Mr House Keeping

mysixer rating 4.5/5

171

a K Vijay Anandh review

திருமணமே செய்யாமல் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது, ஆண் துணை  இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்வது என்கிற சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் உதவாத, இங்கொன்றும் அங்கொன்றுமாக சிலரால் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கும், தோற்றுப்போன மேற்கத்திய சித்தாந்தங்களை இன்றைய தலைமுறை மத்தியில் பொதுப்படையாக ஆக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், 2 K கிட்ஸ் மட்டுமல்ல, 3 K , 4 K என்று எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒரு காதல் ஒரு திருமணம் என்பதுதான் எங்களுக்கு பிடிக்கும் அதுதான் நமது கலாச்சாரம் என்று பொட்டில் அறைந்தது போல சொல்லி இருக்கிறார், இயக்குனர் அருண் ரவிச்சந்திரன்.

வெளியில் சென்று விளையாடவும் மறந்து கேட்ஜெட்ஸ் எனப்படும் மொபைல் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களுக்குள் மூழ்கி போய் கிடக்கும் இன்றைய தலைமுறை குழந்தைகள் சிறுவர்கள் இளைஞர்கள், தாங்கள் சாப்பிடும் உணவு எப்படி தயாராகிறது, நாம் பயன்படுத்தும் தட்டுகளை யார் திரும்பத் திரும்ப கழுவி வைப்பது, நாம் கழட்டிப் போடும் ஆடைகளை யார் திரும்பத் திரும்ப துவைத்து தயாராக வைப்பது என்பது தெரியாமலே இருப்பது துரதிஷ்டம். இது பணக்கார வீட்டு குழந்தைகளுக்கு மட்டுமல்ல நமது நாட்டில் பெரும்பான்மையாக வாழும் நடுத்தர குடும்பங்களின் குழந்தைகளுக்கும் பொருந்தும் என்றால் மிகை ஆகாது. அந்த வகையில் ஒரு இளைஞன் அதுவும் 2 K கிட்ஸ்களின் பிரதிநிதியாக, ஒரு இளைஞன் சமையலறைக்குள் புகுந்து விதவிதமாக சமைப்பதாகட்டும், தன் வீட்டில் உட்கார்ந்த இடத்திலிருந்து சாப்பிட்டு கை கழுவும் நிலையில் இருந்தாலும் இன்னொருவர் வீட்டில் சென்று பாத்திரங்கள் கழுவுவது முதல் பாத்ரூம் கிளீன் பண்ணுவது வரை பல வேலைகளை செய்வதாகட்டும் நிச்சயம் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கும் பெரும்பாலான நடுத்தர வர்க்க குழந்தைகளுக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக இந்த படத்தில் கதாநாயகன் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வை சண்முகி படத்தில் தான் படத்தின் மையக்கதாநாயகன் வீட்டு வேலைகள் செய்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும், அதையொத்த அற்புதமான கதாபாத்திர வடிவமைப்பாக இந்த படத்தில் ஹானஸ்ட் ராஜ் கதாபாத்திரம் அமைக்கப்பட்டு இருப்பது சிறப்பு. அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரிபாஸ்கர் அவரது கல்லூரி காலம் முதல் ஒரு வழியாக பொறுப்பு வந்து செட்டில் ஆகும் காலம் வரை நடுவில் தன் காதலை வெளிப்படுத்தும் இடங்களிலும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அறிமுகப்படத்திலேயே இவ்வளவு  பெரிய சுமையை அவர் மீது நம்பிக்கைவைத்து ஏற்றி வைத்த இயக்குனரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறார் என்பது மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கும் பிடித்த நாயகனாக வலம் வரப்போவது உறுதி.

லாஸ்லியா, வெளிநாட்டில் வசிக்கும் பெற்றோர்கள் ஐடி கம்பெனியில் வேலை கைநிறைய சம்பளம் தனியாக வசித்தாலும் ஆடம்பரமான வில்லா வாழ்க்கை, அதற்கே உரித்தான ஒரு திமிர், எதார்த்தத்தை புரிந்து கொள்ளாத இன்றைய தலைமுறை இளம் பெண்ணாக மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார்.

ரயான், பொதுவாக இது போன்ற பாத்திரப்படைப்புகளில் இவர் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்தின் மீது ஒரு வெறுப்பு வரவழைத்து பின்பு நாயகி நாயகனுடன் சேர்வது போல, காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இதில் லிவிங் டுகெதர் மற்றும் டேட்டிங் என்று கதாநாயகியும் ஏற்றுக்கொள்ளும் ஒரு வாழ்க்கை முறைக்குள் அவரை வைத்து அவரை ஒரு சூழ்நிலை கைதியாக மட்டுமே காண்பித்து, நாயகி அவரை விட்டு விலகிச் செல்வதாக அமைக்கப்பட்டு இருக்கும் விதம் அருமை.

இளவரசு உள்ளிட்ட மூத்த நடிகர்களின் பங்களிப்பை குறிப்பிட்டே ஆக வேண்டும். மிகவும் சிறப்பாக வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். அதிலும் நாயகனின் தங்கையாக வரும் கதாபாத்திரமும்,அந்த இளம் வயதிலும் அவருக்குள், அந்த கதாபாத்திரத்திற்குள் இருக்கும் ஒரு அறிவு முதிர்ச்சியும் வியக்க வைக்கிறது.

சாரா உள்ளிட்ட நண்பர்கள், சிறப்பாக நடத்தி இருக்கின்றார்கள்.

இசையமைப்பாளர் ஓசோ வெங்கட் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பு ஆக்குவது இவரது பின்னணி இசையும் இவரது இசையில் அமைந்த பாடல்களும் என்றால் மிகையாகாது.

தமிழ்த்திரையுலகில் அவ்வப்போது படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருமே ஜெயிக்கும் அளவிற்கு ஒரு படம் வரும்.

அப்படிப்பட்ட ஒரு படமாக மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் வெளிவந்திருக்கிறது. பெரிய படங்கள் வெளியான நிலையில் பல வருடங்கள் தாமதமாக வெளிவந்தாலும் கடந்த வாரம் மதகஜராஜா எப்படி வணிக ரீதியாக பெரிய வெற்றி பெற்றதோ, அதைப்போலவே குடும்பஸ்தன், பாட்டல் ராதா என்று வெளியாகி இருக்கும் சிறந்த படங்கள் மத்தியில் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்திற்கும் வணிகர் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைக்கும்.

மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங், குடும்பத்துடன்  குறிப்பாக குழந்தைகளுடன் பார்த்து மகிழ வேண்டிய ஒரு படம் !