ஹனு மான்

Rating 5/5

91

a K.Vijay Anandh review

ஒரு அறிமுக நடிகரை வைத்து இவ்வளவு பிரமாண்டமான இவ்வளவு நேர்த்தியான இவ்வளவு அட்டகாசமான இவ்வளவு ஜனரஞ்சமான ஒரு படத்தை கொடுக்க முடியுமா? முடியும், ஆனால் அது தமிழ் திரைப்பட துறையாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதே பதிலாக இருக்க முடியும்.

இந்தப் படம் தெலுங்கில் எடுத்திருக்கிறார்கள் அதனை தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

மேற்கத்திய சூப்பர் மேன் கதாபாத்திரங்களை பார்த்து தானும் அப்படி ஒரு சூப்பர் மேன் ஆக வர வேண்டும் என்று தனது விஞ்ஞானி நண்பனுடன் சேர்ந்து திட்டம் போடும் வினய் ஒரு பக்கம்.

ருத்ர கல் உதவியுடன் நமது இதிகாச கதாபாத்திரங்களில் ஒன்றான சூப்பர் மேன்களுக்கு எல்லாம் சூப்பர் மேனாக வாழ்ந்து காட்டிய, இன்றும் சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் அனுமனின் பலம் பெற்ற அனுமந்தாவாக தேஜா சஜா ஒருபுறம்.

ருத்ர கல்லை கைப்பற்றி விட்டால் தானும் சூப்பர் மேன் ஆக ஆகிவிடலாம் என்று அந்த கிராமத்திற்கு வரும் வினய், அங்கு நடக்கும்  களேபரங்கள் ஆகியவை இரண்டாவது பாதியை ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் எடுத்துச் சென்று இருக்கின்றன. குறிப்பாக, வாழும் விபீஷணனாக வரும் சமுத்திரக்கனி மூலமாக சொல்லப்படும் ஹனுமான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சம்பந்தப்பட்ட கதைகளில் வரும் கம்ப்யூட்டர் மாயாஜால அனுமன் பிரமிக்க வைத்திருக்கிறார்.

வரலாற்று கதாபாத்திரங்கள் நமக்கு சிவாஜி கணேசன் மூலமாகத்தான் ஒவ்வொருவரும் அறிமுகமாகி இருக்கிறார்கள். அது போலவே ஹனுமன் என்றால் இனி இந்த படத்தில் வரும் ஹனுமான் போலத்தான் என்பது ரசிகர்களின் மனதில் ஆழமாய் பதியப்போகிறது என்றால் மிகையல்ல.

துறுதுறு என்று நடித்திருக்கும் நாயகன் தேஜா சஜா மற்றும் அழகான கிராமத்து நாயகியாக அமிர்தா ஐயர் ஆகியோர் மிகச் சிறப்பாக நடத்தி இருக்கிறார் என்றால் வழக்கம் போல நமது வரலட்சுமி சரத்குமாரும் அன்பான அக்காவாக வந்து ரசிகர்களை அழ வைத்தும் விடுகிறார்.

ஆந்திர மாநிலத்தின் சிறப்பான ஒரு அங்கமாக விளங்கும் ஆவக்காய் ஊறுகாய் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஒரு பாடல் காட்சியாகி ரசிகர்களுக்கு கொடுத்த விதம் அருமை. ஒரு படைப்பாளி எந்த சித்தாந்த்தை பின்பற்றுபவனாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகலாம், ஆனால் சினிமா என்று வரும் பொழுது இந்த மண்ணின் பெருமையையும் இந்த மண்ணிற்கே உரிய ஆன்மீகத்தையும் பற்றி பேசும் பொழுது உண்மையை பேச வேண்டும். அப்பொழுதுதான் அந்தப் படைப்பு கடை கோடி ரசிகனையும் சென்று சேர்ந்து, வெற்றிகரமான படைப்பாக மாறும் என்பதற்கு ஹனுமான் படம் மிகப்பெரிய உதாரணம்.

ஒளிப்பதிவாளர் தசரதி சிவேந்திரா மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இயக்குனர் பிரசாந்த் வர்மாவிற்கு முழுமையாக ஒத்துழைத்து இருக்கிறார்கள் என்பதை படத்தின் ஒவ்வொரு பிரேமும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. குறிப்பாக அடர்த்தியான காடுகள் உயரமான மலைகள் அதில் பிரமாண்டமாக செதுக்கப்பட்டு இருக்கும் அனுமன் சிற்பம் அங்கிருந்து கொட்டும் அருவி வற்றாத நீர் நிலைகள் என்று பிரமிக்க வைத்திருக்கிறார்கள்.

ஹனுமான் சந்தேகமே இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான படைப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.