கருமேகங்கள் கலைகின்றன

உறவுகளை கைவிடாதீர்கள், அது கடைசிகாலத்தில் நிம்மதியை கெடுக்கும்...

68

a K.Vijay Anandh review

கெளதம் வாசுதேவ மேனன், இதற்கு முன் இவர் நடித்திருக்கும் அத்தனை படங்களிலும் ..த்தா என்கிற வார்த்தையை உச்சரிக்காமல் இருக்கமாட்டார். அப்படிப்பட்டவரை அந்த வார்த்தையை ஒரு தடவை கூட உச்சரிக்க வாய்ப்பளிக்காமல் படம் முழுவதும் அப்பா… அப்பா.. என்று உருக வைத்திருக்கிறார் இயக்குநர் தங்கர்பச்சன்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா, ஸ்டைலிஷ் இயக்குநர் கெளதம் வாசுதேவ மேனன், புரட்சி இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன், ஜனரஞ்சக இயக்குநர் ஆர் வி உதயகுமார் இப்படி முக்கியமான இயக்குநர்களை நடிகர்களாக்கி அவர்களுடன் யோகிபாபு, அதிதிபாலன்,  மகானா சஞ்சீவி, பிரமிட் நடராஜன், டெல்லிகணேஷ் என்று மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளத்துடன் கருமேகங்கள் கலைகின்றன என்று ஒரு அழகான உணர்வோவியத்தை கொடுத்திருக்கிறார்.

அதிதி பாலன் காலில் விழுந்து கதறும் ஓய்வுபெற்ற நீதிபதியாக வரும் பாரதுராஜாவுக்கு  இந்தப்படம் ஒரு ரத்தக்கண்ணீர் என்றால் மிகையாகாது. அந்த வயதிலும் தன் வயதில் நான்கில் ஒரு பங்கு இருக்கும் அதிதி பாலன் காலில் விழுந்து கதறும் இடங்களில் கலைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணிப்பதில் ஜொலிக்கிறார் பாரதி ராஜா.

அதிதிபாலன் காலில் ஏன் விழுகிறார்..?  என்பது தான் கதை.

படம் ஆரம்பிக்கும் போது பாம்பன் பாலத்தில் இருந்து அப்படியே சிட்னி பாலத்தை காட்டும் விதம் அருமை.

என்னதான் சொத்து பத்து இருந்தாலும் பெற்ற குழந்தைகள் அருகில் இல்லையெனில் ஒருவரின் கடைசி காலம் நரகமாகத்தான் இருக்கும். அருகில் இருக்கும் மகன் கெளதம் வாசுதேவ மேனனும் அப்பாவுடன் ஒரு முட்டல் மோதல் என்று பல வருடமாக பேசாமல் இருக்கிறார்.

பெண்களுக்கு ஆண்கள் மூலம் இழைக்கப்படும் அநீதி முக்கியமாக மூன்றுவகை. உணர்ச்சி வசப்பட்டு உறவாக்கிக்கொண்டு ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் கைவிடுவது. காதலித்து கரம்பிடித்து கர்ப்பிணியாக்கி கைவிடுவது. மகளாக, தன் அப்பா யார் என்றே தெரியாமல் வளர்வது.. இதனை மையமாக வைத்து ஒரு நாவல் போன்று இந்தப்படத்தை கொடுத்திருக்கிறார் தங்கர் பச்சன்.

கட்டாத மனைவி, பெறாத பிள்ளைக்கு என உருகும் இடங்களில் யோகிபாபு வேறலெவலில் நடித்து கைதட்டல் பெறுகிறார். அவருக்கும் அந்த குழந்தைக்குமான பிரிக்க முடியாத பாசப்பிணைப்பு கண்களை குளமாக்கும்.

அதிதிபாலனும் துடிப்பான் காவல்துறை அதிகாரியாக வந்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

பாரதிராஜாவும், யோகிபாபும் பயணிக்கும் காட்சிகள் ஊடாக கதை சொல்லியிருப்பதும் அருமை. படம் அப்படியே ஆரம்பித்திருக்கலாம்.

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு, லெனினின் எடிட்டிங் ஆகியவற்றுடன் ஜிவி பிரகாஷ் குமாரின் இசையும் படத்திற்கு நன்றாக வலுசேர்த்திருக்கின்றன.

பெண்ணை கரம்பிடித்து ஏமாற்றுபவனுக்கு சேதுபதி என்று பெயர் வைத்திருப்பதையும், இந்தியாவில் மட்டும் தான் பாலியல் குற்றங்கள் நடைபெறுகிறது என்பது மாதிரியான வசனங்களையும் தவிர்த்திருக்கலாம்.

வசனங்களிலும் காட்சியமைப்புகளிலும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு, படத்தலைப்பிலும் கவனம் செலுத்தி இன்றைய தலைமுறைக்கு ஏற்றமாதிரி கொடுத்திருக்கலாம்.

பெற்றவன் கைவிடுகிறான், ஏதுமற்றவன் கைகொடுக்கிறான் இந்த இரண்டு விஷயங்களை இன்னும் கொஞ்சம் சுவராஸ்யமாக  சொல்லியிருக்க வேண்டும்.

mysixer rating 3/5