a K Vijay Anandh review
எழுத்தாளர்களிடமிருந்து அவர்களது சிந்தனைகளை சினிமாவுக்கு கொண்டு வரும் பொழுது, சினிமாத்தனம் இல்லாத சினிமாக்களை கொடுக்க முடியும் என்பதற்கு அங்கம்மாள் இன்னொரு எடுத்துக்காட்டு.
பெருமாள் முருகனின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், நமது தெற்கத்தி மக்களின் வாழ்வியலை கவிதை போல சொல்லியிருக்கின்றது.
எனது தட்டு , என் உணவு என்கிற கோஷத்தை கேள்விப்பட்டிருப்போம். அதைப்போல எனது அங்கம், எனது உடை என்று தனக்கென்று, ஒரு உடை அலங்காரத்தை பின்பற்றிக் கொண்டிருக்கும் அங்கம்மாள், வலுக்கட்டாயமாக ஜாக்கெட் போட நிர்பந்திக்கப்படுகிறார்.
ஜாக்கெட் போடுகிறாரா ? இல்லையா ? என்பதுதான் முழு படமும்.
காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும், என்கிற வார்த்தைகளே அபத்தமானது என்று தோன்றுகிறது. தாத்தா , மகன் , பேரன் என்று எக்காலத்திலும் அரசியல் மாற்றங்களை விரும்பாமல் அவஸ்தை பட்டுக் கொண்டிருக்கும் சமூகம், சமூகத்தின் ஒரு அங்கமான ஒரு குடும்பம், அந்த குடும்பத்தில் அங்கமான ஒரு உறுப்பினர் – இந்த படத்தில் அங்கமாளின் மகன் பவள முத்துவாக நடித்திருக்கும் சரண் சக்தி , தனது தாயை மட்டும் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏன் ? என்கிற கேள்வி எழுகிறது.
கையில் சுருட்டும், டிவிஎஸ் சேம்பு மாக ஒரு சுதந்திர கிராம க்குயில் போல் பறந்து கொண்டிருக்கும் அங்கம்மாளுக்கு அறிவுரைகளோ, உடைமாற்றங்களோ தேவையில்லை தானே!
அதுவும், அவர் காதலிக்கும் ஜாஸ்மின் ஆக நடித்திருக்கும் முல்லையரசிக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் என்பதாக சொல்கிறார்.
ஜாக்கெட் பிரச்சினை ஒரு பக்கம் என்றாலும், தெற்கத்தியில் வாழும் படித்த ஹிந்து குடும்பங்கள் எப்படி கிறிஸ்துவ மத பெண்களை காதலித்து அவர்களுக்காக தங்கள் குடும்பம் மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறது என்கிற மெல்லிய மத அரசியலும் படைப்பாளிகளை அறியாமல் படத்திற்குள் இழையோடி இருக்கிறது.
சரண் சக்தி, கிராமத்திலிருந்து மருத்துவம் படித்திருக்கும் இளைஞனாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
அவரது அண்ணனாக வரும் பரணி, அவர் கிணற்று மேட்டில் பம்ப் செட்டில் அமர்ந்து அப்படி இனிமையாக நாதஸ்வரம் வாசிப்பதை கேட்பதால்தான் அந்த வயல்கள் நன்றாக செழித்து வளர்கிறதோ என்கிற அளவிற்கு ஒரு கிராமிய நாதஸ்வர வித்வானாக, சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் தென்றலும், மாமியாருடனான வாக்குவாதங்களில் புயலாக மாறி சிறப்பாக நடித்திருக்கிறார்.
பரணியின் மகளாக நடித்திருக்கும் சிறுமியும் எதார்த்தமான நடிப்பால் கவர்ந்து விடுகிறார்.
ஒரு முடி உதிர்ந்தாலும் உயிரை விடும் கவரிமான் கேள்விப்பட்டிருக்கிறோம், ஒரே ஒரு முறை ஜாக்கெட் அணிந்த பிறகு அங்கமாளும் காணாமல் போகிறார்.
முகமது மக்பூல் மசூரின் இசையில் அமைந்த முத்தமிழின் பாடல் மற்றும் பின்னணி இசை அருமை. அஞ்சாய் சாமுவேலின் ஒளிப்பதிவும், பிரதீப் சங்கரின் எடிட்டிங் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன.
எழுத்தாளர்களை நம்பி களமிறங்கும் விபின் ராதாகிருஷ்ணன் போன்ற படைப்பாளிகள் திரை உலகிற்கு அதிகமாக தேவை.
அவர்களால்தான் மக்களின் வாழ்வியல்களை தொடர்ந்து பதிய வைத்துக் கொண்டிருக்க முடியும்.
குறிப்பாக அங்கமாளின் வீடு, மண் சுவற்றால் கட்டப்பட்ட அந்த அற்புதமான கட்டிடக்கலை நமது பொக்கிஷம்!
அங்கம்மாள், விருதுகளை மட்டுமல்ல ரசிகர்களையும் ஜெயிப்பாள்!