நெவர் எஸ்கேப்

mysixer rating 3/5

99

a  K. Vijay Anandh review

திரைப்படத் துறையை பொறுத்தவரை திரையரங்குகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஆனால், தொலைக்காட்சி மற்றும் ஓடிடி ஆகியவற்றின் அசுர வளர்ச்சியினால் இன்று திரையரங்குகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமானதாக இருக்கின்றது. ஏற்கனவே பல திரையரங்குகள் திருமண மண்டபங்களாக மாறிவிட்ட நிலையில், இன்னும் பெரிய திரையில் திரைப்படங்களை மக்களுக்கு காண்பித்து மகிழ்வதை பல திரையரங்கு உரிமையாளர்கள் தங்களது கடமையாக உணர்வதால் பல்வேறு இன்னல்களையும் தாண்டி திரையரங்குகளை இழுத்து மூடி விடாமல் நடத்தி  வருவதில் ஆத்ம திருப்தியை பெறுகின்றனர்.

திரையரங்குகள் முழுமையாக நிரம்பாமல் நிர்வாக செலவினங்களுக்கு கூட வருமானம் இல்லாமல் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட ஒரு திரையரங்கு உரிமையாளரின் ஆன்மாவை,  அவரது தம்பி மகிழ்விக்க எடுக்கும் முயற்சியே நெவர் எஸ்கேப் என்கிற திரைப்படம்.

அந்த வகையில் திரையரங்குகளில் வெளியிடுவதற்காக எடுக்கப்படும் திரைப்படங்களில் இருந்து திரையரங்குகளை பற்றி சொல்லும் ஒரு படமாக இந்த படம் வெளியாகி இருக்கிறது.

ஒரு பர்த்டே பார்ட்டியில் மது அருந்திவிட்டு ஆட்டம் போட்டு விட்டு போலீசிடம் மாட்டிக் கொள்வோமே என்கிற  பயத்தில் வண்டியை அப்படியே விட்டுவிட்டு ஒரு பாழடைந்த திரையரங்கிற்குள் மாட்டிக் கொள்ளும் ஏழு நண்பர்கள், அந்த திரையரங்கிற்குள் நடக்கும் மர்மமான நடவடிக்கைகளில் இருந்து மீண்டு வருகிறார்களா அல்லது அங்கேயே மாட்டிக் கொள்கிறார்களா ? என்பதே படம்.

சைக்கோ கொலையாளியாக நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் மிகவும் இயல்பாக பயமுறுத்தும் மொட்டை தலை கெட் அப்பில் வந்து மிரட்டி இருக்கிறார்.

ஆதி பிரிதிவி, ஹர்ஷினி, ஜெபின் ஜான்,  அகிலா சுந்தர்,  ராஜி, உலில் தான் மற்றும் கவி ஜெ சுந்தரம் அனைவருமே பயத்தில் ஓடுவதிலிருந்து நண்பர்களை ஒவ்வொருவராக  இழக்கும் பொழுது உறைந்து போவது வரை நிறைவாக நடித்திருக்கிறார்கள். சோழன் முத்துவாக வரும் கவி ஜெ சுந்தரத்தை சக நண்பர்கள் சி எம் சி எம் என்று அழைத்து திட்டுவதும் கலாய்ப்பதும் சுவராசியமாக அமைந்திருக்கின்றது.

ஹரிஷ் ஆக வரும் ஆதி பிரிதிவி, ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்டு டிக்கெட் வரிசைகளை யோசித்துப் பார்த்து, சைக்கோ கொலையாளியை கொன்று, இறுதியாக தன் காதலியை தப்ப வைப்பது புத்திசாலித்தனமாக அமைந்திருக்கிறது.

தயாரிப்பாளர் ஆல்பர்ட் ரஞ்சன் ஒரு அதிரடி காவல் துறை அதிகாரியாக வந்து சண்டை போடுகிறார் ஆனால் சைக்கோ கொலையாரிடம் மாட்டிக் கொண்டு உயிரையும் இழந்து விடுகிறார்.

தொழில்நுட்ப ரீதியாக இசையமைப்பாளர்  சரண் குமார் அட்டகாசமாக பின்னணி இசை அமைத்திருக்கிறார்.  இரண்டாவது பாதியில் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் வரும் பாடல் இவரை நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும்.

இந்த திகில் படத்திற்கு,  சந்தோஷ் குமார் எஸ் ஜெ யின் ஒளிப்பதிவு நன்றாக கை கொடுத்திருக்கிறது.

திரையரங்கு சார்ந்த ஒரு அற்புதமான ஒரு வரி கதையை யோசித்த இயக்குனர் டி ஸ்ரீ அரவிந்த் தேவராஜ், திரைக்கதை அமைப்பதிலும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், நெவர் எஸ்கேப், ரசிகர்களின் மனங்களிலிருந்து நெவர் எஸ்கேப் ஆகாமல் இருந்திருக்கலாம்.