அடியே

தாறுமாறாக எழுதப்பட்ட அறிவியல் புனைவுகளுடன் கூடிய ஒரு அழகான காதல் கவிதை

93

a K.Vijay Anandh review

கன்னா பின்னா

தாறுமாறு

வேற லெவல்

போன்ற பாராட்டு வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தத்தை கொடுக்கும் படமாக வெளியாகியிருக்கிறது அடியே.

கொஞ்சம் சம காலத்தில் நடக்கும் நிஜமான காட்சிகள், அதிகமாக ஜிவி பிரகாஷ் குமாரின் இன்னொரு கற்பனை வாழ்க்கை அல்லது இப்படி நடந்தால் எப்படி இருந்திருக்கும் என்பது மாதிரியான ஒரு வாழ்க்கை, அதை சும்மாவே கற்பனை செய்யலாம் எனினும், வெங்கட் பிரபு & கோ வின் ஆராய்ச்சி கூடத்தில் உருவான ஒரு கால இயந்திர உதவியுடன் அவை நடப்பதாக வைத்திருப்பது இன்னும் சுவரஸ்யத்தை தருகிறது.

காதல், சொல்லாமல் விட்டிருந்தால் கூட அது ஒரு பக்கம் உண்மையாக இருந்து இன்னொரு பக்கம் அதனால் ஒரு நல்ல மாற்றம் நிகழும் பட்சத்தில் காலம் கடந்தாவது நிறைவேறும் என்கிற ஒரு வரிக்கதையை மேலே குறிப்பிட்ட மாதிரி கன்னாபின்னா, தாறுமாறு, வேறலெவல்களில் காட்சிகளை கோர்த்து அடியே வை கொடுத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.

மாஸ் ஹீரோக்களின் ஆரம்ப கால படங்களில் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் அவர்களை கொண்டு போய் சேர்ப்பதற்கான ஒன்றிரண்டு காட்சிகள் இடம் பெறும். அந்த வகையில், ஒரு சீரியசான படமாகவே ஜிவி பிரகாஷ் குமாருக்கே தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்கிற குழப்பத்தை விளைவிக்கும் அளவிற்கான திரைக்கதையில், அவரது அப்பா, அம்மா, மனைவி மற்றும் ஜிவி பிரகாஷ குமார் கம்பினேஷனில் வரும் அந்த ஒரு காட்சி, அடியே மூலமாக அவருக்கு ஒரு படி மேலே ஏறியிருக்கிறார் என்றால் மிகையாகாது.

இப்படி நடக்கிறது என்பது நிஜம், இப்படி நடந்திருக்கலாம் என்பது கற்பனை அல்லது இணையான இன்னொரு வாழ்க்கை, அப்படிப்பட்ட உலகில், பிரேம் ஜிக்கு 7 கல்யாணம் நடந்திருப்பது மாதிரி ஜோ பைடன் சென்னை கார்பரேஷன் பள்ளியில்  தமிழாசிரியராக வேலை பார்த்து கொண்டிருக்கலாம், ராஜபக்‌ஷே கூட நாம் தமிழர் கட்சியின் தலைவராக இருக்கலாம், முக ஸ்டாலின், பெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு  கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியராக பணியாற்றி கொண்டிருக்கலாம், உதயநிதி தீவிர மோடி ஆதரவாளராக கூட இருக்கலாம், தமிழகத்தின் நிரந்தர முதல்வராக கேப்டன் விஜயகாந்த் இருக்கலாம் அப்படி முரணான பல விஷயங்கள்  மிகவும் சவராஸ்யமாக சொல்லப்பட்டிருக்கும் விதம் அட்டகாசம்.

இப்படி, ஒரு சீரியசான கதையில் பல ஜாலியான விஷயங்களை கொண்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை முதல்பாதி எக்கச்சக்கமாக எகிறச்செய்து விடுகிறது.

இரண்டாம் பாதியில் கெளரி கிஷனின் திருமண முறிவு  ஜிவி பிரகாஷ் இன் பள்ளித்தோழர் மைக்கேல் உடனேயே ஏற்படுவது உள்ளிட்ட இரண்டாம் பாதி காட்சிகளில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

மற்றபடி அடியே, ஒரு வித்தியாசமான பொழுதுபோக்கு தான்.

தனுஷ க்கு அடுத்து பள்ளிமாணவன் முதல் முரட்டு இளைஞன் வரையிலான கதாபாத்திர வேறுபாடுகளை ஒரே படத்தில் காண்பிக்க முடியும் என்கிற அளவிலான நடிகராக ஜிவி பிரகாஷ் குமார் ஜொலிக்கிறார்.

அவரது நண்பர்களாக வரும் விஜய், மதும்கேஷ் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

கெளரி கிஷன், 96 இல் பாட ஆரம்பித்தவர் இதிலும் பாடிக்கொண்டே வசீகரிக்கிறார்.

ஜஸ்டின் பிரபாகரின் இசையை பற்றி சொல்லவேண்டும். அந்தக்காலத்தில் 15 நிமிடங்களுக்குள் பத்து பாடல்கள் வைத்திருப்பார்கள். இவரது இசையில் ஒரே காட்சி 10 நிமிடங்களுக்கு மேலாக நீள்கிறது. அது, ரசிகர்களின் ரசனை மாற்றத்திற்கு வித்திடுகிறது. ஐந்து பாடல்கள், அதற்கேற்ற காட்சியமைப்புகளிலேயே முழுப்படத்தையும் முடித்து விடலாம் போல.

கோகுல் பினாய் இயக்குநர் எழுதிய காட்சிகளை நேர்த்தியாக படம் பிடித்துக்கொடுத்திருக்கிறார், சவாலான திரைக்கதையை  எடிட்டர் முத்தையா அழகாக கோர்த்திருக்கிறார்.

அடியே, இளசுகளுக்கான கொண்டாட்டம் மட்டுமல்ல வித்தியாசமான திரைப்படங்களை விரும்பும் ஒவ்வொருவருக்குமான விருந்தும் தான்.

mysixer.com rating 4/5