சத்திய சோதனை

நேர்மையாக இருப்பது ஒரு குற்றமா..?

619

a  K.Vijay Anandh review

பிரேம் ஜி அமரனுக்கென்று ஒரு இமேஜ் இருக்கிறது. அந்த இமேஜுகளையும் சுக்கு நூறாக்கி இப்படி ஒரு இயல்பான படத்தின் மையக்கதாபாத்திரமாக்குவதே பெரிய வெற்றி. அங்கேயே இயக்குநர் தன் படைப்பை மட்டுமே நம்பி களமாடி ஜெயிக்க ஆரம்பித்துவிடுகிறார். சுரேஷ் சங்கையா,  சத்திய சோதனையை ரசிகர்களுக்கு சோதனையாக கொடுக்காமல்  நகைச்சுவை இழையோடும் இனிமையான கிராமத்து விருந்தாக பரிமாறியிருக்கிறார்.

ஒரு கொலை, கொலையை யார் செய்தது என்று துப்புதுலக்குவதில் காட்டும் ஆர்வத்தைவிட, கொலையாளி போட்டிருந்த தங்க நகைகள் எங்கே ..? அவற்றை யார் திருடியிருப்பது..? எப்படி பங்குபோட்டுக்கொள்வது என்று அடித்து கொள்ளும் இரண்டு காவல்நிலைய காவலர்கள்,  அவர்களை நயமாக பேசியே சாட்டையடி கொடுக்கும்  நீதிபதி, இன்பார்மர், கிராமத்தில் வசிக்கும் அமானுஷ்யமான ஒரு பாட்டி, கதாநாயகன், அவனது அக்கா, அக்கா மாப்பிள்ளை, மருமகள்,  அவனுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் பெண் என்று சிறப்பான கதாபாத்திரங்களை வடிவமைத்து சத்திய சோதனையை முழுக்க முழுக்க ஒரு கிராமத்து பொழுதுபோக்காக கொடுத்திருக்கிறார்கள்.

முப்பிடாதியாக வரும் பாட்டி முதல் பிரதீப்பாக வரும் பிரேம் ஜி வரை அனைவரும் மிகவும் இயல்பாக நடித்து கதைக்கு வலுசேர்த்திருக்கிறார்கள்.

சித்தன்மோகன், செல்வமுருகன், முத்துபாண்டி ஆகியோர் காவல்ர்களாக அடிக்கும் லூட்டி அட்டகாசம். இவர்களின் முட்டாள்த்தனத்தை மூலதனமாக்கி கொள்ளும் இன்பார்மர் ராஜேந்திரனும் நிறைவாக நடித்திருக்கிறார்.

நீதிபதியாக ஞானசம்பந்தன், அதே பட்டிமன்ற குறும்புடன் சிறிது கண்டிப்புமாக கலகலக்க வைத்திருக்கிறார்.

குற்றச்செயல்களில் நேர்மையாக காவல்துறையை அணுகுபவர்களை இந்தப்பாடு படுத்துவதால் தான் சமூக அவலங்களை கண்டும் காணாதது போல் போய்விடுகிறார்கள் எளிய மனிதர்கள்.

சினிமாவுக்கு கதைகள் கிடைப்பதே சிரமமாக ஆகிவிடட நிலையில் இந்த தயாரிப்பாளர் சமீர் பரத் ராமிற்கு மட்டும் எப்படி இப்படி அழகழகான கதைகள் கிடைக்கிறது என்பது ஆச்சிரியப்பட வைக்கிறது.

இதுபோன்ற, அழுத்தமான கதைகளை சுவராஸ்யமாக, எளிமையாக சொல்லும் படங்கள் அதிகம் வரவேண்டும்!

சத்திய சோதனை, அற்புதமான பொழுதுபோக்கு!

Mysixer rating 4.5/5