் சிம்ரன் தோன்றும் முதல் காட்சியிலேயே இவரை பிடித்து விடுகிறது என்கிற எனது கருத்தை நிச்சயமாக ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். சிறுவயதிலேயே, தனது காதலனுடன் ஓடிப்போன தாய், தாயின் அரவணைப்பு கிடைக்காமல் வளரும் நாயகி, தனக்கு பிடித்தமானவனை கண்டு கொண்ட பிறகு தாயை பார்த்து ஆசீர்வாதம் வாங்க நினைக்கும் தருணம் என்று இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளே கதை ஓட்டத்திற்கு முதுகெலும்பாக அமைந்திருக்கின்றன.

படவா கோபி, வினோதினி என்று நாயகனின் அன்பான குடும்பம் ஒரு பக்கம். பணத்திமிர் பிடித்த நாயகியின் குடும்பம் இன்னொரு பக்கம்.

இரண்டாவது பாதியில், படம் வாரணாசிக்கு சென்று விடுகிறது, இரண்டாவது பாதி முழுவதுமே அங்கு தான் நடக்கின்றது. என் எஸ் சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு ஜாலத்தில் வாரணாசி என்கிற காசியின் அழகான வீடுகள் மற்றும் தெருக்கள்,  பறந்து விரிந்த கங்கையின்  அழகு என்று ஒவ்வொரு பிரேமும் செதுக்கப்பட்டிருக்கிறது.

அஸ்வமித்ராவின் இசையும் படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றது.

இயக்குனர் ஆர் மகாலட்சுமி முருகனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சென்னைக்கு வந்தவுடன் யாருக்கும் உதவி இயக்குனர் வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. சினிமா அலுவலகங்களில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு படிப்படியாக இயக்குனர் அந்தஸ்தை அடைந்து முன்னேறியவர்கள் பலர். அந்த வரிசையில், ஆர் மகாலட்சுமி முருகனும், ஒரு அழகான கதையை மிகவும் நேர்த்தியாக கொடுத்து நம்பிக்கை தரும் இயக்குனராக அடியெடுத்து வைத்திருக்கிறார்.

அவரது கனவை நனவாக்கிய, தயாரிப்பாளர் பி ரகுவுக்கும்  வாழ்த்துக்கள். இவர்கள் வியாபாரத்திற்காக படம் எடுக்கவில்லை, சமூகப் பொறுப்புடன் அழகான ஒரு படைப்பை கொடுத்திருக்கிறார்கள்!

Love Subscribe Share என்கிற தலைப்பிற்கு ஏற்றவாறு, இந்த படத்தை ரசிகர்கள் லவ் பண்ணி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.