அந்த 7 நாட்கள்

mysixer rating 4.5/5

395

a K. Vijay Anandh review

எஸ் பி பி மீது தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸுக்கும் இயக்குநர் சுந்தருக்கும் என்ன காதலோ..! இளையராஜா மீது இருவருக்கும் என்ன மரியாதையோ..! இளையராஜாவின் இசையில் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய  வா வெண்ணிலாவே… பாடலை இளையராஜாவிடம் முறைப்படி அனுமதி கேட்டு , இந்தப்படத்தில் ஆங்காங்கே ஒலிக்க விட்டிருக்கிறார்கள்.

படம் இன்று எஸ் பி பியின் நினைவு நாளில் அவருக்கு புகழாஞ்சலி செலுத்தும் விதமாக வெளியாகிறது.

ஏன் ..? எதற்கு..? என்பதை படம் பார்க்கும் போது அறிவீர்கள்.

முன்னதாக, 16 வயதினிலே பரட்டையாக  ஜீவா தங்கவேலும் சப்பாணியாக விஷ்ணு பிரியனும் சேர்ந்து  அந்த 7 நாட்களுக்கு செய்திருக்கும் புரமோ அதகளம்.  அதிலும், “ கிராமத்துல இருக்கிறது முக்கியமில்லை… இன்ஸ்டாகிராமத்துல இருக்கனும்..” என்று சப்பாணி விஷ்ணு பிரியன் பேச , அட இவர்கள் ஏதோ முடிவோடுதான் வந்திருக்கிறார்கள் என்பது புரிந்து விடுகிறது.

அடுத்ததாக, ஆதரவற்ற தெரு நாய்கள் மீது தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்காட்டும் பரிவுடன் படம் தொடங்குகிறது. கதையை லைட்டா தூவிவிட்டுவிட்டு படத்தை ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.

படத்திற்கு வருவோம்…

நீண்ட நாட்களுக்கு பிறகு, அழகான ஒரு கதாபாத்திர வடிவமைப்பு., நாயகன் அஸ்ட்ரோ பிசிக்ஸ் மாணவன், தொலை நோக்கியும் கையுமாக வலம் வருவது மிகவும் ரசிக்க முடிகிறது.  அஜிதேஜ், செம ஹேண்ட்ஸம், செம்ம துறுதுறு அட்டகாசமான நடிப்பு என்று அசத்திவிடுகிறார். அவரது, தொலை நோக்கி மூலமாக, நாயகியை பார்த்து காதல்வயப்படுவது நன்றாக இருக்கிறதென்றால், காதலின் பெயர் நிலாவாக இருப்பது அல்டிமேட்டாக இருக்கிறது. ஸ்ரீஸ்வேதா, இளம் வக்கீலாக வருகிறார். அவரது சீனியர் வக்கீல் சுபாஷினி கண்ணன் அலுவலகத்தில் நடக்கும் காட்சிகள், சுவராஸ்யத்தை அள்ளித்தெளித்து இருக்கின்றன. அதிலும் குறிப்பாக , என்கிட்ட மிரட்டல்லாம் வைச்சுக்காத… உன்னையே தூக்கி உள்ள வைச்சுருவேன் என்று காக்கிச்சட்டையை பார்த்து கருப்புச்சட்டை சுபாஷிணி பேசும் இடம் மாஸ்.

மகனுக்கு மந்திரி கே பாக்யராஜ் வீட்டுல சம்பந்தம் வைச்சுக்கிட்டு அரசியலில் அடுத்த கட்டம் போகலாம் என்கிற திட்டத்தில் , நாயகனின் தந்தை நமோ நாராயண் ஒருபுறம். எவன் காதலிச்சாலும் வெட்டுவேன் என்கிற கொள்கையுடன் வீராப்பாய் திரியும் காக்கிச்சட்டை, நாயகியின் அப்பா மறுபுறம்.

அப்படிப்பட்ட ஒருவரின் மகனுக்கும், அபடிப்பட்ட ஒருவரின் மகளுக்கும் காதல் வருவதுதானே இயற்கை!

இதற்கு நடுவில்,  தொலை நோக்கி வைத்திருக்கும் நாயகனுக்கு சில தொலை நோக்கு சம்பவங்களும் கண்முன் வருகிறது. அடுத்த 7 நாட்களில் காதலி செத்துவிடுவாள் என்று தெரிகிறது.

அந்த அடுத்த 7 நாட்கள் தான் அந்த 7 நாட்கள் படத்தின் விறுவிறுப்பான இரண்டாவது பாகம்.

அஜிதேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா , அறிமுகம் என்றே சொல்லமுடியாத அளவிற்கு அற்புதமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, ரேபிஸ் கிருமியால் பாதிக்கப்படும்  நாயகி, கடைசி 2 நாட்களில் படும் அவஸ்தைகள் பயமுறுத்தும் ரகம். அவரோடு சேர்ந்து அஜிதேஜும் மிரட்டியிருக்கிறார்.

திரில்லர் படங்களைத்தான் கண்சிமிட்டாமல் பார்க்கவேண்டும் என்கிற நிர்பந்தம் இருக்கும். ஆனால், மிக இயல்பாக நடைபெறும் இந்தப்படத்தையே கண்சிமிட்டாமல் பார்த்தால் தான் சம்பவங்கள் ஏன் எதற்கு என்பது புரியும்.

தெரு நாய்களும் வேண்டும் அவற்றை முறையான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தி பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டும். அதைவிட அதிகமாக நமது குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

தொலை நோக்கி,  தொலை நோக்கு குறித்தான 300 வருடத்திற்கு முந்தைய பிளாஷ்பேக் காட்சியும் அருமை.

நாய்க்கடிக்கான  சிகிச்சைக்கு நம்மூர் ஆயுர்வேத சித்த மருத்துவ முறைகளையும் ஆரம்பத்திலேயே பயன் படுத்தி பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற ஒரு விழிப்புணர்வு தேவை. அதற்கான ஆராய்ச்சி மற்றும் முடிவுகள் அரசு மற்றும் இந்திய மருத்துவ குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.  ஏனென்றால் 140 கோடி மக்கள் இருக்கும் நம் நாட்டில் , 14 கோடி தெரு நாய்கள் இருக்கக்கூடும், அவற்றிற்கும் வாழ உரிமை இருக்கிறது, அவற்றிலிருந்து காத்துக்கொள்ள நமக்கு வழிமுறைகள் தேவையாய் இருக்கிறது!

திரைக்கதை மன்னன் கே பாக்யாரஜின் கிளாசிக் ஹிட்டான அந்த அந்த 7 நாட்களுக்கு எந்தவிதமான சிறுமையும் வந்துவிடாத அளவிற்கு இந்த அந்த 7 நாட்களை கொடுத்திருக்கும் இயக்குநர் சுந்தர் மற்றும் அணியினருக்கு பாராட்டுகள்.

அந்த 7 நாட்கள், அடுத்த 7 நாட்களுக்கு சக்கைப்போடு போட தகுதியான படைப்பு !