a K.Vijay Anandh review
வழக்கமான ஒரு கிரைம் இன்வெஸ்டிகேசன் திரில்லர் கதை தான். ஆனால், குற்றச்செயல்களில் ஈடுபடாமல் நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் அப்பாவிகளை விடுவிப்பது அதற்காக கிமினாலஜி படித்த மாணவர்கள் சேர்ந்து பைண்டர் என்கிற அமைப்பை ஆரம்பிப்பது என்கிற ஐடியா மிகவும் புதிது.
விரும்பியோ விரும்பாமலோ தங்களது குடும்ப வறுமைக்காக செய்யாத தவறுகளை ஏற்றுக்கொண்டு சிறைக்குள் தங்களது வாழ்க்கையை வீணாக்கிவிடும் அப்பாவிகள் உலகம் முழுவதும் ஏராளமாகவே இருக்கின்றனர்.
அப்படி ஒரு அப்பாவி மீனவர் பீட்டராக சார்லி, இந்தப்படத்தில் அதிகம் பேசாமலேயே அழுத்தமான முத்திரை பதித்திருக்கிறார். மருமகன் சென்றாயன் மூலமாக குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் பணப்பிரச்சினையை தீர்க்க சென்றாயன் சொல்வதை கேட்டு அவர் போலீசிடம் நடித்து காட்டும் போது கூடவே ஒரு அப்பாவியாக நடித்து காட்டுவது நிஜமாகவே வேற லெவல். நிஜமாகவே அந்த கொலைக்கு உடந்தையாக செயல்பட்டிருக்க அழைத்திருந்தால் நிச்சயம் மறுத்திருப்பார். ஆனால், அதன் விபரீதம் புரியாதவராக நடித்து காட்டுவது, ஏதோ ஒரு பந்தயத்தில் இப்படித்தான் ஜெயிச்சோம் என்று விவரிக்கும் ஒரு குழந்தையை போல இருந்தது, சார்லி அப்படி நடித்திருக்கிறார்.
சென்றாயன் வழக்கம் போல, கேஸ் வாங்கிட்டு உள்ளே போகும் கதாபாத்திரத்தில் அப்பட்டமாக பொருந்திப்போகிறார்.
சார்லியின் மகள் ரூபியாக இந்த சம்பவத்தை பைண்டர் அமைப்பிடம் எடுத்துச்செல்வதிலிருந்து இறுதிக்காட்சிகள் வரை பிரணா சிறப்பாக நடித்திருக்கிறார்.
மூத்த கிரிமினாலஜி மாணவர் – சீனியர் கிரிமினலாஜி லாயர் என்று நிழல்கள் ரவி கம்பீரமாக வந்துபோகிறார். அப்புறம் உன் பெயர் பார் கவுன்சிலில் இருக்காது என்று தவறு செய்யும் ஜூனியர் வக்கீல் ஒருவரை மிரட்டுவது மிகவும் யதார்த்தம்.
தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் ஆறடி உயர வில்லனாக- தமிழ் சினிமாவிற்கு இன்னொரு நாசர் இந்தப்படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். தன் குல வழக்கப்படி தன் தந்தையை புதைத்து மாட்டிக்கொள்கிறார்.
இன்றைய இயக்குநர்கள் எடுக்க வேண்டிய புத்திசாலித்தனமான முடிவு, ஆம்., அவர்கள் தாங்கள் எழுதும் கதைகளின் கதா நாயகர்களாக நடிக்க தயாராக இருக்கவேண்டும். அதனை துணிச்சலுடன் எடுத்து அற்புதமாக அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்திருக்கிறார் வினோத் ராஜேந்திரன்.
Finder பெயரை விட்டுவிடாதீர்கள், தொடர்ந்து சிக்கலான வழக்குகளை எடுத்து இதே போல நல்ல திரைக்கதை அமைத்து சிறப்பான நடிகர்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து படம் கொடுங்கள்.
Finder , at last the crew found their destination !