கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்.. என்கிற திருப்பாவை வரிகளுக்கும் இந்தப்படத்தின் தலைப்பிற்கும் சம்பந்தமில்லை. மாறாக, மேனியை எப்பொழுதுமே காருக்குள்ளேயே வைத்திருப்பவன், அதாவது எந்நேரமும் கார் ஓட்டிக்கொண்டிருப்பவன் என்கிற பொருளில் வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.
சொந்தமாக ஒரு இடம் வாங்கி வீடு கட்டவேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் வரும் தான், குறிப்பாக, காற்றோட்டமில்லாத, மக்கள் நெருக்கம் அதிகமுள்ள, அடிப்படை வசதிகள் இல்லாத இடங்களில் வசிப்பவர்களுக்கு அந்த ஆசையே பிரதான ஆசையாக இருக்கும், அதில் சந்தேகமே இல்லை.
ஆனால், ஐந்து கிரவுண்டில் ஒரு வீடு, மருந்துக்குக் கூட பக்கத்துவீட்டுக்காரன் எவனும் கண்ணில் படல, ஏன் சமுத்திரக்கனி குடியிருக்கும் வீட்டை ஒட்டி, பக்கத்துவீடு என்று ஒன்று இல்லவே இல்ல. வீட்டிற்கு நேர் எதிரே கடல், அதுவும் சுனாமியே வந்தாலும் ஒன்றும் செய்யாது என்கிற அளவில், தடுப்பு அணைகள் போடப்பட்டு ஏரி மாதிரி காட்சி தரும் கடல். அவ்வப்போது ஜாலியாக படகுப்பயணம். அப்படி ஒரு சூழ் நிலையில் சென்னையில் இதயத்தில் இருந்து கொண்டு, சென்னைக்கு மிக அருகே இடம் வாங்க கடன் வாங்க முயல்வது மட்டும் ஒரு சிறிய நெருடல்.
கடன்பட வேறு ஒரு காரணத்தை யோசித்து சிறப்பாக ஒரு கடமையாற்றியிருக்கலாம் இயக்குநர் ராம் சக்ரி.
மற்றபடி, இதுபோன்ற கதைகளுக்கென்றே அவதாரம் எடுத்தவர் சமுத்திரக்கனி என்று சொல்லும் வகையில், ஒரு நடுத்தர குடும்ப கணவனாக, 5 வயது மகனின் அப்பாக, பெரிய தொழிலதிபரின் வீட்டு விசுவாசமான டிரைவராக அற்புதமாக நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் இவருடன் ஜோடி சேர்ந்திருப்பது லட்சுமி பிரயா சந்திரமவுலி, வழக்கம்போல சிறப்பாக நடித்திருக்கிறார், தள்ளுவண்டி உணவகம் நடத்துபவராகவும், உறவுகளால் அவமானப்படுபவராகவும், கணவனுக்கு எந்த சூழ் நிலையிலும் உறுதுணையாக இருப்பவராகவும்.
அவர்களின் மகனாக வரும் அந்த சிறுவன், குறிப்பாக கோபத்தில் பட்டங்களை கிழித்துப்போடும் காட்சிகளில் அருமையாக நடித்திருக்கிறான்.
இன்னொரு பக்கம் மிகவும் நல்ல மனிதர்களாக – சமுத்திரக்கனியின் முதலாளியாக கெளதம் வாசுதேவ மேனன் மற்றும் அபி நயா ஆகியோரும், சார்ஜாவில் சமுத்திரக்கனிக்கு வேலை வாங்கிக்கொடுப்பவர், சார்ஜா முதலாளி, உடன் தங்குபவர்கள் என்று அனைவரது கதாபாத்திரங்களும் மிகவும் நேர்மையானவர்களாக நல்லவர்களாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
சினிமா ஒரு பெரு வணிகம் ஆகிவிட்ட சூழ் நிலையில், இப்படத்தின் கதை, யானைப்பசிக்கு சோளப்பொரி போன்று அமைந்திருப்பதுதான் சிறிய நெருடல்!
தேவையில்லாத விஷயங்களுக்காக, தேவையான விஷயங்களை இழந்துவிடாதீர்கள் என்கிற அறிவுரை நன்று!