LGM

இந்த தலைமுறை காதல், கல்யாணம் பற்றி சொல்லும் படம்

415

a K.Vijay Anandh review

தாத்தாக்கள், பாட்டிகள், மாமன்கள், அத்தைகள், சித்தப்பாக்கள், பெரியபாக்கள், தங்கைகள், தம்பிகள், கொழுந்தியாள்கள், மச்சினன்கள் என்று வாழ்ந்தது தான் கூட்டுக்குடும்பங்கள்  என்பது போய் இன்று கணவனும் மனைவியும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளுமாக ஒன்றாக வாழ்ந்தாலே அது கூட்டுக்குடும்பம் என்கிற ரேஞ்சுக்கு ஆகிவிட்டது.

குறிப்பாக இன்றைய தலைமுறையினர் நிஜமான  உறவுகளை பக்கத்தில் வைத்து கொள்வதை விட விர்ச்சுவல் உறவுகளுடன் சமூகவலைத்தளங்களில்  அதிக நேரம் செலவிட ஆரம்பித்துவிட கூட ஒரு காரணியாக இருக்கலாம். அதனால், அவர்கள் பெரும்பாலும் தனிமையில் சுதந்திரமாக வாழவே ஆசைப்படுகிறார்கள். கை நிறைய சம்பளம், செயலிகள் மூலம் உணவு வீடு தேடி வந்துவிடுவது போன்றவற்றால் வீட்டில் பெரியவர்கள் இருப்பதை கூட ஒரு பாரமாக நினைக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக இன்றைய தலைமுறை பெண்கள், கல்யாணம் செய்யலாம் ஆனால் நீ மட்டும் தான் வேணும் உன் அம்மா, உறவுகள் என்று யாரும் நம்முடன் இருக்கக்கூடாது என்கிற நிபந்தனையுடனேயே திருமணத்திற்கு சம்மதிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.

அப்படி ஒரு தவறான புரிதலுடன் இருக்கும் இன்றைய தலைமுறை இளசுகளுக்கு திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை மற்றும் உறவுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஆகியவை குறித்த ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக LGM வெளிவந்திருக்கிறது.

ஆனாலும், இந்தப்பட நாயகி மீரா அவ்வளவு கொடூரமானவள் அல்ல, ஜஸ்ட் மாமியாரை புரிந்துகொண்டு புகுந்த வீட்டிற்கு செல்லலாம் என்கிற அடிப்படையான ஒரு நிபந்தனையை விதிக்கிறாள். அதனைத் தொடர்ந்து இரு குடும்பமும் ஒரு பயணத்திற்கு புறப்படுகிறார்கள், இறுதியாக மாமியாரும் மருமகளுமாக பயணித்து தங்களது பயணத்தில் சோதனைகளை எதிர்கொண்டு ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து நீண்ட ஒரு வாழ்க்கை பயணத்திற்கு ஆயத்தமாகிவிடுகிறார்கள் என்பதை மிகவும் சுவராஸ்யமாகவும் அட்வெஞசர் பயணம் ஊடாகவும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி.

தோனிக்கு இருக்கின்ற செல்வாக்கிற்கு, இந்தியாவில் எந்த உச்ச நட்சத்திரமிடமிருந்தும் கால்ஷீட் வாங்கி ஒரு கமெர்ஷியல் எண்டெர்டெயினர் வகை படங்களை தயாரித்து இருக்க முடியும். ஆனாலும்,, உறவுகளுக்கு முக்கியத்தும் கொடுத்து ஏற்றுக்கொள்ளும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக LGM ஐ சாக்‌ஷி தோனி தயாரித்த விதத்தில் வெகுவாகப்பாரட்டலாம். மூலக்கதை அவருடையது என்பது கூடுதல் தகவல்.

படத்தில் ஹரி ஷ் கல்யாண், இவானா கெமிஸ்ட்ரியை விட நதியா – இவானா கெமிஸ்ட்ரி மற்றும் ஹரிஷ் – விஜய் கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

குறிப்பாக நண்பனாக வரும் விஜய், தமிழ் சினிமா இலக்கணப்படி இதுகாறும் வந்த அத்தனை   நண்பன் மற்றும் காமெடியன் கதாபாத்திரங்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு காமெடியில் பட்டைய கிளப்பியிருக்கிறார்.

யோகிபாபு, ஒரு கெஸ்ட் காமெடியனாக வந்து தன் பங்கிற்கு கிச்சுகிச்சு மூட்டி சென்றிருக்கிறார்.

நதியா, ஒரு அனுபவ நடிகை என்பதையும் தாண்டி அந்த கதாபாத்திரத்திற்கே உரிய முதிர்ச்சியுடன் இவானாவை தாங்கும் இடங்கள் அருமை.

ஹரிஷ், வழக்கம் போல அனைவருக்கும் பிடித்த குறிப்பாக இளசுகளை வசீகரித்திருக்கிறார்.

மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்பதற்கேற்ற வகையில் இவானா, புன்னகை, கோபம், காதல் என்று கலங்கடித்திருக்கிறார்.

சாண்டி மாஸ்டர், வந்து ஒரு ஆட்டத்தை மட்டும் போட்டுச்செல்லாமல் ஒரு கதாபாத்திரமாக வந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

இளம்தலைமுறைக்கு கொடுக்கப்படும் சுதந்திரம், தனி மரமாக நிற்பதற்கில்லை, குடும்பமெனும் தோப்பிற்கு வலுசேர்ப்பதற்கு தான் என்று அழகாக சொல்லும் LGM படத்தை நிச்சயம் இளசுகள் பார்க்க வேண்டும்!

mysixer rating 4/5