தாய் நிலம்

Rating 3/5

42

a K Vijay Anandh review

போர்களால் பெற்றோர்களை இழந்து அனாதைகளாக மாறி அவதிப்படும் குழந்தைகளைப் பற்றிய படம்.

இலங்கையில் நடைபெற்ற ஈழப்போரினை அடிப்படையாக வைத்து இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார், அபிலாஷ் ஜி. தேவன்.

மனைவியை போரில் இழந்த நிலையில் மகளையாவது பத்திரமாக , தமிழ் நாட்டில் தென்காசியில்  இருக்கும் மனைவியின் உறவினர் வீட்டில் விட்டுவிடலாம் என்கிற முடிவோடு தமிழகத்திற்கு வரும் ஒரு தந்தையின் இறுதிப்பயணமாக மிகவும் உணர்வுப்பூர்வமாக இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

உறவினர்கள் புறக்கணித்த நிலையில்,  பாலாசிங் உள்ளிட்ட அறிமுகமே இல்லாத நான்கைந்து நண்பர்கள் உதவியுடன், குழந்தையை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கிவிடலாம் என்கிற நம்பிக்கையில் அங்கேயே தங்கிவிடும் தந்தையும் ஒரு நாள் இவ்வுலகை விட்டு நீங்கிவிட, மழை மகளை அரவணைத்துக்கொள்வதாக அமைக்கப்பட்ட கிளைமாக்ஸ் கண்ணீர் வரவழைக்கும்!

நடித்திருக்கும் அமர் ராமச்சந்திரன்,  நேஹா அமர் , பாலா சிங் உள்ளிட்டவர்கள் மிகவும் யதார்த்தமாக வருகிறார்கள். குறிப்பாக, போர்க்களத்தில்  தன் காதல் மனைவியை பறிகொடுத்துவிட்டு , தன் மகளையாவது எப்படியாவது கரைசேர்த்துவிட வேண்டும் என்கிற தவிப்பில்  இலங்கை இந்திய கடற்படைகளின் கண்காணிப்பில் இருந்து தப்பித்து இராமேஸ்வரம் வரும் அமர் ராமச்சந்திரனின் நடிப்பு பிரமாதம்.  அவரது மகளாக நடித்திருக்கும் நேஹா அமர் ரசிகர்களை அழவைத்துவிடுகிறார்.

நமது கண் முன்னே நடந்த இனப்படுகொலையின் போது பக்கத்தில் இருந்தும் கையாலாகாத நிலையில் இருந்தவிட்டதற்காக, நாம் நிர்ந்தர குற்ற உணர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறோம் என்றால் அது மிகையல்ல.

அப்படிப்பட்ட சூழலில், இந்தப்படத்தை போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்து குழந்தைகள்  மற்றும் சிரியா, பாலஸ்தீன குழந்தைகள் ஆகியோருக்கு சமர்ப்பிக்கிறோம்  என்பது ஏற்புடையது அல்ல. மாறாக, உலகம் முழுவதும் போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு அனாதைகளாகி நிற்கும் குழந்தைகளுக்கு சமர்ப்பிக்கவேண்டும். ஈழப்போரும் சிரியா மற்றும் பாலஸ்தீனப்பிரச்சினைகளும் வெவேறானவை!