a K Vijay Anandh review
இந்த பிரபஞ்சம் இத்தனை லட்சம் ஆண்டுகளாக நிலைத்து நிற்க காரணமே இவ்வுலகில் வாழும் அத்தனை ஜீவராசிகளின் காமம் , கருணை மற்றும் அன்பினால் தான்.
அவ்வாறாக நீடித்து நிற்கும் பிரபஞ்சத்தில் பல ஜென்மங்களாக தொடரும் ஒரு காதல், நிவின் பாலி – அஞ்சலி காதல்.
2026 இல் அஞ்சலியைத் தேடி பயணிக்கும் நிவின் பாலிக்கு சக ரயில் பயணியாக வந்து அமரும் சூரி. இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு என்று சொல்லும் அளவிற்கு நிவின் பாலியிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் சூரி வழக்கம் போல தனது வெள்ளந்தி நடிப்பால் பயணத்தை போரடிக்காமல் கொண்டு செல்கிறார்.
நடு நடுவே இருவருக்கும் முட்டிக்கொள்ள, பலிகடா ஆகிப்போகும் ரயிலில் குட்டிகள் ஈன்ற எலி .
நிவின் பாலி பேசும் , தொல்காப்பிய தமிழ் சூரிக்கு மட்டுமல்ல தமிழ் தெரியாது என்று தமிழ் நாட்டின் சட்டமன்றத்திலேயே பெருமை பீத்தி கொள்ளும் Born with Silver Spoon தலைமுறைக்கும் அந்நிய மொழிதான்.
முதல், இரண்டு அப்புறம் 200 வருடத்திற்கு முன் என்று ஒவ்வொரு பிறப்பிலும் அஞ்சலியை தேடித்தேடி காதலித்து, சில பிறவிகளில் காமுற்று மகிழும் நிவின் பாலி – அஞ்சலி சம்பந்தப்பட்ட காட்சிகள் அழகு.
காமமும் , கருணையும் , அன்பும் அனைவருக்குமானது அனைத்து உயிர்களுக்குமானது என்று காட்டுவதற்கு உச்சபட்சமாக யாரோ ஒரு கதாபாத்திரம் அஞ்சலியின் மு.. தமிழில் சொன்னால் அது ஆபாசமாக அர்த்தப்படுத்தி கொள்ளக்கூடும்… அஞ்சலியின் மார்பை உற்று நோக்க, இது நாயகனுக்கு மட்டுமில்லை உனக்கும் தான் என்று அவனை அழைத்து மார்போடு சாய்த்துக்கொள்ள, காமத்தோடு நோக்கியவன் அவளது கருணையால் கண்ணீர் விடும் காட்சி அற்புதம்.
காங்கிரீட் கட்டிடங்கள், மேம்பாலங்கள், சாக்கடை ஓட ஆறு, சுற்றுப்புற சீர்கேடு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு, அது மட்டுமில்லை டா உலகம், என்று விண்ணைத்தொடும் மலைகள், காற்றுப்புகா காடுகள், கண்ணாடி போன்ற நீர்நிலைகள், மனிதர்களோடு சகஜமாக பழகும் விலங்குகள் என்று காட்டி பிரமிக்க வைத்திருக்கிறார்கள்.
கம்யூட்டர் கிராபிக்சில் ரயிலுக்குள் மரம் செடி கொடிகள் , ரயில் பெர்த்தில் முதலை, மற்றும் காடுகளில் கழுதை உள்ளிட்ட சில விலங்குகள் முத்தாய்ப்பாக சூரியுடன் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் எலி சம்பந்தப்பட்ட காட்சிகள் அற்புதம்.
ஓடும் ரயிலில் பிரசவிக்கப்பட்ட எலி குஞ்சுகளுக்கு பாலூட்ட இன்னொரு இடத்தில், இன்னொரு எலித்தாயின் முலைக்காம்புகள் காத்திருப்பதாக காட்டியிருக்கும் அந்த கிளைமாக்ஸ் காட்சி அற்புதம்.
ராமிற்கு, முழுமையான படைப்பு சுதந்திரம் இருந்திருந்தால் அல்லது இதனை ஹாலிவுட்டில் படமாகியிருந்தால் நிவின் பாலி, அந்த மூன்றாவது தடவையாக அஞ்சலியை பார்க்கும் காட்சியை முழுமையாக காட்டியிருக்கக் கூடும்.
ராமின் கண்கள் வாயிலாக அஞ்சலியை பார்க்கும் போது ரசிகர்களுக்கும் அவர் என்றும் அந்த கற்றது தமிழ் அஞ்சலியை போலவே அழகாக தெரிவது ஆச்சரியம்.
நிவின் பாலிக்கு இது ஒரு வித்தியாசமான கதாபாத்திர அனுபவமாக இருந்திருக்கும், ஏற்றுக்கொண்ட கதாபாத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
பறந்து போவின் தொடர்ச்சியாக, பாரினில் இருந்து பறந்து தீபாவளிக்கு ஊருக்கு வரும் சூரியோடு ரயில் ஏறும், சிவாவின் குரல் சுவாரசியம்.
இந்த பிரபஞ்சம் போலவே , அன்பும் நிலையானது, அது அந்த பிரபஞ்சம் போலவே அனைவருக்குமானது!
ஏழு கடல் ஏழு மலையை காட்ட ரசிகர்களை அழைத்துச் செல்லும் இந்த இரயில் பயண திரைக்கதை, வித்தியாசமான ஒரு முயற்சி.
கூடியமட்டும் நேர்மையாக கதை சொல்லியிருக்கிறார், ராம் !