லெனின் பாண்டியன்

Rating 4/5

49

a K Vijay Anandh review

ஒரு அறிமுக நாகனுக்கு இதை விடச்சிறப்பான ஒரு கதைக்களம் கிடைக்க முடியாது. அட ஒரு அறிமுக நாயகன் இல்லை, இரண்டு அரிமுக நாயகர்கள். ஒன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன், இன்னொன்று நடிகர் திலகத்தின் மகன் பிரபுவை நாயகனாக அறிமுகப்படுத்திய கங்கை அமரன்.

சிறுமை கண்டு பொங்கும்  மூத்த குடிமகனாக கங்கை அமரனும் சக, காவலர்களால் சிறுமைப்படுத்தப்படும் காவலராக தர்ஷன் கணேசனும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

மனிதனுக்கு பலம் என்பது, உடற்கட்டிலோ , குவித்து வைத்திருக்கும் பெரும்பணத்திலோ, சுற்றி நிற்கும் அடியாட்களின் எண்ணிக்கையிலோ இல்லை, அது, உள்ளத்தில் நேர்மை, அந்த நேர்மைக்காக கிடைக்கும் வலிகளை பொறுத்துக்கொள்ளும் மன உறுதி ஆகியவற்றில் அடங்கியுள்ளது என்கிற பாடத்தை கங்கை அமரனின் கதாபாத்திரம் உணர்த்தும்.  தளர்ச்சியான நடை, உறுதியான நடவடிக்கை என்று கங்கை அமரன், நமது கிராமத்து பெரிய மனிதர்களை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். வயதானாலும் குழந்தையாக இருக்கும் அவரை பார்த்துக்கொள்ளும் இன்னொரு குழந்தையாக நடுத்தர வயது வாழ்க்கைத்துணையாக ரோஜா, அவரும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.

தர்ஷன் கணேசன், மாறவர்மன் சுந்தரபாண்டியன், அட என்ன ஒரு அழகான தமிழ்ப்பெயர், அந்தப்பெயரைப்போலவே அவரது கதாபாத்திரமும் அழகு.  கருணை அடிப்படையில் வேலை வாங்கினாலும், கடைசியில் வில்லன்களை கருணையே இல்லாமல் சுட்டு வீசும் இடங்களில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். உண்மையில் நடிகர் திலகம் வீட்டில் இல்லாமல் மற்ற நடிகர்கள் தான் சிவாஜியின் சாயலை எங்காவது கொண்டு வந்துவிடுகிறார்கள்.ஆனால், அந்த குடும்பத்தில் இருந்து வரும் எந்த நடிகரும் சிவாஜியின்  நிழலாக இல்லாமல், தங்களுக்கு என்று ஒரு தனி பாணியை பின்பற்றுவது ஆச்சிரியம், அதே வரிசையில், தர்ஷன் கணேசனும் மிகவும் இயல்பாக அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்திப்போகிறார்.

அவருக்கு ஜோடியா நடித்திருக்கும் ஷ்ரித்தா ராவ், இன்னொரு  புரட்சிகரமான ஒரு பெண்ணியப்போராளி போன்று அட்டகாசமாக நடித்திருக்கிறார். கிராம நிர்வாக அலுவலராக வரும் அர்ச்சனா , அற்புதம். ஒரு சில காட்சிகளிலே வந்தாலும்.

வழ்க்கம் போல ஒரு மோசமான காவல்துறை அதிகாரியாக போஸ்வெங்கட் கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கிறார்.  முக்கிய வில்லனாக யுகேந்திரன், அட தொடர்ந்து தமிழ்ப்படங்களில் நடிங்க பாஸ் என்று ரசிகர்கள் சொல்லப்போவது நிச்சயம்.

நீதிபதியாக வரும் ஜார்ஜ் மரியன், ”அரசு அதிகாரி என்று சொல்லாதீங்க… அலுவலர் என்று சொல்லுங்க..” என்று காவல்துறை உயரதிகாரிடம் கூறுமிடம் உள்ளிட்ட ஒவ்வொரு காட்சியிலும் கைதட்டல்களை அள்ளுகிறார்.

என்னடா இது ஜோதிடர் ஷெல்வி மாதிரி ஒரு ஒப்பனையில் இயக்குனர் ஏ வெங்கடேஷ், மிகவும் வித்தியாசமாக நடித்திருக்கிறாரே என்று பார்த்தால், அட நம்ம யதார்த்த ஜோதிடர் ஷெல்வியே தாங்க! இரண்டே காட்சி,  நச்சுனு வந்து போகிறார்.

ஏ எம் எட்வின் சகாயின் ஒளிப்பதிவில் சிவகங்கை சுற்றுவட்டார பகுதிகள் அற்புதமாக படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன.  இளையராஜாவின் இசையை பற்றி தனியாக சொல்லவேண்டுமா..? தம்பி நாயகனாக அறிமுகமாகும் படம் அல்லவா, சிற்ப்பாக மீட்டியிருக்கிறார்.

யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்காத டி டி பாலச்சந்திரன், லெனின் பாண்டியனை அற்புதமாக எழுதி இயக்கியிருக்கிறார். கருணை அடிப்படையில் வேலைக்கு சேர்ந்த தர்ஷனை சிறுமைப்படுத்தும் சக காவலர்கள், உரிமைக்காக போராடும் கங்கை அமரன், மணல் மாபியா என்று மூன்று லேயர்களையும் அற்புதமாக இணைத்து லெனின் பாண்டியனை ஒரு விறுவிறுப்பான சினிமாவாக கொடுத்திருக்கிறார்.

சிறந்த அறிமுக நாயகன் விருது  தர்ஷன் கணேசனுக்கா ? கங்கை அமரனுக்கா ? பெரிய விவாதமே ஏர்படலாம்!