a K Vijay Anandh review
டிசம்பர் 31 , 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், இன்னும் சில மணி நேரங்களில் புத்தாண்டை வரவேற்க, அங்கிருக்கும் குடியிருப்புவாசிகள் ஆடலும் பாடலும் விளையாட்டுகளுமாக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த களேபரங்களுக்கு நடுவே, ஆனந்த் நாக் – அபர்னதி தம்பதியரின் 4 வயது மகள் காணாமல் போகிறாள். இளம் அட்வகேட் ஸ்டீபனாக நடித்திருக்கும் அஜய் கார்த்திக்கினை பிந்தொடர்ந்து செல்லும் அந்த குழந்தை என்ன ஆகிறது என்பது தான் விறுவிறுப்பான காளிதாஸ் 2 வின் திரைக்கதை.
சுரேஸ் பாலாவின் ஒளிப்பதிவு மற்றும் சாம் சி எஸ்ஸின் இசை இரண்டும் சேர்ந்து நம்மை உச்சக்கட்ட பயத்திற்கு இட்டுச்செல்கிறது. கூடவே அஜய் கார்த்திக்கின் ஒரு சீரியசான முகபாவம், அதற்கு முந்தைய காட்சியில் தான் ஒருத்தனை போட்டுத்தள்ளீயிருப்பார்.
அந்தக்குழந்தைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்கிற பதைபதைப்பு படம் பார்ப்பவர்களைத் தொற்றிக்கொள்ளும்.
இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தலைமையிலான போலீஸ் படை உடனடியாக களத்தில் இறங்க, அந்தக்குழந்தையை கண்டுபிடிக்கிறார்களா..? இல்லையா என்பதே மீதிக்கதை.
கிராமங்களில் கூட, தெருக்களில் கூட குழந்தைகளைத் தனியாக விட்டுவிடலாம், ஆனால் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக விட்டு விடக்கூடாது. ஒவ்வொரு பிளாட்டாக ஏறி இறங்கி கண்டுபிடிப்பது மரண அவஸ்தை மற்றும் உச்சக்கட்ட சிரமம்.
காளிதாஸ் தொடர்கள், இனி ஜேம்ஸ்பாண்ட் தொடர்கள் போல, அருமையான புலனாய்வு கதைகளாக ரசிகர்களை மகிழ்விக்க வந்துகொண்டே இருக்கும். அந்தளவிற்கு, காளிதாஸ் என்கிற காவல்துறை கதாபாத்திரத்திற்கு பரத், உயிர்கொடுத்துவிட்டார். துடிப்பும் , புத்திசாலித்தனமும் அதே நேரம், அவர் கடைபிடிக்கும் நிதானமும், இவர் ஒரு வித்தாயசமான நடிகர் என்கிற பெயரை வாங்கிக் கொடுத்துவிட்டன. அந்தளவிற்கு, நடிகர் பரத் ஆக இல்லாமல், காவல்துறை அதிகாரி காளிதாஸாக பரத் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார், இந்தப்படத்திலும், சிறப்பான அதே நேரம் மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். அதிலும் குறிப்பாக, தன்னை விட வயதில் இளவயதானாலும், நேரடி ஐ பி எஸ் ஆக பதவியேற்று , பொறுப்பிற்கு வந்திருக்கும் பவானி ஸ்ரீயுடன், அந்த பதவிக்கே உரிய மரியாதைகளை வழங்கி, அவர் இடும் கட்டளைகளை செவ்வனே நிறைவேற்றும் இடங்களில், ஒரு நிஜப்போலீஸாகவே வாழ்ந்துகாட்டியிருக்கிறார்.
இளம் ஐபி எஸ் அதிகாரியாக வரும் பவானி ஸ்ரீ, ஒரு துடிப்பான அசிஸ்டண்ட் கமிஷனராக அற்புதமாக நடித்திருக்கிறார்.
குழந்தையை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் தம்பதியாக ஆனந்த் நாக் – அபர்னதியும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
பூவே பூச்சுடவா நாயகி சங்கீதா, மிகவும் சாதாரணமாக அறிமுகமாகி, கதையை முடித்துவைக்கும் இடத்தில் விஸ்வரூபம் எடுத்துவிடுகிறார்.
டி எம் கார்த்திக் சீனிவாசன் உள்ளிட்ட அபார்ட்மெண்ட் வாசிகள் குறிப்பாக குழந்தை நட்சத்திரங்கள் என்று அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
முன்னாள் தாதாவாக, இந்நாள் கறிக்கடைக்கார் வாலிநோக்கம் பாண்டியாக கிஷோர் சிறுது நேரமே வந்தாலும் நல்ல கதாபாத்திரம்.
மூத்த வழக்கறிஞர் நடராஜனாக வரும் பிரகாஷ்ராஜ், ஒரு கெத்தான கதாபாத்திரத்தில் வழக்கம் போல சிறப்பாக நடித்திருக்கிறார். பரத் மற்றும் பவானி ஸ்ரீ பார்வையில் குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் ஸ்டீபன் அஜய் கார்த்திக்குகாக இவர் ஏன் இவ்வளவு வக்காலத்து வாங்குகிறார் என்று தோன்றும். அதற்கான நியாயமான காரணங்கள் தெரியவரும் போது, அப்பாடா என்று இருக்கும்!
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அனைவரையும் விட இந்தப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிபவர்கள் இரண்டு பேர். ஒன்று காணாமல் போகும் அந்தக்குழந்தை, இரண்டு, குழந்தையை இவர் கடத்தியிருப்பாரோ என்று சந்தேகப்படும் ஸ்டீபன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஜய் கார்த்திக்.
ஏற்கனவே ஒரு பாலியல் வழக்கில் சிறைக்குச் சென்று, மூத்த வழக்கறிஞர் நடராஜனால் விடுவிக்கப்பட்டு, அவரிடமே ஜூனியராக பணியாற்றுபவர் என்று அறிமுகமாகும் அஜய் கார்த்திக், பழைய வலிகாள் சிரிப்பை தொலைத்துவிட்டவராக சீரியசான இளைஞனாக அற்புதமாக நடித்திருக்கிறார்.
கிரைம் திரில்லர் படத்திற்கே உரிய ஒளிப்பதிவு மற்றும் இசை என்று இந்தப்படம் நிச்சயம் ரசிகர்களைக் கவரும். பாடலாசிரியர்கள் டைட்டில் கார்டில் மகாகவி பாரதியார் பெயருடன் மோகன் ராஜன் பெயர், உண்மையில் மோகன்ராஜன் அதிஷ்டசாலி மட்டுமல்ல மெச்சத்தக்க பாடலாசிரியரும் கூட!
முன்பே குறிப்பிட்டது போல, காளிதாஸ் – தொடர்கள் நிச்சயம் இயக்குநர் ஸ்ரீ செந்திலை, குறிப்பிடத்தக்க உயரத்திற்கு இட்டுச்செல்லும்.
காளிதாஸ், ரசிகர்களுக்கு பிடித்த, தாசன்!