6 வாத்தியார் கால் பந்தாட்ட குழு

296

a K.Vijay Anandh review

சில தனிநபர்களின் ஏதேச்சதிகாரம், அந்தப் பகுதி அரசியல்வாதிகளை கைக்குள் போட்டுக் கொண்டு அவர்கள் செய்யும் அடாவடித்தனம் எந்த அளவிற்கு அரசு இயந்திரத்தை சீர்குலைத்து, அப்பகுதியில் வாழும் அப்பாவி மக்களின் நியாயமான வளர்ச்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறது என்பதை இந்த படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா.

அப்படி பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை இருண்டு விடுகிறது என்பதை சிம்பாலிக்காக உணர்த்துவதற்கு தானோ  என்னவோ அவர்களின் இரண்டாவது பாதி முழுவதும் இருட்டிலேயே நடப்பதாக காட்சிப்படுத்தியிருக்கிறார். நான் லீனியர் முறையில் கதை சொல்லி இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களின் இருட்டான இரண்டாம் பகுதி படத்தில் முதல் பாதியாக காட்டப்படுகிறது.

எதார்த்தமான கிராமத்து நாயகனாக சரத்குமார் மற்றும் அவரது கால்பந்தாட்ட குழு நண்பர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அயிரா ஜெயின் இரண்டு பாடல்களுக்கு வந்து கதை நகர்வதற்கு உதவி இருக்கிறார்.

ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கும் மதன் தக்ஷிணாமூர்த்தி இந்த படத்திலும் கால்பந்தாட்ட கோச்சாக, அதுவும் ஒரு விபத்தில் ஒரு காலை இழந்தவராக, திக்கி திக்கி பேசுபவராக சிறப்பாக நடித்து இருக்கிறார்.

ஒரு கால்பந்தாட்ட மைதானம், அந்த கிராமத்து தெருக்கள், அத்துடன் மரக்கடை என்று மூன்றே பெரிய லொகேஷன்களில் முழு படத்தையும் எடுத்திருக்கிறார்கள்.

காட்சிப்படுத்துதல்களில் ஒரு வித்தியாசம் காட்ட முயன்றிருப்பது தெரிகிறது , இருந்தாலும் ஒரு நல்ல களத்தை எடுத்துக்கொண்டு இன்னும் விறுவிறுப்பாக விளையாட்டு காட்டி இருந்தால் – அதாவது திரைக்கதையில் , 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு திரையரங்குகளில் சாம்பியன் ஆகி இருக்கும்.

mysixer rating 3/5