a K.Vijay Anandh
சமீபத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ்ப்படங்களில் முற்றிலும் வித்தியாசமான ஒரு நல்ல பாலிவுட் படம் பார்ப்பது போன்ற ஒளிப்பதிவில் ரங்கோலியை முழுமையாக கொண்டாட முடிகிறது. மருதநாயகம் அந்த பாராட்டிற்கு சொந்தமான ஒளிப்பதிவாளர். முழுப்படமும் சென்னையில் கடற்கரையோரம் அமைந்த இடத்தில் தான் நடக்கிறது, குறிப்பாக வண்னாந்துறை, பெசண்ட் நகரில், ஆனால் மருந்துக்கு கூட ஒரு ஷாட்டில் கூட கடலைக்காணோம், கடைசி பிரேமிலாவது அப்படியே வானத்தில் பறந்து கடலைக்காண்பித்து முடிப்பார்கள் என்று பார்த்தால் அப்படியும் இல்லை. ஆனாலும், நாயகன் குடும்பத்தாரின் தொழில்களம் ஆகடடும், இருவேறு பள்ளிகள், ஒரு மைதானம் என்று ஒவ்வொன்றையும் அழகாக படம்பிடித்திருக்கிறார் மருதநாயகம், அதிலும் குறிப்பாக நடிகர்களை.
ஆர்ட் டைரக்டர் ஆனந்த் மணி, சலவைத்தொழில் கூடத்தை ஒரு கோயில் மாதிரி காட்டியிருக்கிறார், ஒரு வகையில் அழுக்கு நீக்கும் இடம் தானே! அது மன அழுக்கு, இங்கே உடையழுக்கு!
சுந்தரமூர்த்தியின் பின்னணி இசையும் அவரது இசையில் அடையாறு கூவத்தில் பெருமழைக்கு பிறகு வரும் தெள்ளிய நீரோடை போன்ற இசை ரங்கோலியை மேலும் அழகாக்கியிருக்கிறது.
ஒரு நடிகனுக்கு அறிமுகப்படம் என்பது முக்கியம், ஹமரேஷ், குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும் நாயகனாக இது முதல் படம். எல்லோரையும் அடித்து ரசிகர்களை கவரும் மாஸ் ஹீரோ மாதிரியில்லாமல் படம் முழுவதும் சக மாணவர்களிடம் அடிவாங்கிக்கொண்டே ஒரு ஹீரோயிசம் காட்டிவிடுகிறார். +1 பயிலும் மாணவனாக புத்தகப்பையையும் அழுத்தமான அந்த சத்யமூர்த்தி கதாபாத்திரத்தையும் அசால்டாக தூக்கி சுமந்திருக்கிறார்.
நாயகியென்று பார்த்தால், பார்வதியாக வரும் பிரார்த்தனா சந்தீப்பை விட சத்யாவின் அம்மா காளியம்மாளாக வரும் சாய் ஸ்ரீ, சத்யாவின் அக்கா வேம்புலட்சுமியாக வரும் அக்ஷயா ஆகியோரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். அதிலும் முகம் முழுக்க மஞ்சள் பூசிக்கொண்டு இரண்டு விடலைப்பிள்ளைகளின் அம்மாவாக வரும் சாய் ஸ்ரீ, செம்ம.ப்காளிவெங்கட், விவேக் பிரசன்னா வரிசையில் ஆடுகளம் அருள்தாஸுக்கும் இனி நிரந்தர இடம் உண்டு எனும் அளவிற்கு சமீபகால ங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திர ங்களில் சிறப்பாக நடிக்கிறார், இதில் உத்தமர் காந்தி என்கிற சலவைத்தொழிலாளியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
தனியார் பள்ளியில் வில்லன் கெளதமாக வரும் ராகுல் உட்பட அனைத்து மாணவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தனியார் பள்ளியில், வசீகரமான தமிழாசிரியர் இராவணன் ஆக வரும் அமித் பார்கவும் சத்யா ஹமரேஷும் ஒரே பிரேமில் பாரதியார் கவிதைகளை பாடும் காட்சிகள், கவிதை. இராவணன் ஒரு தமிழன் தான் என்று இந்தப்படத்தையும் கூட சாட்சிக்கு இழுப்பார்கள், இராவண ரசிகர்கள்.
என்னதான் செக்கசெவேர்னு அழகழகாய் தனியார் பள்ளி ஆசிரியைகள் இருந்தாலும் கட்டக்கரேர்னு ஒரே ஒரு காட்சியில் வந்துவிட்டு போகும் அந்த அரசு பள்ளி சத்யாவின் வகுப்பாசிரியை, விஜி – சாட்சாத் சரஸ்வதி போன்று அழகாக காட்சி தருகிறார். திரும்பவும் சத்யா அந்தப்பள்ளிககு திரும்பிய பிறகு அவரைத்தான் கண்கள் தேடியது!
ரங்கோலி படத்தை அப்படியே மொழி மாற்றம் செய்து அனைத்து மொழிகளிலும் வெளியிடலாம், அவ்வளவு perfection அனைத்து துறைகளிலும்.
அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ், ரங்கோலியை மிகவும் அற்புதமாக போட்டிருக்கிறார். அழகான கோலத்திற்கு நேர்த்தியாக வைக்கப்படும் புள்ளிகளே அழகு, அந்தப்புள்ளிகள் போன்று ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உருவாக்கியிருகிறார் வாலி மோகன் தாஸ்.
mysixer rating 4/5