வல்லவன் வகுத்ததடா

mysixer rating 4/5

287

a K.Vijay Anandh review

தர்மம் என்றும் நிலையானது மற்றும் ஒரே மாதிரியானது, அதர்மங்கள் அவ்வப்போது காணாமல் போய்விடுபவை அல்லது பலவேறாக இருப்பவை. அதேபோலத்தான் சாண்ட்விச் என்று எடுத்துக்கொண்டால் இருபுறமும் இருக்கும் பிரட் நிலையானது உள்ளே வைக்கப்படும் ஸ்டஃப் வெவ்வேறானதாக இருக்கும். அப்பாவிடம் சாண்ட்விச் கடை போட வாங்கின காசில் படம் எடுத்ததாலோ என்னவோ, தர்மம் என்கிற பிரட் துண்டுகளுக்குள் அதர்மங்கள் என்கிற ஸ்டஃபை வைத்து அற்புதமான படமாக வல்லவன் வகுத்ததடா வை கொடுத்திருக்கிறார் இயக்கு நர் விநாயக் துரை.

தர்மப்படி நடக்கும் சுவாதி மீனாட்சி ஒரு புறம் திருட்டுகள் செய்தாலும் அதிலும் தர்மப்படி நடந்து கொள்ளும் சிரஞ்சீவியாக தேஜ் சரண்ராஜ் இன்னொரு புறம் இவர்களிருவருக்கிடையில், அதர்மங்களின் உச்சமாக பணம் மட்டுமே பிரதானமாக கொண்டு வேலைபார்க்கும் இன்ஸ்பெக்டர் நீதிமணியாக ராஜேஷ் பாலசந்திரன், வட்டிக்கு பணம் கொடுத்து குறித்த நேரத்திற்கும் திருப்பித்தரவில்லையென்றால் அவர்களின் உடல் உறுப்புகளை விற்றுவிடும் கொடூர குபேரனாக ஆதித்யா, ஒரே டயாக்கை ஊரில் உள்ள அத்தனை ஆண்களிடம் சொல்லி காதலித்து ஏமாற்றும் அகல்யாவாக அனன்யா மணி, திருடின பணத்தில்  பங்கு குறையும்  என்பதற்காக  நண்பனையே போட்டுத்தள்ளும் சக்ரவர்த்தியாக ரெஜின் ரோஸ் என்று மிகவும் யதார்த்தமான கதாபாத்திரங்களை வைத்து ஒரு வலுவான திரைக்கதை அமைத்து சுவையான சாண்ட்விச்சாக வல்லவன் வகுத்ததடா வை கொடுத்திருக்கிறார் விநாயக் துரை.

சிரஞ்சீவியாக நடித்திருக்கும் தேஜ் சரண்ராஜிற்கு அவரது பெயர்க்காரணம் அற்புதம், கிளைமாக்ஸில் அது இன்னும் கொஞ்சம் சிறப்பாகவே வேலையும் செய்கிறது.

பலரை காதலித்து ஏமாற்றி ஒருத்தனுடன் செட்டிலாகிவிடலாம் என்று கொலை கூட செய்யும் அனன்யா மணி அந்த கதாபாத்திரக்கேற்ற பொருத்தமான தேர்வு என்று சொல்லத்தக்க வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

குறிப்பாக இன்ஸ்பெக்டர் நீதிமணியாக வரும் ராஜேஷ் பாலசந்திரன் அவ்வப்போது கழுதைப்புலி போன்று சிரிப்பதும்,  பின்பு அவர் வரும் காட்சிகளில் அவரே சிரிக்க மறந்தாலும் படம் பார்க்கும் ரசிகர்கள் அந்த சத்தத்தை எழுப்புவதும் சுவராஸ்யம்.

அதர்மம் அத்தனை வசதிவாய்ப்புகளையும் கொடுக்கலாம், ஆனால் கடைசியில் கைவிட்டுவிடும் அல்லது அற்ப ஆயுசுடன் மேலே அனுப்பிவிடும்.

தர்மம் கஷ்டங்களை கொடுக்கும் ஆனால், ஒரு நிலையான நிம்மதியான வாழ்க்கையை கொடுக்காமல் விட்டுவிடாது என்கிற கருத்தை மிக மிக அருமையாக விதைத்த விதத்தில் அதுவும் பெரிய நடிகர்களே முழுக்க முழுக்க வணிக வெற்றி என்பதற்காக போதை, கடத்தல், பழிவாங்குதல் என்று போய்விட்ட நிலையில், ஒரு அறிமுக இயக்கு நராக மிகவும் பெறுப்பாக அதைவிட அதிகமாக தர்மப்படி வல்லவன் வகுத்ததடாவை இயக்கியிருக்கிறார் விநாயக் துரை.

வல்லவன் வகுத்ததடா மற்றும் விநாயக் துரை – தமிழ் சினிமாவின் நம்பிக்கை !