கே பாலசந்தர், தனது வாழ்நாளில் இயக்காமல் விட்ட ஒரு ரஜினி-கமல் கூட்டணி படத்தை பார்த்தது போன்ற ஒரு பிரமை. ரிஷிகாந்தா ? ரிஷிகேஷ் போய்விட்டு இளமையாக திரும்பி வந்த ரஜினிகாந்தா என்று ஆச்சிரியப்படும் அளவிற்கு ரிஷிகாந்த், இவ்வளவு இளம் வயதிலேயே கமலை தூக்கிச்சாப்பிடும் அளவிற்கு திருநங்கை வேடம் ஏற்று நடித்திருக்கும் சனந்த் குமார் இருவரும் அப்படி எண்ண வைத்திருக்கிறார்கள்.
சரி, டோரதி கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியிருக்கும் படம் தான். அதிலும் ஒரு விசேஷம், பீட்சா கார்த்திக் சுப்புராஜிலிருந்து பல களங்களை கண்டு விட்டு, முற்றிலும் புதிய கார்த்திக் சுப்புராஜாக முதலில் இருந்து ஆரம்பித்திருக்கிறார் தனது இயக்குனர் வாழ்க்கையை. டோரதியின் களம், கதை, திரைக்கதை, மேக்கிங் என்று அப்படித்தான் நினைக்கத்தோன்றுகிறது.
கார்த்திக் சுப்புராஜ், அர்த்தநாரீஸ்வரராக மாறி, சிவனாக ரிஷிகாந்தையும் பார்வதியாக சனந்த் குமாரையும் கதாபாத்திரங்களாக்கி இந்தக்கதையை எழுதியிருக்கிறார் போலும். இருவரின் கதாபாத்திர பெயர்களும் கார்த்திக் மற்றும் சுப்பு.
சில பகுதிகளில் , சில வீடுகளில் அப்படித்தான்., ஒரு பெண், தாயாகவோ, பாட்டியாகவோ, மகளாகவோ, மருமகளாகவோ, சகோதரியாகவோ முழுமையாக தன் வாழ்நாளை கழிப்பது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம் தான். பெண்மையை மதிக்காத முரடர்கள், பாதுகாக்கத்தெரியாத மூடர்கள் மாமனாராகவும் , புருஷன்களாகவும் இருக்கும் வீட்டில் இரண்டாவது மருமகளாக குடிபுகும் கீர்த்தி சுரேஷின் ஆயுளும் அற்ப ஆயுளாக முடிந்துவிடுகிறது. அவருக்கும், அந்த வீட்டு கடைக்குட்டி கொழுந்தன் சுப்புவுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களை படம் முழுவதும் வைத்திருந்து விறுவிறுப்பாக்கியது கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான திரைக்கதை.
முரட்டு மாமனாராக முத்துக்குமார், பெண்கள் என்றாலே வாயில் போட்டு துப்பும் வெற்றிலை எச்சில் போன்றுதான் அவரது சுபாவம். அப்பனுக்கு தப்பாமல் பிறந்த முதலிரண்டு மகன்களாக முத்துப்பாண்டியும் செளந்திர ராஜாவும், குடி அடிதடி எப்பொழுதும் ஒரு முரட்டத்தனம் என்று வாழ்ந்திருக்கிறார்கள். முத்துக்குமார், தவெகவின் பிரச்சார பீராங்கியாக எந்த நேரமும் விசிலடித்துக்கொண்டே வருவது புதுமை. அந்த வீட்டு ஆண்கள், நடைப்பிணங்களாகவும், பெண்கள் புகைப்படங்களாகவும் இருக்கும் காட்சி ஒன்று போதும், ஆயிரம் கதைகளைச் சொல்லிவிடுகிறது.
கார்த்திக்சுப்புராஜ் இயக்குனரானதே அவரது அப்பாவை நடிகராக்குவதற்குத்தான் என்கிற ஒரு சொல்லாடல் இருக்கிறது. இந்தப்படத்திலும் அப்பா கஜராஜுக்கு அற்புதமான கதாபாத்திரம் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார். ராமச்சந்திரன் துரைராஜை சும்மா அவர் எது செஞ்சாலும் ரசிக்கலாம், இந்தப்படத்திலும் அசத்தியிருக்கிறார். ஜீவா சுப்ரமணியம் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வந்து கிளைமாக்ஸை விறுவிறுப்பாக்க உதவியிருக்கிறார்.
நல்ல பையனாக கடைக்குட்டி சனந்த், அவருக்கு நல்ல தோழனாக ரிஷிகாந்த், அவர்கள் இருவருக்கும் இடையில் மலரும் நட்பு கவிதை என்றால், இருவரிக்கிடையில் மலரும் காதல், காவியம்!
எஸ் திரு வின் மாயஜாலத்தில், ரசிகர்களுக்கு இந்தப்படம் மிகப்பெரிய ஒரு விஷுவல் டிரீட் ஆக இருக்கப்போகிறது. போதாக்குறைக்கு கருப்பசாமி கோயில்ல வைக்கிற கிடா விருந்தாக , இசைஞானி இளையராஜாவின் இசை. இந்த வாரம், இவர் இசையில் இரண்டு படங்கள் வெளியாவதே இவரது இசை இன்னும் இளமையாகவும் புதுமையாகவும் இருப்பதற்கு சாட்சி. பின்னணி இசை அமைக்கச் சொன்னால் சிம்பொனி இசைத்து வைத்திருக்கிறார்.
டோரதி, இந்திய சினிமாவின் பொக்கிஷங்கள் வரிசையில் ஒரு தவிர்க்க முடியாத திரைப்படம் !