மாமன்

mysixer rating 4/5

193

a K Vijay Anandh review

நமது கலாச்சாரத்தின் ஆணிவேரே உறவுகள், அதிலும் தாய்மாமனுக்கு என்று சிறப்பான தனி இடம் உண்டு. அப்படி ஒரு அன்பான தாய்மாமனாக மாமன் படத்தில் அற்புதமாக  நடித்திருக்கிறார் சூரி.

நாயகனாக நடிக்க ஆரம்பித்த சூரிக்கு  இந்தப்படம் ஒரு முழுமையான ஜனரஞ்சக அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு மாஸ் ஹீரோ அந்தஸ்தை கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. அப்படி ஒரு இடத்தைப்பிடிக்க பெருமான்மையான ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு இடதுசாரி படைப்பாளிகளிடம் இருந்து விடுதலை கிடைக்க வேண்டும், சூரிக்கு கிடைத்திருக்கிறது.

அம்மா, அக்கா, அத்தான், தாத்தா, பாட்டி, அத்தை மற்றும் நண்பர்கள் என்று ஒருவன் அத்தனை பேரையும் தூக்கிக் கொண்டாட வேண்டும். அப்படிப்பட்டவனே நம்மூரில் கதாநாயகன். இதில், சூரி அம்மா கீதா கைலாசம், அக்கா சுவாசிகா, அக்கா கணவர் பாபா பாஸ்கர், தாத்தா ராஜ்கிரண்,  பாட்டி விஜி சந்திரசேகர் என்று ஒவ்வொருவரையும் கொண்டாடித்தீர்க்கிறார்.  உறவுகளைக் கொண்டாடுபவன் குறிப்பாக உடன்பிறந்தவளைக் கொண்டாடுபவனிடம்  காதல் வயப்படுவது இயற்கைதானே.டாக்டர் ஐஸ்வர்யா லட்சுமி, சூரியை காதலிக்க, அந்த, பால சரவணனின்  நர்ஸ் ஜோக் வெடிச்சிரிப்பை வரவழைக்கும்.

சூரி தவமாய் தவமிருந்து  மருமகன் பிறக்கிறான். அந்த மருமகன் மீது சூரி வைத்திருக்கும் அதீத அன்பே அவரக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கும் இடையில் பிளவை உண்டாக்க, பின் சுபமாக முடிந்ததா என்பதே மாமன் படம்.

படம் ஆரம்பிக்கும் போது, ஒரு சண்டைக்காட்சி, குழந்தைகளின் அன்பைப்பெறுதல் என்று  ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் பார்முலாவை கச்சிதமாக பிடித்துக்கொள்கிறார் சூரி.  ஓபனிங் சாங்கை அடுத்த படத்தில் எதிர்பார்க்கலாம். ஐஸ்வர்யா லட்சுமியுடனான ரொமான்ஸில் கமல்ஹாசனையும் விட்டுவைக்கவில்லை.  சூரி, நிறைவாக பெயர் வாங்கிவிடுகிறார்.

ஐஸ்வர்யா லட்சுமி, படத்திற்கு படம் சிறப்பான கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுக்கிறாரா அல்லது அவருக்காகவே அமைகிறதா என்று தெரியவில்லை. இதில்,  மிகச்சிறப்பாக நடித்து பெயர் வாங்கிவிடுகிறார்.

கெத்து படத்திற்கு பிறகு ஒரு கெத்தான அக்கா கதாபாத்திரத்தில் சுவாசிகா, வெளுத்துக்கட்டியிருக்கிறார். புள்ளைப்பூச்சி போன்ற கணவர் கதாபாத்திரத்தில் பாபா பாஸ்கரும் முத்திரை பதித்திருக்கிறார்.

மாஸ்டர் பிரகீத் சிவனுக்கு, நிச்சயம் சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது உறுதி. கன்னத்தை கடித்து சாப்பிட்டுவிடலாம் என்பது போன்ற கதாபாத்திரம், ஆம், அனைவரும் அவரை லட்டு என்று தான் செல்லமாக அழைக்கிறார்கள்.

சந்தானமென்றால், கெஸ்ட் ரோலில் ஆர்யா, ஆர்யா என்றால் கெஸ்ட் ரோலில் ஜீவா அப்படியானால் சூரி என்றால் கெஸ்ட் ரோலில் விமல் தானே பொருத்தமாக இருப்பார். இதிலும் பொருத்தமாக வந்துபோகிறார்.

ராஜ்கிரண் – விஜி சந்திரசேகருக்கு ஒரு தனி டிராக், பெரும்பாலும் நமது சினிமாக்களில் காமெடிக்கென்று தனி டிராக் இருக்கும். இதில், கணவன் மனைவி எப்படி இணைபிரியாமல் வாழவேண்டும் என்று சூரி – ஐஸ்வர்யா லட்சுமிக்கும் , படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் பாடம் எடுப்பதற்காக புத்திசாலித்தனமாக அதே நேரம் மிகவும் சரியாக அந்த டிராக்கை அமைத்திருக்கிறார் இயக்குநர்  பிரஷாந்த் பாண்டியராஜ். திருச்சியை கதைக்களமாக அமைத்துவிட்டாலே மனிதர், சிறப்பான படங்களை கொடுத்துவிடுவார் போலும்.

தனக்கான கதைகளை ஒரு நாயகன் எழுத ஆரம்பிக்கும் பொழுது, அவன் நிச்சயம் விஸ்வரூபம் எடுப்பான் திரையுலகில். சூரி, கச்சிதமாக ஆரம்பித்திருக்கிறார். தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு, ஹேஷம் அப்துல் வஹாப்பின் இசை என்று படத்திற்கு வலுசேர்த்திருக்கிறார்கள்.

ஏற்கனவே சிங்கிள் சைல்ட் ஆகிவிட்ட  ஒரு தலைமுறையினருக்கு பிறக்கும் அடுத்த தலைமுறைகள் மாமன், அத்தை, சித்தப்பா, பெரியப்பா என்கிற உறவுகளுக்கு அர்த்தமே தெரியாமல் – அப்படினா யார் என்றே தெரியாமல் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தேடும் உறவாகவும், தாய்மாமன் இருக்கும் தலைமுறை கொண்டாடும் படமாகவும் மாமன் படம் இருக்கும் !