அநீதி

சாமான்யனுக்கு அவனது நேரமே அவனுக்கு இழைக்கும் அநீதி

637
  • a K.Vijay Anandh review

இன்னும் இவர், எளிய மனிதர்களை விடுவதாய் இல்லை. எளிய மனிதர்களின் வாழ்க்கையிலேயே  இன்னும் இன்னும் ஏராளமான கதைகள் கொட்டிக்கிடக்கின்றன என்று நம்பும் இயக்குநர் வசந்தபாலன்.

பெயர் தான் திருமேனி, வாழ்க்கை முழுவதும் ரணமேனி தான். அர்ஜுன் தாஸ், கதாநாயகனாக நடிக்கும் முதல் படத்திலேயே அவ்வளவு அழுத்தமான கதாபாத்திரத்தை தூக்கி சுமந்திருக்கிறார். விலையுயர்ந்த சாக்லேட் கிடைப்பதில் கூட இயற்கை அவர் வாழ்க்கையில் விளையாடுகிறது, நிம்மதியான வாழ்க்கை கிடைக்கவிட்டுவிடுமா என்ன! யாரைப்பாஎத்தாலும் அதாவது அவரது தன்மானம் பாதிக்கும் படியாக நடந்து கொள்ளும் எவரையும் கொன்றுவிடலாம் என்கிற அளவிற்கு எண்ணத்தூண்டும் மனவியாதி, கடைசியில் கொன்றே ஆகவேண்டும் என்கிற நிலையில் உள்ளவர்களை கொல்வதுடன் குணமாகிவிடுகிறது.அர்ஜுன் தாஸின் குரல், அந்த வில்லத்தனமான குரல், இதில் காதலுக்கும் நட்புக்கும் அழுகைக்குமாக பொருந்திப்போவது ஆச்சிரியம். அடுத்து வரும் ஆண்டுகளுக்கான ஹீரோ கிடைத்துவிட்டார், திரையுலகிற்கு.

துஷாதா விஜயன், சுப்புலட்சுமியாக நம்மை வசீகரித்துவிடுகிறார். கதாநாயகி என்கிற எந்த சிறப்பு உடல்மொழியும் இன்றி,  அங்காடி தெரு அஞ்சலி ஐ நினைவு படுத்தும் அந்த எளிய கதாபாத்திரத்திற்குள் முழுமையாக தன்னை அர்ப்பணித்து அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.

நெல்லைத்தமிழை நெல்லை எக்ஸ்பிரஸை விட அதிகவேகத்தில் பேசும் காளிவெங்கட் அப்பாவியான அப்பாவாக அசத்தியிருக்கிறார். அவரிடம் வில்லனத்தனம் காட்டும் டி சிவா ஆச்சிரியப்படுத்தியிருக்கிறார்.

வனிதா, அருண் சிதம்பரம், சுரேஷ் சக்ரவர்த்தி காட்டும் வில்லத்தனம் நிஜமாகவே பயமுறுத்தும் ரகம். அம்மா கூட வேண்டாம் என்று அமெரிக்காவில் செட்டிலாகிவிடும் அவர்களுக்கு ஆஸ்தியில் மட்டும் இருக்கும் காதல் ஆத்திரப்படவைக்கிறது.

தனிமையில் தனது கண்டிப்பையே பாதுகாப்பு கவசமாக்கிக்கொண்டு வாழும் அம்மா சாந்தா தனஞசெயன் பெரும்பாலான தனிமையில் வாடும் அம்மாக்களை பிரதிபலித்திருக்கிறார்.

அவரது மறைவை புலனாய்வு செய்யும் காவல்துறை அதிகாரியாக ஜே எஸ் கே பிலிம்கார்பரேஷன் தயாரிப்பாளர் சதீஷ் குமார், யதார்த்தமும் காவல்துறைக்கே உரிய வில்லத்தனத்தையும் மிகவும் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சாரா, பரணி ஆகியோர் ரூம் மேட்டுகளாக வந்து தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

SK ஜீவாவின் இயல்பான வசனங்கள், ஜிவி பிரகாஷ் குமாரின் இசை ஆகியவை படத்திற்கு அநீதிக்கு வலுசேர்த்திருக்கின்றன.

தங்களின் அடிப்படைத்தேவைக்காகவே வாழ்நாள் முழுவதும் போராடிக்கொண்டிருக்கும் எளிய மனிதர்களுக்கு அவர்கள் ஏதேச்சையாக சந்திக்கும் தருணங்கள் கூட உச்சக்கட்ட அநீதியை இழைத்துவிடுவது இயற்கையின் மீதும் இறைவனின் மீதும் கடும் கோபத்தை ஏற்படுத்துவதாய் இருக்கிறது.

அநீதி, அப்படி ஒரு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது!

Mysixer Rating 4.5/5