a K. Vijay Anandh review
பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவியை சீரழித்தபோதே போட்டுத் தள்ளி இருந்தால் பல பெண்களை இவனிடம் இருந்து காப்பாற்றி இருக்கலாம்.
என்னதான் ஐபிஎஸ் ஐஏஎஸ் ஜட்ஜஸ் என்று இருந்தாலும், அரசியல்வாதிகளின் அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டு நீதியை நிலை நாட்ட வேண்டிய மேற்கண்ட அரசு இயந்திரங்களின் கைகள் கட்டப்பட்டு விடுகின்றன.
ஆட்டைக் கடித்து மாட்டை கடித்து கடைசியில் நேர்மையான காவல்துறை அதிகாரி நட்டியின் மகளை கடித்து குதறிவிட்ட பிறகு, இனியும் காத்திருப்பதில் என்ன பயன்…?
தனது தந்தை முதலமைச்சராக ஆகப் போகிறார் என்பதற்காக தானே, அவன் அந்த ஆட்டம் ஆடியிருக்கிறான். கடைசியில், அவனையும் , முதலமைச்சரது மகன் என்கிற அவனது திமிருக்கு காரணமான அவனது அப்பாவையும் வெடிவைத்து தகர்ப்பது தான் ரைட்டான கிளைமாக்ஸ் ஆக இருக்க முடியும். அதுதான் இந்த படத்தின் தலைப்பு, ரைட்.
நேர்மையான காவல்துறை அதிகாரியாக நட்டி, மிடுக்கான அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல் மொழி, அத்துடன் மகளை பறிகொடுத்து விட்டு துயரப்படும் காட்சிகளில் மற்றவர்களையும் அழ வைத்து விடுகிறார்.
அவரது, மகளாக யுவினா பார்தவி, குழந்தை நட்சத்திரமாக இருந்து நாயகியாக புரமோஷன் ஆகி இருக்கிறார். ஜென் இசட் நாயகி என்றாலும், பெற்றோர்களது அன்புக்கு ஏங்கும் ஒழுக்கமான நாயகியாக வசீகரித்து இருக்கிறார்.
அவரை காதலிப்பவராக வரும் ஆதித்யா சிவகுமார், ஜெய் என்கிற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
படத்தின் இளம் ஜோடிகளான இருவரையும், ஒழுக்க சீலர்களாக காட்டி இருப்பது, வரவேற்கத்தக்க ஒன்று.
இவரது தந்தையாக அருண்பாண்டியன், இந்திய ராணுவத்தில் வெடிகுண்டு அகற்றும் நிபுணராக பணியாற்றி விட்டு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வரும், சராசரியான ஒரு கதாபாத்திரம். ஒரே மகனை காணவில்லை என்கிற தவிப்பை, நமக்கும் கடத்தி விடுகிறார். அவரது வித்தியாசமான வசன உச்சரிப்புகள் மற்றும் நேர்த்தியான உடல் மொழிகள் எப்பொழுதும் போல ரசிகர்களை திருப்திப்படுத்தும்.
அக்ஷரா ரவி, தனது கல்யாண வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், துரதிஷ்டவசமாக காவல் நிலையத்திற்குள் சிக்கிக்கொண்டாலும், தனது கடமையை கச்சிதமாக நிறைவேற்றும் காவல்துறை அதிகாரியாக பாராட்டு பெறுகிறார்.
படத்தில், மூணாறு ரமேஷ் உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் சிறப்பாக நடித்திருந்தாலும், நீதிபதியாக வந்து கண்டிப்பும் கலகலப்புமாக காட்சிகளை விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவி இருக்கிறார் வினோதினி வைத்தியநாதன்.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை, காவல் நிலையத்திற்குள் சிக்கவைத்து, அவர்களை வெடிகுண்டு வைத்து, தகர்ப்பது தான் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.
பெரும்பாலும் காவல் நிலையத்திற்கு உள்ளாகவே நடக்கும் காட்சிகள் தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.
கிளைமாக்ஸ் காட்சியில் வைத்திருக்கும் ட்விஸ்ட்டும் ரசிக்கத் தக்கதாக அமைந்திருக்கிறது.
Right, ரைட் ரைட் என்று சொல்ல வைத்திருக்கிறார் இயக்குனர் சுப்பிரமணியன் ரமேஷ் குமார்.